கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்று ஒடிசா. இம்மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் உள்ளனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒடிய மொழியில் பேசுபவர்கள்.
மௌரியப் பேரரசர் அசோகர் படையெடுத்த பண்டைய கலிங்கப் பேரரசு நவீனகால ஒடிசாவின் எல்லைகளுடன் ஒன்றுபட்டுள்ளது.
தனித்துவம் வாய்ந்த கைவினை, கைத்தறிப் பொருள்களைக் கைப்பட தயாரிக்கும் சிறப்பை ஒடிசா மாநிலம் கொண்டுள்ளது.
இந்தப் பாரம்பரியத்தையும் பொருள்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒடிசா மாநில அரசு அரும்பொருளகம் ஒன்றை நிறுவியது.
‘கலா பூமி’ என்றழைக்கப்படும் அந்த 13 ஏக்கர் அரும்பொருளகத்தில் ஒடிசாவின் தொன்மை வாய்ந்த கலாசாரம் பொருள்கள் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிசா மக்கள் பெரும்பாலும் கைவினைப் பயிற்சிகளில் ஈடுபட்டாலும் இது அருகிவரும் கலையாக மாறிவிட்டது.
ஒடிசாவில் இருக்கும் பழங்குடியினர் இன்னும் கலைப்பொருள்களைத் தயாரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர்.
சுடுமட்பாண்டம் (terracotta) கொண்டு செய்யப்படும் பொருள்கள், பாரம்பரிய ஓவியக்கலை, கல் மற்றும் மர வேலைப்பாடுகள், கைவினைப் பொருள்கள், பழங்குடியினர் பொருள்கள் போன்றவற்றை அரும்பொருளகத்தில் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஒடிசாவின் நெசவு மரபை எடுத்துக்காட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறிப் புடவைகள் அரும்பொருளகத்தில் உள்ளன.
கலிங்கா விளையாட்டு அரங்கம்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா விளையாட்டு அரங்கம் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகக் கருதப்படுகிறது.
விளையாட்டு நிகழ்ச்சிகள் அரங்கத்தில் பேரளவில் இடம்பெற்றுள்ளன.
காற்பந்து, ஹாக்கி, டென்னிஸ், ரக்ஃபி போன்ற விளையாட்டுகளுக்கான போட்டிகள் அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன.
ஈராயிரம் இருக்கைகள் கொண்டுள்ள இந்த விளையாட்டு அரங்கத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையங்கள் உள்ளன.
இந்தியாவின் ஆகப் பெரிய விளையாட்டு அறிவியல் நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டாளர்களுக்கு மேம்பட்ட இயன்மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் முதல் மற்றும் தெற்காசியாவின் ஆகப் பெரிய திடல்தட உள்ளரங்கமும் இங்குதான் அமைந்துள்ளது.