பெரியாரின் கருத்துகள் சார்ந்த சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் அயலகத் தமிழர் தினத்தன்று விருது வழங்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கி. வீரமணி.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டிலும் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவிலும் தேசிய நூலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்ற தந்தை பெரியாரின் 146ஆம் பிறந்தநாள் விழாவில் அவர் இவ்வாறு அறிவித்தார்.
“முதலமைச்சரிடமும் நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைப்போம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடமும் இதை வலியுறுத்தினேன்.
“கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவில் கலைஞர் பங்கேற்றார். அதனால், இந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்,” என்றார் அவர்.
செப்டம்பர் 15ஆம் தேதி பெரியார், அண்ணா பிறந்தநாள்களையொட்டி நடந்த விழாவிற்காக தோக்கியோவிற்குப் பயணம் செய்திருந்த முனைவர் வீரமணி, இந்தியாவிற்குத் திரும்பும் பயணத்தினிடையே சிங்கப்பூரில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
“சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தில் உயர் வர்க்கத்துக்கும் ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இடையே பெரும் பொருளாதாரப் பிளவு இருந்தது. பல சாதியக் கட்டுப்பாடுகள் மலாயாவிற்கும் சிங்கப்பூருக்கும் வந்தன. அப்போது தந்தைப் பெரியார் ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியிடமும் சென்று, பள்ளிக்கூடங்கள் வைக்கச் சொன்னார்.
“செல்லும் நாடெல்லாம் பெரியார் பண்பாட்டுக்கு விதையூன்றினார். அவரது விளைச்சலில் வண்டுகள் விழக்கூடாது,” என சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தினார்.
“ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளுக்காக ஒரு மனிதநேயத் தொண்டு நிகழ்வுக்கும் தமிழ் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுசெய்கிறோம். இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளோம்,” என்றார் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் க.பூபாலன். பதிவுசெய்ய விரும்புவோர் 91004780 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘பெரியார் ஒரு சிந்தனைக் கிளர்ச்சியாளர்’
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்து உரையாற்றினார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியத் துறை இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன்.
அவரின் பாட்டனார் நாவலர் சோமசுந்தரம் பாரதியாருக்கும் பெரியாருக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. பெரியார் அமர்ந்த சாய்வு நாற்காலியைக்கூட அவரது குடும்பம் பத்திரப்படுத்தியது.
“சமூகப் புரட்சி என்பது ஒரு காலகட்டத்தோடு நின்றுவிடுவது. ஆனால் பெரியாரின் கோட்பாடுகள் பல தலைமுறைகளையும் தாண்டிச் சென்றன; அவை ஒரு தமிழறிஞர்க் கூட்டத்தில் மட்டும் பேசப்படாமல், எல்லா நிலையிலிருந்த மக்களையும் சென்றடைந்தன. அதனால், பெரியார் ஒரு சிறந்த சிந்தனைக் கிளர்ச்சியாளர்,” என்றார் அவர்.
பெரியாரின் தாக்கத்தை ஆங்கில உலகில் மேலும் நன்கு உணர்த்தவேண்டும்; இளையர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என அவர் கூறினார்.
நூல் ஆய்வு
ஆண்டுதோறும் ஒரு கலந்துரையாடல் கூட்டமாக அல்லது மாணவப் பட்டிமன்றமாக நடைபெற்றுவரும் இவ்விழா, முதன்முறையாக நூலாய்வை மையப்படுத்தியது.
இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்ட ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ நூல் ஆய்வுசெய்யப்பட்டது.
“சிங்கப்பூரில் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவர் பெரியார். அவரது பங்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளதால் இந்நூலை ஆய்வுசெய்யத் தீர்மானித்தோம்,” என்றார் திரு பூபாலன்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவி அருணா கந்தசாமி, நூலாய்வு அங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
“நூலின் ஒரு புகைப்படம் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. சுமார் 1890ல், ஒரு பெண்மணி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்க, கணவர் பக்கத்திலேயே நிற்கிறார். இப்படத்தைக் கண்டுபிடித்த குழுவிற்கு உண்மையிலேயே பாராட்டுகள்,” என்றார் அருணா.
“தென்கிழக்காசிய, சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பற்றி, ஏற்கெனவே இருந்ததைவிட இன்னும் ஆழமான, பரவலான கண்ணோட்டத்தை வழங்குவதே இந்நூலின் நோக்கம்,” என்றார் கொள்கை ஆய்வுக் கழக சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகர் அருண் மகிழ்நன். அவர், ஆய்வாளரும் மூத்த அரும்பொருளகக் காப்பாளருமான நளினா கோபாலுடன் நூலை இணைந்து தொகுத்தவர்.
பன்முகப் பண்பாட்டு சமூகத்தில் நம்பகமான தகவல்களை முன்வைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நூலை எடுத்துக்காட்டாகக் கூறி, “தமிழ்நாட்டில்கூட இப்படிப்பட்ட வரலாறு பதிவுசெய்யப்படவில்லை. மரபை உடைமையாக்கிய, கடமையாக்கிய நாடு சிங்கப்பூர்,” எனப் பாராட்டினார் முனைவர் வீரமணி.

