கணினி, மடிக்கணினி, தொடு திரையைக் கொண்ட திறன்பேசி, குரல் ஒலியில் இயங்கும் தொலைக்காட்சி என்று மனிதர்களின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல எட்டிப்பார்த்த தொழில்நுட்பம், இன்று மனிதர்களையே விஞ்சும் அளவிற்கு அசுர வளர்ச்சியடைந்துள்ளது.
திரும்பும் திசையெல்லாம் தனது வேர்களை மனிதர்களிடையே ஊன்றி வருகிறது செயற்கை நுண்ணறிவு.
அந்த வகையில், தொழில்நுட்பத்திற்குப் பெயர் பெற்ற பெங்களூரில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்குக் கைகொடுத்துவருகின்றனர் முடிதிருத்தம் செய்யும் ஊழியர்கள்.
முடியையும் தாடியையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாலாண்டாக வடிவமைத்துத் தரும் 22 வயது முகம்மது அஷிம், அண்மையில் கைகளை நோக்கியவாறு ஒரு கேமராவைத் தலையில் அணிந்திருக்கிறார். எல்லாம், அஷிமின் கைவண்ணத்தைக் காணொளியாகப் பதிவுசெய்வதற்குத்தான்.
வாடிக்கையாளர்களின் முகத்தை மறைத்தவாறு அஷிமின் விரல்கள் முடியையும் தாடியையும் எப்படி வெட்டுகின்றன என்பதைப் பதிவு செய்கிறது அந்தக் கேமரா.
நாள் ஒன்றுக்கு ஐந்திலிருந்து ஆறு மணிநேரம் வரை கேமராவைத் தலையில் அணிந்திருக்கும் அஷிம், மிகவும் கவனமாகத் தலையை அதிகமாக அசைக்காமல் தாம் செய்யும் தொழிலை முடிந்தவரை துல்லியமாகப் பதிவுசெய்யவேண்டும்.
இவற்றையெல்லாம் அஷிம் இலவசமாகச் செய்யவில்லை. ஒவ்வொரு காணொளிப் பதிவும் ஒரு வருமானம்.
உலக அளவில் கேமராவை அணிந்துகொண்டு தங்கள் வேலைகளைப் பதிவு செய்யும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் அஷிமும் ஒருவர்.
அஷிம் போன்றோரின் காணொளிகளைப் பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்று சேகரித்து ஒட்டுமொத்தமாகத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கும் விற்கிறது.
அந்த நிறுவனங்களும் அமைப்புகளும் காணொளிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கின்றன. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ராஷ்டான் டெக்னாலஜிஸ்.
“இயந்திர மனித கருவிகளைத் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொரு ஆய்வுகூடமும் தனிப்பட்ட தரவுகளை எதிர்பார்க்கின்றன. தொழில்துறை சார்ந்த பணிகள், வேளாண்மை, வீட்டு வேலைகள், சிறிய வர்த்தகங்கள், மட்பாண்டங்கள் செய்வது, தையல், மெழுகுவர்த்திகள் செய்வது என்று பல்வேறு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன,” என்றார் ராஷ்டான் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷாஹில் பாயிக்.
ஒவ்வோர் ஊழியரும் எட்டிலிருந்து 10 மணிநேரம் வரை பதிவுசெய்யும் காணொளிக்கு ராஷ்டான் நிறுவனம் 5லிருந்து 10 டாலர் தருகிறது.
“பலருக்கு அது பெரிய வருமானம்,” என்றார் பாயிக்.
ஒருசில ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு ஒரு பயனுள்ள கருவி. ஆனால், கூடிய விரைவில் இயந்திர மனிதர்கள் அவர்களின் வேலையைப் பறித்துக்கொள்ளக்கூடும் என்ற அச்சமும் நிலவுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் எதிர்காலத்தில் வரக்கூடிய சிக்கலுக்காக இப்போதைய வருமானத்தை இழக்கவேண்டுமா என்ற எண்ணமும் பெரும்பாலான ஊழியர்களிடையே உள்ளதை அவர்கள் சுட்டினர்.
செயற்கை நுண்ணறிவுக்குக் கட்டுபாட்டை விதிப்பது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
