சேவை மனப்பான்மை இருக்கும்வரை எங்கும் சேவையாற்றலாம் என்பதற்கு 24 வயது முழுநேரக் கடற்படைவீரர் ஒன்றாம் ராணுவ நிபுணர் கேட்லின் ஆறுமுகம் ஒரு சிறந்த சான்று.
ஐடிஈ (கிழக்கு), நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைப் பட்டம் பெற்றபின், ஓராண்டுக்குமேல் தாதியாகப் பணியாற்றிய கேட்லின், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடற்படையில் முழுநேர வீரராகச் சேர்ந்தார்.
“நான் 18 வயதிலேயே கடற்படையில் சேர முடிவெடுத்தேன். அதற்குப் பெரும் காரணமாக இருந்தது என் தந்தைதான்,” என்றார் கேட்லின்.
கேட்லினின் தந்தை திரு ஆறுமுகம், 56, ஓய்வுபெற்ற முழுநேரக் கடற்படை வீரர்.
அவர் சிறுவயதிலிருந்து கேட்லினையும் அவருடைய சகோதரர்களையும் சாங்கி கடற்படைத் தளத்தில் கடற்படைப் பொது வரவேற்பு விழாக்களுக்கு அழைத்துச் செல்வார். அப்பொழுதே கடற்படைக் கலாசாரம் கேட்லினுக்குப் பிடித்துப் போய்விட்டது.
“கடற்படையில் சேரும் முடிவை நான் முதலில் கூறியது என் தந்தையிடம்தான். அவர் ஆச்சரியப்படவில்லை. இது நடக்கும் என அவருக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.
“நான் கடற்படையில் இருந்தேன் என்பதற்காக நீ கடற்படையில் சேர்கிறாயா அல்லது உண்மையிலேயே உனக்குப் பிடித்திருப்பதால் நீ சேர்கிறாயா என என் தந்தை என்னிடம் கேட்டபோது, இது என் விருப்பம்தான் என உறுதியளித்தேன்,” என்றார் கேட்லின்.
அன்று தன் தந்தை கடற்படைச் சீருடையில் வீட்டிற்குத் திரும்பும்போது பெருமைப்பட்டார் கேட்லின். இன்று தம் மகளைக் கண்டு பெருமைப்படுகிறார் திரு ஆறுமுகம்.
தொடர்புடைய செய்திகள்
வியாழக்கிழமை பிப்ரவரி 20ஆம் தேதி, பாசிர் லபா முகாமில் நடந்த 62/24 நிபுணத்துவப் பயிற்சி அதிகாரித் தேர்ச்சி அணிவகுப்பில் தேர்ச்சிபெற்ற 977 வீரர்களில் கேட்லினும் ஒருவர்.
அவர் தேர்ச்சிபெறுவதைக் காண திரு ஆறுமுகமும் கேட்லினின் இரண்டாம் அண்ணனும் வந்திருந்தனர்.
அணிவகுப்புச் சடங்கை மேற்பார்வையிடும் அதிகாரியாகத் தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி வருகையளித்தார்.
“இவ்வாண்டு சிங்கப்பூர் மட்டுமல்லாது, சிங்கப்பூர் ஆயுதப்படையும் அதன் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அதன் வளர்ச்சியும் நம் நாட்டின் வெற்றிப் பயணத்தைப் போன்றது. இன்று அனைவரும் மதிக்கும் படையாக அது வளர்ந்துள்ளது,” என்றார் டாக்டர் ஜனில்.
ஒன்பது வார அடிப்படை ராணுவப் பயிற்சியும் 22 வார போர்க்கால மருத்துவ ஊழியர்ப் பயிற்சியும் மேற்கொண்ட கேட்லின், இதையடுத்து, கடலடி மருத்துவ ஊழியர்ப் பயிற்சியை மேற்கொள்வார்.
முடிவுகளில் தீர்க்கம் தேவை
கடற்படையில் சேரும் முடிவில் கேட்லின் காட்டிய தீர்க்கம் அவருடைய கடற்படைப் பயிற்சியிலும் உதவுகிறது.
“மருத்துவமனையிலோ காட்டிலோ கடலிலோ உயிர்களைக் காப்பாற்றுவதற்கு துரிதமான, துல்லியமான தீர்மானங்கள் தேவை. நான் என்னைப் பற்றி எண்ணுவதைவிட நான் வலிமையானவர் என என் தந்தை அடிக்கடி நினைவுபடுத்துவார்,” என்றார் கேட்லின்.
இன்றுவரைக் கேட்லினுக்குப் பலத்த ஆதரவைத் தந்தை கொடுக்கிறார்.
“நான் ஏதேனும் பயிற்சிகளுக்குச் செல்லவிருந்தால் எனக்கு என்ன தேவைப்படும் என முன்கூட்டியே சிந்தித்து, அதை எனக்காக வாங்கி வைத்துவிடுவார்,” என நன்றியோடு கூறினார் கேட்லின்.
‘ஆண்களுக்குரிய பணியன்று’
தொடக்கத்தில், பயிற்சிகளிலுள்ள சில பெண்களில் ஒருவராகத் தனிமையைச் சற்று உணர்ந்தார் கேட்லின். ஆனால், சக வீரர்களுடன் நட்பு உருவானதும் சில நாள்களிலேயே அந்த உணர்வு அவரைவிட்டுச் சென்றது.
“ஆண், பெண் வித்தியாசம் பாராமல் அனைவரையும் ஒன்றாக நடத்துகிறார்கள். இங்கு நான் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். எனக்கெனத் தனி படுக்கையறை உள்ளது. வழிகாட்டுதலுக்கும் உதவிக்கும் பெண் அதிகாரிகளும் உள்ளனர்,” என்றார் கேட்லின்.
“சிங்கப்பூர் ஆயுதப்படை என்பது ஆண்களுக்கே உரிய வேலையிடமாக எண்ணாதீர்கள். உங்கள் தீர்மானத்தில் உறுதிகொண்டு அதைப் பின்பற்றுவதற்கு முதல் அடியெடுத்து வைத்தால் மற்ற அனைத்தும் தாமாக அமையும்,” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

