பெருமாள் கோவிலுக்‌கு எதிரே புதிய அடையார் ஆனந்த பவன் கிளை

பெருமாள் கோவிலுக்‌கு எதிரே புதிய அடையார் ஆனந்த பவன் கிளை

2 mins read
053610dc-60d1-4a98-9638-ff9bb8b357bf
462 சிராங்கூன் சாலை என்ற முகவரியில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்‌கு எதிரே அமைந்துள்ளது புதிய அடையார் ஆனந்த பவன் கிளை. - படம்: அடையார் ஆனந்த பவன்
multi-img1 of 3

தமிழகத்தின் மிகப் பெரிய சைவ உணவகங்களில் ஒன்றான அடையார் ஆனந்த பவன் (ஏ2பி) சிங்கப்பூரில் தனது மூன்றாவது கிளையை வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) திறந்தது.

462 சிராங்கூன் சாலை என்ற முகவரியில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்‌கு எதிரே அமைந்துள்ள இந்தப் புதிய கிளை, கோயிலுக்குச் செல்பவர்களுக்கும் பக்தர்களுக்கும் வசதியான உணவு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஏ2பி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

“கோவிலின் வாசலிலேயே சுத்தமான, தரமான சைவ உணவை மக்‌களுக்‌கு வழங்க விரும்புகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டு லிட்டில் இந்தியா ஆர்க்கேட் பின்புறத்திலும் முஸ்தபா சென்டருக்கு எதிரிலும் ஏ2பி தனது முதல் இரண்டு கிளைகளைத் திறந்தது. சென்னையிலுள்ள அடையாற்றைத் தலைமை இடமாகக் கொண்ட இந்த உணவகம், இந்தியாவிலும் பிற வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ளது.

“புதிய கிளையில் உயர்தரமான உணவு அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உணவகத்தை வடிவமைத்துள்ளோம். பெரிய குடும்பங்களும் வசதியாக அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்,” என்று ஏ2பி நிர்வாகத்தினர் சொன்னார்கள்.

“நிலையான தரத்தையும் சுவையையும் உறுதிசெய்வதற்காக மூன்று கிளைகளுக்கும் ஒரே சமையலறையில் நாளும் உணவு தயாரிக்கப்படுகிறது.

“மேலும், நாங்கள் விற்கும் பைகளில் தொகுக்கப்பட்ட பலகாரங்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. கடையில் விற்கும் மற்ற இனிப்புகளும் தின்பண்ட வகைகளும் அன்றாடம் இருமுறை தயார் செய்யப்படுகின்றன,” என்றும் அவர்கள் கூறினர்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, பாரம்பரிய இந்திய இனிப்புகளையும் பலகாரங்களையும் பரிசுப் பெட்டிகளில் அலங்கரித்து ஏ2பி தனது கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறது.

“சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் புதிய கிளைக்‌கு அனைவரையும் ஆவலுடன் வரவேற்கிறோம்,” என்றனர் ஏ2பி நிர்வாகத்தினர்.

குறிப்புச் சொற்கள்