சிங்கப்பூர்-இந்தியா அரசதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ‘வடகிழக்கு இந்திய விழா’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி சன்டெக் சிட்டி சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் வரும் வாரயிறுதியில் (செப்டம்பர் 20, 21) காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறுகிறது.
வடகிழக்கு இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான பொருளியலையும் மக்கள் இடையிலான தொடர்பையும் விரிவுபடுத்த இவ்விழா வாய்ப்பளிக்கிறது.
வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த சிறப்புவாய்ந்த தயாரிப்புகள், சுற்றுலாத் தலங்கள், பண்பாட்டு மரபு ஆகியவை காட்சிக்குக் கொண்டுவரப்படும்.
நாட்டுப்புற நடனங்கள், ‘ராக்’ இசைக்குழுக்கள், பாலிவுட் இசை, இந்திய வடிவமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆடை அலங்கார நிகழ்ச்சி உள்ளிட்ட கலாசாரப் படைப்புகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.
அத்துடன், வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தேயிலை சுவைத்தல், சிறப்புக் கைவினை, இயற்கைவிலைப் பொருள்களின் கண்காட்சி ஆகியவை நிகழ்ச்சியில் இடம்பெறும்.
வடகிழக்கு இந்தியாவிலிருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஏறக்குறைய 60 கடைகள், வடகிழக்கு இந்தியாவின் தனித்துவமான புவியியல் அடையாளப் பொருள்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் மற்றோர் அம்சமாக, வடகிழக்கு இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களை விளக்கும் சுற்றுலா நிறுவனங்களின் கண்காட்சியும் இடம்பெறும்.
மேலும், ‘ஹார்ன்பில் திருவிழா’, ‘செர்ரி பிளாசம் திருவிழா’, ‘தவாங் திருவிழா’ உள்ளிட்ட புகழ்பெற்ற விழாக்களும் சாகச சுற்றுலாப் பாதைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஏறக்குறைய 150 நாட்டுப்புறக் கலைஞர்கள் அருணாசலப் பிரதேசத்தின் சிங்க நடனம், அசாமின் சத்திரியா, திவா, கார்பி நடனங்கள், மணிப்பூரி நடனம், திரிபுராவின் ஹோஜகிரி நடனம், நாகாலந்தின் போர்வீரர் நடனம் உள்ளிட்ட வடகிழக்கு இந்தியாவின் பல்வகை கலாசாரங்களை வெளிப்படுத்த உள்ளனர்.