முதுநிலை தாதியரான திருமதி அபிராமி நாகராசன், 44, சுகாதார அமைச்சின் உதவித் தொகையுடன், கிங்ஸ் கல்லூரி லண்டனில் பகுதி நேர இளநிலைத் தாதியர் பட்டப்படிப்பை இரண்டாம் கிளாஸ் அப்பர் ஹானர்சுடன் முடித்துள்ளார்.
மேலும் பல குறிப்பிடத்தக்க சாதனைகளையும் இவர் படைத்துள்ளார்.
மதிப்புமிக்க தலைமைத் தாதியர் விருதுமூலம் இவரது அர்ப்பணிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக திருமதி அபிராமி பணிபுரிந்து வருகிறார்.
தமது பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவர், “தாதியர் பணி மிகவும் சவால் நிறைந்த பணியாக இருந்தபோதும் ஒருவர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தருணங்களில் அவர்களுக்கு உதவும் நல்வாய்ப்பை வழங்குகிறது,” என்றார்.
வேலையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதற்குப் பணியில் இருப்பவர்கள் மட்டுமல்லாது தம் கணவரின் ஆதரவும் ஒரு முக்கியக் காரணம் என்று திருமதி அபிராமி கூறினார்.
இவரின் கவனம் கல்வியின் பக்கம் திரும்பியபோது, அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் அவர் கணவர் கவனித்துக்கொண்டார்.
மேலும், வேலைப் பளுவை சமாளிக்க, இவரின் மேற்பார்வையாளர்களும் சக ஊழியர்களும் ஆதரவாக இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“என் மேற்பார்வையாளர்கள் என்னை ஊக்குவித்துப் பரிந்துரைத்ததால், அடுத்த ஆண்டு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதியர் துறையில் மேல்நிலைப் பட்டயம் (மருத்து வம்-அறுவை சிகிச்சை) பயிலவுள்ளேன். வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்பை எண்ணி நான் மனநிறைவு கொள்கிறேன்,” என்றார் திருமதி அபிராமி.
தம் மூன்று மகள்களுடன் சேர்ந்து படிப்பதன் மூலம் குடும்பப் பிணைப்பை இவரால் வலுப்படுத்திக்கொள்ள முடிகிறது. இதன்மூலம், பிள்ளைகள் தங்கள் தாயாரின் கல்விப் பயணத்தில் கூடுதல் ஆர்வம் காட்டினர்.
தாதியர் பணியை மேற்கொண்டு மேற்கல்வியைத் தொடர தாதியர்களை திருமதி அபிராமி ஊக்குவிக்கிறார்.
தாதியர் பணியின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து கற்றல், மேலும் இரக்க குணத்தை ஏற்படுத்துவதன் மூலம் சக தாதியர்களை இவர் ஊக்குவிக்க விரும்புகிறார்.
ஆர்வத்துடனும் நோக்கத்துடனும் தொழிலைத் தொடரும்போது அதில் நிச்சயம் சிறந்து விளங்கலாம் என்கிறார் இவர்.

