தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாம் உலகப் போரை நினைவுகூரும் புதிய ஃபோர்ட் சிலோசோ சுற்றுலா

2 mins read
b0131acc-b630-4b5f-9e60-4569461bd185
ஃபோர்ட் சிலோசோவில் புதிய அந்தியொளிச் சுற்றுலாக்கள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறும். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானியர்களிடம் வீழ்ந்த தருணம் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகி 83 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அன்று ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட சிங்கப்பூர்த் தியாகிகளை நினைவுகூர தேசிய மரபுடைமைக் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் ‘சிங்கப்பூருக்கான போர்’ (Battle for Singapore) நிகழ்ச்சித் தொகுப்பு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இவ்வாண்டு புதிதாக, ‘ஃபோர்ட் சிலோசோ அந்தியொளிச் சுற்றுலா’ அதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 74வது தேசிய நினைவுச் சின்னமான ‘ஃபோர்ட் சிலோசோ’, சிங்கப்பூரை, குறிப்பாக கெப்பல் துறைமுகத்தைக் காக்க, 1878ல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, அங்கிருந்த போர்வீரர்கள் பீரங்கிகளை இயக்கி, சிங்கப்பூரை ஜப்பானியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயன்றனர்.

இரவைத் தழுவும் வேளையில், ‘ஃபோர்ட் சிலோசோ’விலிருந்த போர்வீரர்கள் எவ்வாறு சுரங்கப்பாதைகளில் ஒளிந்தபடியே ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டனர் என்பதை இச்சுற்றுலா மக்களுக்கு உணர்த்தும்.

சுரங்கப்பாதைக்குள் செல்லும் வழி.
சுரங்கப்பாதைக்குள் செல்லும் வழி. - படம்: ரவி சிங்காரம்

ஜப்பானியர்களின் கண்களிலிருந்து தப்புவதற்காக, அவ்வீரர்கள் எவ்வாறு ஒளிமங்கிய விளக்குகளைக் கையில் ஏந்தி நடமாடினார்கள் என்பதை அனுபவித்து உணரும் வாய்ப்பையும் இச்சுற்றுலா வழங்கும்.

போரில் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலேய, ஜப்பானிய பீரங்கிகள் ஃபோர்ட் சிலோசோவில் ஆங்காங்கே  காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
போரில் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலேய, ஜப்பானிய பீரங்கிகள் ஃபோர்ட் சிலோசோவில் ஆங்காங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். - படம்: ரவி சிங்காரம்

புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் ‘முழுமை மரபு’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான முனைவர் ஜான் குவோக், செந்தோசாவின் பொழுதுபோக்குத் தளப் பிரிவின் துணை மேலாளர் சைஃபுல்லா கமாலுதின் ஆகியோர் இச்சுற்றுலாவை வழிநடத்துவர்.

பிப்ரவரி 15, 16, 22, 23ஆம் தேதிகளிலும் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளிலும் மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இச்சுற்றுலாவிற்குக் கட்டணம் 25 வெள்ளி. சுற்றுலாவில் சுரங்கப்பாதைகளில் நடப்பதோடு, படிகளில் ஏறியிறங்கும் அங்கங்களும் உண்டு.

மேலும், பயிலரங்குகள், சுற்றுலாக்கள், கண்காட்சிகள் என மொத்தம் 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ‘சிங்கப்பூருக்கான போர்’ தொகுப்பில் இடம்பெறும்.

சிங்கப்பூருக்குள் நுழைந்த ஜப்பானியர்கள் கைப்பற்றிய முதல் விமானத்தளமான தெங்கா ஆகாயப்படைத் தளம், இரண்டாம் உலகப் போரின்போது மக்கள் சிங்கப்பூரிலிருந்து தப்பிக்க வழிவகுத்த கிலிஃபர்டு பியர் போன்ற முக்கிய இடங்களும் இந்நிகழ்ச்சிகளில் காட்டப்படும்.

சில சுற்றுலாக்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். சில சுற்றுலாக்களுக்கு அனுமதி இலவசம்.

முழு நிகழ்ச்சிப் பட்டியலைக் காணவும் நிகழ்ச்சிகளுக்குப் பதிவுசெய்யவும் https://www.nhb.gov.sg/what-we-do/our-work/sector-development/museum-roundtable என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்