செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணிப் பொறுப்புகளை எளிமையாக்குகிறார் ராமசந்திரன் அஷோக்குமார், 49.
ஏவா சமூக சேவை அமைப்பின் கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆரம்பகாலத் தலையீட்டு நிலையத்தில் சிகிச்சைத் தலைவராக இருக்கும் அவர், தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் சமூக சேவை வழங்குதலைச் சீராக்கி வருகிறார்.
அமைப்பிற்குப் பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து குழந்தைகள் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சவால் இருக்கும்.
அவை அனைத்தையுமே நன்கு ஆராய்ந்து சமூக சேவைப் பணியாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தக் கைகொடுக்கும் வகையில் தொழில்நுட்பம் அஷோக்கின் பணியிடத்தில் செயல்படுகிறது.
அண்மையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சமூகச் சேவையாளர்களின் பணியில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு பற்றிப் பேசியிருந்தார்.
‘எஃபிஷன்சி ஏஐ’ எனப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளம் சிகிச்சை செயல்முறைகளை எளிமையாக்குகிறது.
நிர்வாகப் பணிகளைக் குறைப்பதால் சிகிச்சையாளர்கள் உண்மையில் முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்தவும் குழந்தைகளின் சிகிச்சை நன்மைகளை மேம்படுத்தவும் வழியமைக்கிறது.
இதற்கு அப்பாற்பட்டு ஏவாவில் தற்போது செயல்பட்டு வரும் தொழில்நுட்பத் திட்டங்களையும் அஷோக் வழிநடத்தி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
சமூக சேவை இயக்கத் தூதராக சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் சமூக ஈடுபாடு, தொண்டூழியர் நிர்வாகத் துணை இயக்குநராக இருக்கும் ஸ்ரீ கணேஷ் உதயகுமார், 41, பணியிடைக்கால சமூக சேவைப் பணியாளர்களுக்கான இயக்கம் ஒன்றை உருவாக்க உதவினார்.
தேசியச் சமூக சேவை மன்றத்துடன் இணைந்து ‘பெர்ன் பிரைட் நாட் அவுட்’ எனப்படும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.
சமூக சேவைப் பணியாளர்களிடையே அதிகரித்து வரும் மனச்சோர்வுக்குப் பதிலளிக்கும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் சமூக சேவை இயக்கத் தூதர்களின் குழுவால் தொடங்கப்பட்ட ஒரு ‘லிங்க்டின்’ கதைசொல்லல் தொடராகும்.
இத்துறையிலிருந்து வெளியேறியவர்கள், நிலைத்திருப்பவர்கள், திரும்பி வந்தவர்கள் ஆகியோரின் வெளிப்படையான கருத்துகளைக் கொண்டுள்ள இத்தொடர், உணர்வுபூர்வமாகச் சவாலான பணிகளில் நிலைத்து நிற்பது மட்டுமன்றி மேலோங்கி வளர்வது எப்படி என்பதைத் திரைக்குப் பின்னால் வெளிப்படுத்துகிறது.
தேசியச் சமூக சேவை மன்றத்தின் கணக்கெடுப்புப்படி சிங்கப்பூரில் உள்ள சமூக சேவை வல்லுநர்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 39 வயதுக்குக் குறைவானவர்கள்.
அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிக மன அழுத்தம் தொடர்பாகப் புகாரளிப்பதால் இத்திட்டம் நடுத்தரப் பணிக்கால நெருக்கடியைச் சுயசிந்தனை, புதுப்பித்தல், துறை தழுவிய மறுமலர்ச்சிக்கான தருணமாக மாற்றி வடிவமைக்கிறது.

