ஐவரில் இருவர்க்கு நடைப்பயிற்சியே அதிக விருப்பம்

ஐவரில் இருவர்க்கு நடைப்பயிற்சியே அதிக விருப்பம்

1 of 2
படம்: ஏஷியாஒன்
படம்: ஹெல்த்எக்ஸ்சேஞ்ச்.எஸ்ஜி

29 Sep 2026 - 5:04 am

3 mins read

உடற்பயிற்சியைத் தொடங்குவதற்குக் கடினமான அல்லது அதிகத் திறன் தேவைப்படும் உடற்பயிற்சிகளைவிட நடைப்பயிற்சியே பெரும்பாலான சிங்கப்பூரர்களின் முதன்மைத் தேர்வாக உள்ளது என்று ஏஷியாஒன் ஊடகம் நடத்திய புதிய கருத்துக்தாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைப்பயிற்சியால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றம்

தமது அதிகப்படியான உடல் எடையால் படிக்கட்டில் ஏறுவது போன்ற எளிய செயல்களைச் செய்வதுகூட சிரமமாகிவிட்டதை உணர்ந்த 27 வயது ஜேமி லீ, தமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வது என முடிவுசெய்தார்.

உடல் எடையைக் குறைப்பதற்காக அவர் தேர்வுசெய்தது நடைப்பயிற்சியைத்தான். ஓடுவது அல்லது மிதிவண்டி ஓட்டுவதைவிட நடைப்பயிற்சியே அச்ச உணர்வை ஏற்படுத்தாத எளிய உடற்பயிற்சியாக அவருக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் நடைப்பயிற்சிதான் அவரால் சமாளிக்க முடிவதாகவும் இருந்தது.

நாள்தோறும் 30 நிமிடங்கள் எனத் தொடங்கிய நடைப்பயிற்சிமூலம் ஓராண்டில் அவர் கிட்டத்தட்ட 15 கிலோ எடையைக் குறைத்தார்.

நாள் முழுவதும் இருக்கையிலேயே அமர்ந்திருக்கும் தமது வழக்கமான வாழ்க்கைமுறையில் இருந்து உடற்பயிற்சிப் பழக்கத்திற்கு மாறுவதற்கு இது ஒரு மிகச் சிறந்த தொடக்கமாக அமைந்தது என்றும் குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி நடந்து சென்றது சோர்ந்துபோகாமல் தொடர்ந்து முன்னேற உதவியது என்றும் அவர் கூறினார்.

பாதிப் பேர்க்கு நடையே வழக்கம்

கடந்த 2025 நவம்பர்முதல் இவ்வாண்டு ஜனவரிவரை 1,809 சிங்கப்பூரர்களிடம் ஏஷியாஒன் நடத்திய கருத்தாய்வில், கடந்த மூன்று மாதங்களில் 85 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒருமுறையாவது உடற்பயிற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளனர். உடற்பயிற்சி செய்தவர்களில் 52 விழுக்காட்டினர் நடைப்பயிற்சியையே தங்களின் வழக்கமான தேர்வாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புதிய உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு ஐந்தில் இருவர் நடைப்பயிற்சியையே மிகவும் விரும்பும் நடவடிக்கையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். 30 நிமிடம், 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் என உடற்பயிற்சிக்குச் செலவிடும் சராசரி நேரம் எதுவாக இருந்தாலும், பெரும்பாலானோர் நடைப்பயிற்சியையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வோரில் 23 விழுக்காட்டினரும், வாரத்திற்கு ஒன்று முதல் நான்கு நாள்கள் உடற்பயிற்சி செய்வோரில் 28-29 விழுக்காட்டினரும் நடைப்பயிற்சியைத் தேர்வுசெய்கின்றனர்.

அதிக ஓய்வு நேரமும் (34%) சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும் (32%) இருப்பதே தங்களை அதிகம் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் என்றும் பங்கேற்பாளர்கள் கூறியுள்ளனர்.

பெண்களைவிட ஆண்கள் நடப்பது குறைவு

நடைப்பயிற்சியை ஆண்களைவிட பெண்களே அதிகம் விரும்புவது கருத்தாய்வின்மூலம் தெரியவந்துள்ளது. பெண்களில் 62 விழுக்காட்டினரும் ஆண்களில் 49 விழுக்காட்டினரும் நடைப்பயிற்சி செய்வதாகக் கூறியுள்ளனர்.

மாறாக, ஆண்கள் ஓடுவதிலும் (25%) மிதிவண்டி ஓட்டுவதிலும் (14%) கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். 35 மற்றும் அதற்குமேல் வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (53%) உடல்நலத்தைப் பேணவே உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவித்தனர். 35 - 54 வயதுப் பிரிவினரில் 35 விழுக்காட்டினர் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்காக உடற்பயிற்சி செய்வதாகக் குறிப்பிட்டனர்.

சிறிய முயற்சிகளால் பெரிய மாற்றம்

“எந்தவொரு சிறிய முயற்சியும் குறைத்து மதிப்பிடத்தக்கதன்று,” எனக் கூறும் ஜேமி லீ, பேருந்தில் செல்வதற்குப் பதிலாகச் சிறிது தொலைவு நடந்து செல்வது போன்ற எளிய தொடக்கங்களே நீண்டகால நல்வாழ்வுப் பழக்கத்தை உருவாக்க உதவும் என்கிறார்.

நல்வாழ்வைப் பொறுத்தமட்டில் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய ஒரே சூத்திரம் இல்லை.

பிறரைப் பார்த்து உடனடியாக மிகத் தீவிரமான, கடினமான பயிற்சிகளில் இறங்காமல், நடனம், யோகா அல்லது பிலாட்டிஸ் எனத் தங்களுக்குப் பிடித்தமான நடவடிக்கைகளைத் தேர்வு செய்து தொடர்ச்சியாகப் பின்பற்றுவதே நீண்டகால நல்வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது அவரது கருத்து.

குறிப்புச் சொற்கள்
உடற்பயிற்சிநடைப்பயிற்சிஆரோக்கியம்நேரம்

தொடர்புடைய செய்திகள்