விடியற்காலையில் எழுபவர்களைவிட இரவில் விழித்திருப்பவர்கள் முன்கூட்டியே இறந்துவிடக்கூடக்கூடிய சாத்தியம் அதிகம் என்று கூறிவிட இயலாது. ஆனால், மதுபானம் அருந்தவும் புகைபிடிக்கவும் இரவில் விழித்திருப்பவர்களாக அவர்கள் இருக்கக்கூடாது.
37 ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இரவில் விழித்திருந்து காலையில் எழந்திருக்க சிரமப்படுவோருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று முந்தைய ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன.
காலையில் எழுபவர்களைவிட இரவில் விழித்திருப்பவர்கள் முன்கூட்டியே இறக்கும் அபாயம் 10 விழுக்காடு அதிகம் என்று 2018ல் பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆறரை ஆண்டுகால பெரிய அளவிலான ஆய்வில் கண்டறியப்பட்டது.
இரவில் விழித்திருப்போருக்கு இது கவலை தரும் செய்தி என்றாலும், மது அருந்துவது போன்ற அம்சங்களை அந்த ஆய்வு கருத்தில்கொள்ளவில்லை. அத்தகைய மரணங்களுக்கு இந்த அம்சங்கள் காரணங்களாக இருக்கக்கூடும்.
பின்லாந்து ஆய்வாளர்கள், இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மேலும் அறிய முற்பட்டனர்.
பின்லாந்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 24,000 இரட்டையர்களை அந்த ஆய்வு பின்தொடர்ந்தது. தாங்கள் விடியற்காலையில் எழுபவர்களா அல்லது இரவில் விழித்திருப்பவர்களா என்பது குறித்து 1981ல் அவர்களிடம் கேட்டறியப்பட்டு இருந்தது.
தாங்கள் ஓரளவு இரவில் விழித்திருப்பவர்கள் என்று மூன்றில் ஒரு பங்கினர் கூறியிருந்தனர். தாங்கள் நிச்சயம் இரவில் விழித்திருப்பவர்கள் என்று 10 விழுக்காட்டினர் சொல்லியிருந்தனர். எஞ்சியவர்கள், தாங்கள் காலையில் எழுபவர்கள் என்று தெரிவித்திருந்தனர்.
இரவில் விழித்திருந்தோர் இளம் வயதினராக இருந்தனர். அவர்கள் மது, புகைப்பழக்கம் உடையவர்களாக இருந்ததற்கான சாத்தியம் அதிகம்.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் நிலையை 2018ல் ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது, இரட்டையர்களில் 8,700க்கும் அதிகமானோர் இறந்துவிட்டது தெரியவந்தது.
எப்போதும் இரவில் விழித்திருப்போர் முன்கூட்டியே இறக்கும் சாத்தியம் 9 விழுக்காடு அதிகம் என்பதை 37 ஆண்டுகாலத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது, 2018ல் வெளிவந்த ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப் போகிறது.
ஆனால், மது அருந்துவதும் புகைபிடிப்பதுமே இதற்கு முக்கியக் காரணம் என்பதை ஆய்வு சுட்டியது.

