‘கீமோதெரப்பி’ செயல்திறனை மேம்படுத்த புதிய ஆய்வு

2 mins read
63c10325-9c15-4901-8823-c48affb29694
கட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு காந்த விசைகளை பயன்படுத்துவதன் மூலம் டாக்ஸோரூபிகின் (DOX) எனும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘கீமோதெரப்பி’ மருந்து அதிகரிக்கும். - படம்: என்யுஎஸ்
multi-img1 of 2

‘கீமோதெரப்பி’ செயல்திறனை மேம்படுத்தவும் அதன் பக்க விளைவுகளைக் குறைக்கவும் எளிய, ஆபத்து குறைவான முறையை உருவாக்கியுள்ளனர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வாளர்கள். 

பெண்களிடம் கண்டறியப்படும் புற்றுநோய்களில் பொதுவாக அவர்கள் பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோயாகும். சிங்கப்பூரில் 13 பெண்களில் ஒருவருக்கு அவரின் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. 

மார்பகப் புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சை ‘கீமோதெரப்பி’. ஆனால், அந்தச் சிகிச்சையால் உடல் சோர்வு, மற்ற உடல் பாகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு போன்ற பக்க விளைவுகளும் அடங்கும்.  

கட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு காந்த விசைகளை பயன்படுத்துவதன் மூலம் டாக்ஸோரூபிகின் (DOX) எனும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘கீமோதெரப்பி’ மருந்து அதிகரிக்கும்.

இதனால் மார்பகப் புற்றுநோய் உயிரணுக்கள் ஆரோக்கியமான திசுக்களில் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும். 

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ‘கீமோதெரப்பி’ மேற்கொள்வது ஆகக் கடினம் என்று என்யுஎஸ் புற்றுநோய் ஆய்வு மையத்தில் முனைவர் பட்டக் கல்வி மேற்கொள்ளும் விரேஷ் கிருஷ்ணன், 27, கூறினார். 

“மார்பகப் புற்றுநோய் உட்பட பெரும்பாலான தீவிர புற்றுநோய்களில் ‘டிஆர்பிசிஒன்’ எனும் கால்சியம் அயோன் (calcium ion) ஒன்று தென்படும். காந்த விசைகளின் உதவியுடன் இந்த ‘டிஆர்பிஸிஒன்’ செயல்பட்டு புற்று அணுக்களில் டாக்ஸோரூபிகின் மருந்தின் ஊடுருவலை எளிதாக்கும்,” என்றார். 

ஈராண்டுகளாக புற்றுநோய் ஆய்வில் ஈடுபடும் விரேஷ், பட்டக்கல்வி பயின்ற காலத்திலிருந்தே புற்றுநோய் ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளார். 

“புற்றுநோய்க்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொண்டு அதற்கான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர். 

உலகெங்கிலும் புற்றுநோய் தொடர்பான பெண்களின் உயிரிழப்புகளுக்கு மார்பகப் புற்றுநோய் முக்கியக் காரணமாக இருப்பதால் புதிய சிகிச்சை உத்திகளின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த அணுகுமுறை, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதோடு, ‘கீமோதெரப்பி’ சிகிச்சையின் பக்க விளைவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பாக அமைவதாக இணைப் பேராசிரியர் ஆல்ஃபிரடோ ஃபிராங்கோ-ஒப்ரெகன் கூறினார். 

தேசிய பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் புத்தாக்கம், தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் ஆல்ஃபிரடோ இந்த ஆய்வை வழிநடத்தினார். 

துடிப்புள்ள காந்த சக்தியால் புற்று அணுக்கள் எவ்வாறு மேம்படுத்தப்பட்ட முறையில் டாக்ஸோரூபிகின் மருந்தை உள்வாங்கும் என்பதை முதன் முறையாக இந்த ஆய்வு காண்பித்தது.

குழுவின் ஆய்வு, 2024 நவம்பர் 18ஆம் தேதி ‘புற்றுநோய்கள்’ என்ற இதழில் வெளியிடப்பட்டது.

தற்போது இந்த ஆய்வு பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக விரேஷ் தெரிவித்தார். 

‘மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் தரவு சேகரிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த ஆய்வு மருத்துவத் துறைக்குப் பயனளிக்க தொடர்ந்து உழைப்பு தேவை.

மேலும், இந்த ஆய்வின் வெற்றி, மற்ற வகை புற்றுநோய்களை எதிர்க்கும் சாத்தியத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்