சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 136ஆவது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்குத் தேசிய நூலகத்தில் நடைபெறவிருக்கிறது.
உள்ளூர்ப் படைப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நூல் கலந்துரையாடல் அங்கத்தில் எழுத்தாளர் செந்தில்குமார் நடராஜனின் ‘நீர்முள்’ சிறுகதைத் தொகுப்பு இடம்பெறுகிறது.
கதைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட போட்டிப் படைப்புகள் பற்றியும் கலந்துரையாடப்படும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
நவம்பர் மாத நூல் அறிமுகப் போட்டிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்பவேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டியில் பங்கேற்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 200 முதல் 300 சொற்களுக்குள் ‘தீபாவளிக் கொண்டாட்டத்தில் அனைவரும் மூழ்கியிருந்தபோதுதான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது’ என்ற தொடக்க வரியில் சிறுகதை எழுதவேண்டும்.
இளையர்கள் 300 முதல் 400 சொற்களுக்குள் ‘நள்ளிரவைத் தாண்டியும் படித்து முடிக்கவில்லையே என மனம் பதைபதைத்தது’ என்ற தொடக்க வரிகளுடன் சிறுகதையை எழுதவேண்டும்.
பொதுப்பிரிவில் பங்கேற்போருக்கான தொடக்க வரி - ‘காட்சிப்பேழையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் கண்கள் குளமாயின’. சிறுகதை 400 முதல் 500 சொற்களுக்குள் இருக்கவேண்டும்.
மின்னியல் படிவத்தை அக்டோபர் 24ஆம் தேதிக்குள் https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16 பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது மணிமாலா மதியழகனை 8725 8701/ திருவாட்டி பிரேமா மகாலிங்கத்தை 9169 6996 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.