தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரப் புத்தாக்கங்களுக்கு $1 மில்லியன் வரை வழங்கும் புதிய மானியம்

2 mins read
f4ae6a21-a697-4d71-ac84-2ee2f87d742e
தேசிய சுகாதாரப் புத்தாக்க நிலையத்தின் (என்எச்ஐசி) தலைவர்களுடன் சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (நடுவில்) என்எச்ஐசி 10ஆம் ஆண்டு நிறைவு விழாவைத் தொடங்கி வைத்தார். - படம்: சிங்கப்பூர் மருத்துவ ஆய்வு, புத்தாக்கக் கூட்டமைப்பு (சிஆர்ஐஎஸ்)

சுகாதாரத் துறையில் புத்தாக்கத் திட்டங்களுக்கு அதிகபட்சம் $1 மில்லியன் நிதியாதரவு வழங்கும் புதிய மானியத்தை தேசிய சுகாதார புத்தாக்க நிலையம் (NHIC - என்எச்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி நடந்த அந்நிலையத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இதை அறிவித்தார்.

புத்தாக்கமிக்க திட்டங்களைச் சந்தைக்குத் தயார்ப்படுத்தவும் மருத்துவமனைகளில் செயல்படுத்தவும் இப்புதிய மானியம் உதவும். இதன்வழி, தனியார் துறை ஆதரவை ஈர்ப்பதையும் என்எச்ஐசி இலக்காகக் கொண்டுள்ளது.

என்எச்ஐசி ஏற்கெனவே வழங்கும் திட்டங்களின் விரிவாக்கமே இம்மானியம். இதுவரை என்எச்ஐசி 25 தொழில்முனைவுகளின் உருவாக்கத்திற்கும் 34 சந்தைகளில் 16 விளைபொருள்களின் (products) அறிமுகத்துக்கும் 72 உரிமங்களுக்கும் வித்திட்டுள்ளது.

“என்எச்ஐசி, கடந்த 10 ஆண்டுகளாக பொதுச் சுகாதாரக் கழகங்களில் 100க்கும் மேற்பட்ட புத்தாக்கத் திட்டங்களை விரைவுபடுத்தி, தனியார் துறை முதலீடுகளில் கிட்டத்தட்ட $90 மில்லியனை ஈர்த்துள்ளது,” என்றார் டாக்டர் ஜனில்.

‘சுகாதாரத் துறையினரை ஆற்றல்படுத்த விரும்புகிறோம்’

“மருத்துவமனையில் பணியாற்றும் யாராக இருப்பினும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களுக்கே தீர்வுகள் தோன்றலாம். அத்தீர்வுகளைச் செயல்படுத்த அவர்களுக்குத் தகுந்த பயிற்சியும் நிதியாதரவும் வழங்குகிறோம். அதைச் சார்ந்த தொழில்நுட்பப் பங்காளிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்துகிறோம்.

“சிங்கப்பூரில் நாம் சந்திக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் பலவற்றையும் உதாரணத்திற்கு, மூப்படையும் சமூகம், சுகாதாரத் துறையினரின் பற்றாக்குறையை மற்ற நாடுகளும் எதிர்நோக்குகின்றன. அதனால், சிங்கப்பூரில் உருவாகும் புத்தாக்கங்கள் மற்ற நாடுகளிலும் பயன்படும்.

“அவற்றை சிங்கப்பூரில் நிரூபித்து, பின்பு மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும். இப்பயணத்தில் என்எச்ஐசி திட்டங்கள் உதவுகின்றன,” என்றார் என்எச்ஐசி நிர்வாக இயக்குநர் இணைப் பேராசிரியர் ஹென்ரி ஹோ.

‘உதிக்கும் நட்சத்திர’ விருதுகள்

விழாவில் ‘உதிக்கும் நட்சத்திர சுகாதாரப் புத்தாக்கப் பாராட்டு’ விருதுகள் நான்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் ‘உதிக்கும் நட்சத்திர சுகாதாரப் புத்தாக்கப் பாராட்டு’ விருதுகள் நான்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. - படம்: சிஆர்ஐஎஸ்

விழாவில் ‘உதிக்கும் நட்சத்திர சுகாதாரப் புத்தாக்கப் பாராட்டு’ விருதுகளும் நான்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிறுவனங்கள், சுகாதார அமைப்புகளுடன் வலுவான பங்காளித்துவம் மூலம், புதிய தொழில்நுட்பங்களைப் பேரளவில் அறிமுகப்படுத்தியுள்ளன.

‘புரோஸ்டேட்’ புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை இயந்திரக் கருவியை வழங்கும் ‘பையோபாட் சர்ஜிக்கல்’ (Biobot Surgical), கொவிட்-19 தொற்றுகாலத்தில் சிங்கப்பூரின் முதல் இணையவழி மேற்பார்வையோடு நடத்தப்பட்ட ஏஆர்டி பரிசோதனையை வழங்கிய ‘டாக்டர் எனிவேர்’, புற்றுநோயைப் புதிய விதத்தில் கண்டறியும் ‘லுசென்ஸ்’ (Lucence), எம்ஐஆர்எக்இஎஸ் (MiRXES) ஆகியவையே விருதுபெற்ற நிறுவனங்கள்.

என்எச்ஐசியை நிறுவிய தலைவருக்குப் பாராட்டு

என்எச்ஐசியை நிறுவிய தலைவரும் தேசிய மருத்துவ ஆய்வு மன்றத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கா கிரு‌ஷ்ணனை (வலது) கெளரவித்தார் டாக்டர் ஜனில் புதுச்சேரி.
என்எச்ஐசியை நிறுவிய தலைவரும் தேசிய மருத்துவ ஆய்வு மன்றத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கா கிரு‌ஷ்ணனை (வலது) கெளரவித்தார் டாக்டர் ஜனில் புதுச்சேரி. - படம்: சிஆர்ஐஎஸ்

என்எச்ஐசியை நிறுவியத் தலைவரான பேராசிரியர் ரங்கா கிரு‌ஷ்ணனை அங்கீகரிக்க டாக்டர் ஜனில் அவருக்கு ஒரு பாராட்டுப் பரிசை வழங்கினார். தற்போது, தேசிய மருத்துவ ஆய்வு மன்றத்தின் தலைவராகவும் கல்வி அமைச்சின் கற்றல் அறிவியல் நிபுணத்துவக் குழுவின் தலைவராகவும் பேராசிரியர் ரங்கா உள்ளார்.

“உங்கள் ஒருவரால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நீங்கள் ஏற்படுத்தும் புத்தாக்கம், மில்லியன்கணக்கானோருக்கு உதவலாம்,” என சுகாதாரத் துறையினரை புத்தாக்கத் தீர்வுகளை வழங்குவதற்கு ஊக்குவித்தார் பேராசிரியர் ரங்கா.

என்எச்ஐசி உதவியோடு விரிவடைந்த ‘ஐரிஸ்’ (EyRIS) நிறுவனத்தை அவர் உதாரணமாகச் சுட்டினார். சிங்கப்பூரில் தொடங்கி, இன்று உலக அளவில் கண் நோய்களை ஆரம்பகட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிகிறது இந்நிறுவனம்.

நீங்கள் ஏற்படுத்தும் புத்தாக்கம், மில்லியன்கணக்கானோருக்கு உதவலாம்.
என்எச்ஐசியை நிறுவியத் தலைவர் பேராசிரியர் ரங்கா கிரு‌ஷ்ணன்
குறிப்புச் சொற்கள்