தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பு நினைவுகள்...அன்றிலிருந்து இன்றுவரை

3 mins read
eea39a04-0cfc-4c90-951c-d36739719d45
தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையைக் கண்ட தனிக்கொடியாள்-ராஜகோபால் இணையர். - படம்: ரவி சிங்காரம்

தேசிய தின அணிவகுப்புக்கான ஒத்திகையை ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று காணும் வாய்ப்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சியடைந்தனர் தனிக்கொடியாள்-ராஜகோபால் இணையர்.

“இவ்வாய்ப்புக்காக நான் எத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தேன் தெரியுமா? ஒவ்வோர் ஆண்டும் நுழைவுச்சீட்டுகள் கிடைக்காது. அதனால் சில சமயம் வெளியேயிருந்து பார்ப்பேன். சில சமயம் தொலைக்காட்சியில் பார்ப்பேன். அதனால் இம்முறை என் பேத்தி மூலம் நுழைவுச்சீட்டுகள் கிடைத்தது என் அதிர்‌ஷ்டம்,” என்றார் திருவாட்டி தனிக்கொடியாள், 73.

19 வயதில் திருமணம் செய்தபின் தேசிய தின அணிவகுப்பை நேரில் காண்பது இது அவருக்கு மூன்றாம் முறைதான். தம் பிள்ளைகள் சிறுவயதில் இருந்தபோது ஒரு முறை; காவல்துறையிலிருந்த மூத்த மகன் அணிவகுப்பில் பங்கேற்றபோது இரண்டாம் முறை. இதுவரை அவர் பாடாங்கில் நடந்த அணிவகுப்புகளை மட்டுமே கண்டுள்ளார்.

தேசிய தின அணிவகுப்பைக் கண்டது திருவாட்டி தனிக்கொடியாளுக்கு தானே அணிவகுப்பில் பங்கேற்ற பல மலரும் நினைவுகளையும் கொண்டுவந்துள்ளது.

“தொடக்கப்பள்ளியிலிருந்தபோது நான் தேசிய தின அணிவகுப்பின் பாடல் அங்கத்தில் பங்கேற்றேன். அப்போது சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோஃப் பின் இ‌‌‌ஷாக் அதிபராக இருந்தார். நான் சிலாட் பள்ளி வளாகத்திலிருந்த அரவிந்தர் தமிழ்ப் பள்ளியில் படித்தேன்.

“சிலாட் பள்ளியிலிருந்து வெவ்வேறு இனத்தவரை ‘மாஜுலா சிங்கப்பூர்’ பாடலைப் பாடத் தேர்ந்தெடுத்தார்கள். காலாங்கில் உள்ள மக்கள் கழகத்துக்குச் சென்று பயிற்சி செய்தோம். காவல்துறையின் இசைக்குழு இசை வாசித்தார்கள்,” என நினைவுகூர்ந்தார் திருவாட்டி தனிக்கொடியாள்.

தேசிய தின அணிவகுப்பன்று காலை 9 மணிக்கே ஆசிரியருடன் வந்திறங்கிய மாணவர்களுக்குப் பெரும் ஆச்சரியம்.

ஏனெனில், தேசிய தின அணிவகுப்புக்கு இங்கிலாந்தின் அரசி எலிசபெத் வந்திருந்தார்.

“இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எலிசபெத் ராணி சிங்கப்பூரின் தேசியக் கொடி நிறத்தில் உடை அணிந்திருந்தார். வெள்ளைப் பொட்டுப் பொட்டாய் இருந்த சிவப்பு நிற ஆடை, வெள்ளை நிறத் தொப்பி, காலணி, கையுறை அணிந்திருந்தார். அவரைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நாங்கள் அசையக்கூடாது; பேசவும்கூடாது; அப்படியே நின்றோம்,” என்றார் திருவாட்டி தனிக்கொடியாள்.

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படித்த திருவாட்டி தனிக்கொடியாள், அப்போது சக மாணவிகளுடன் தேசிய தின அணிவகுப்பின் நடன அங்கத்திலும் பங்கேற்றார்.

“ராணுவ வண்டி எங்களைப் பத்திரமாக அணிவகுப்புக்கு அழைத்துவந்தது. அதிலிருந்து இறங்கும்போது ராணுவத்தினர் கைகொடுத்துப் பத்திரமாகக் கீழே இறக்கிவிடுவார்கள். புதுமையான அனுபவமாக இருக்கும். எல்லோரும் கொண்டாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம்,” என்றார் திருவாட்டி தனிக்கொடியாள்.

“இப்போதோ பிள்ளைகள் குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளில் வந்திறங்குகிறார்கள்,” என ஒப்பிட்டார் அவர்.

நாட்டுப் பற்றுக்கு எல்லையில்லை

“சிங்கப்பூரில் பிறந்ததே எனக்குப் பெருமைக்குரிய வி‌‌ஷயம். மற்ற நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. இங்கோ நமக்கு உணவில் குறையில்லை. வீட்டு வசதி உள்ளது. சந்தோ‌‌ஷமாக உள்ளோம். இந்த வயதிலும் வீட்டில் முடங்காமல் என்னால் வேலைக்குச் செல்ல முடிகிறது.

“நான் பாசிர் ரிஸ்ஸில் தங்கியுள்ளதால் தேசியக் கொடியை ஏந்தியபடி ஹெலிகாப்டர்கள் பறப்பதை என் சன்னலிலிருந்து காண முடியும். அப்போது நான் கைதட்டிக்கொண்டு ஆரவாரத்துடன் பார்ப்பேன். புல்லரிக்கும்.

“சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடாக முன்னேறியுள்ளது. தேசிய தின அணிவகுப்பையே பாருங்கள் - மூலைக்கு மூலை சோதனை செய்கிறார்கள். அதுதான் எனக்கு சிங்கப்பூரில் பிடித்த வி‌‌ஷயம்,” என்றார் திருவாட்டி தனிக்கொடியாள்.

மாறிவரும் தேசிய தின அணிவகுப்புகள்

முதன்முதலில் தேசிய தின அணிவகுப்புகள் காலையில் தொடங்கியதால் காலை 9 மணியிலிருந்து கடும் வெயிலில் காத்திருந்த தருணங்களை நினைவுகூர்ந்த அவர், அணிவகுப்புகள் இப்போது பிற்பகலில் தொடங்குவது வரவேற்கத்தக்கது என்றார்.

“அப்பொழுதெல்லாம் தொலைபேசியில் கேமரா இல்லாததால் புகைப்படங்களை எடுக்கமுடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. மிதக்கும் மேடையில் நடந்த தேசிய தின அணிவகுப்புகளுக்கும் எனக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்ததே இல்லை,” என்றார் அவர்.

சிங்கப்பூருடன் இணைந்த பிறந்தநாள்

“என் மூத்த மருமகள் சுனிதா தேவி தேசிய தினத்தன்று பிறந்தவர். அதனால் நாங்கள் ஆண்டுதோறும் கேக்கில் சிங்கப்பூர் கொடி வைத்துதான் கொண்டாடுவோம். “பாருங்கள், நாடே உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது!” என்போம்,” என்றார் திருவாட்டி தனிக்கொடியாள்.

அவருடைய சின்னம்மா மகள் பரிமளா இவ்வாண்டு தமது 60வது பிறந்தநாளையும் கொண்டாடுவது மற்றொரு சிறப்பு.

குறிப்புச் சொற்கள்