தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புத்தாண்டை உலகெங்கிலும் உள்ள பல சமூகங்கள் தனித்துவமான முறையில் தொடங்குவதுண்டு. சில புகழ்பெற்ற புத்தாண்டு வழக்கங்களையும் வேறு சில சுவாரசியமான பழக்கங்களையும் ஆராய்கிறது தமிழ் முரசு. 

உலகெங்கும் வேறுபடும் புத்தாண்டுப் பாரம்பரியங்கள்

2 mins read
0a9d3ccd-d0af-4ced-8049-a459196124ac
புகழ்பெற்ற பந்து இறக்க விழா (Ball-Drop) 1907ஆம் ஆண்டிலிருந்து நியூயார்க்கின் ‘டைம்ஸ் ஸ்குவேர்’ பகுதியில் இடம்பெற்று வருகிறது. - படம்: ஏஃப்பி
multi-img1 of 3

நியூயார்க்

புகழ்பெற்ற பந்து இறக்க விழா (Ball-Drop) 1907ஆம் ஆண்டிலிருந்து நியூயார்க்கின் ‘டைம்ஸ் ஸ்குவேர்’ பகுதியில் இடம்பெற்று வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் கிட்டத்தட்ட ஆறு டன் எடைகொண்ட மின்விளக்குகளுடன் ஒளிரும் படிகப் பந்து ஒன்று இறக்கப்படும். இந்த நிகழ்ச்சியை நேரடியாகவும் இணைய, தொலைக்காட்சி நேரலை வழியாகவும் உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளிப்பதுண்டு. 

பிரேசில்

பிரேசில் மக்கள் புத்தாண்டு நாளன்று பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளை அணிந்து கடற்கரைக்குச் செல்வார்கள். கடலில் கால் நனைத்தபடி ஏழு கடல் அலைகளைத் தாண்டி, கடந்த ஆண்டுக்கு நன்றி தெரிவிப்பது அவர்களின் புத்தாண்டு வழக்கம். 

ஜப்பான்

பௌத்த சமயத்தில் 108 வகையான ஆசைகள் உள்ளன என்று நம்பப்படுகிறது. அவற்றை அகற்ற, புத்தாண்டு நாளன்று பௌத்த ஆலயங்களில் 108 முறை மணி அடிக்கப்படும் பாரம்பரியத்தை ஜப்பானிய மக்கள் பின்பற்றி வருகின்றனர். 

கிரீஸ்

புத்தாண்டு நாளன்று நல்ல உடல்நலம், நீண்ட ஆயுளுக்காக கிரேக்க குடும்பங்கள் தங்கள் வீட்டு வாசல்களில் ஒரு வெங்காயத்தைத் தொங்கவிடுவார்கள்.

பிலிப்பீன்ஸ்

வட்ட வடிவமானது செழிப்பைக் குறிக்கிறது என்பது பிலிப்பீன்ஸ் மக்களின் நம்பிக்கை. அதனால், அவர்கள் நாணயங்களை பரிமாறி, அவற்றை மேசையின் மேல் வைப்பார்கள். அத்துடன், புத்தாண்டு நாளன்று புள்ளிகளுடன் கூடிய ஆடைகளை மட்டும் அவர்கள் அணிவார்கள்.

இலத்தீன் அமெரிக்கா

வரும் புதிய ஆண்டில் நிறைய பயண வாய்ப்புகள் அமையவும் அதிர்ஷ்டம் தம்வசமாவதற்கும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்கள் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் ஒரு கைப்பெட்டியை பிடித்துக்கொண்டு தங்கள் வட்டாரத்தை வலம் வருவர். 

டென்மார்க்

புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் டென்மார்க் மக்கள் மேசை அல்லது நாற்காலியின் மீதிருந்து கீழே குதிப்பார்கள். வரும் புத்தாண்டிற்குள்‘பாய்வது’ அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. 

ஸ்பெயின்

புத்தாண்டு நள்ளிரவில் ஸ்பானிய மக்கள் பன்னிரண்டு பச்சை நிற திராட்சைப் பழங்களை மேசைக்குக்கீழ் அமர்ந்தபடியே உண்பர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்தப் பாரம்பரியம் வரும் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். 

குறிப்புச் சொற்கள்