நிறைவாழ்வை விரும்பும் இடைநிலை இயல்பினர்

2 mins read
b076db3e-27d7-47e6-9c97-f0c6d016a92c
‘ஓட்ரோவர்ட்’ என்பது ‘பிறிதொரு திசையை நோக்குபவர்’ எனும் பொருள் கொண்ட, ஸ்பானி‌‌ய, லத்தீன் மொழிகளின் கலப்புச் சொல்லாகும். - படம்: பிக்சாபே

பார்க்கும் அனைவருடனும் நன்கு பேசிப் பழகும் ‘எக்ஸ்டிரோவர்ட்’, கூச்ச குணமுடைய, இயல்பாகப் பழகாத ‘இன்ட்ரோவர்ட்’ எனவும் இருவகையாகப் பிரிக்கப்பட்ட மனித இயல்புடன் ‘ஓட்ரோவர்ட்’ எனும் புதிய வகையும் தற்போது இணைந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு முதன்முதலில் மனநல மருத்துவர் ஒருவர் பயன்படுத்திய இந்தச் சொல், மனிதகுலம் தனிமையிலிருந்து மொழியின் உதவியால் சமூகத் தொடர்புக்கு மாறியபோதும் இடைப்பட்டதொரு நிலையில் தம்மை நிலைநிறுத்தியவர்களைக் குறிப்பிட்டது.

தற்போது சுயபரிசோதனை, மனநலப் பகுப்பாய்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சொல் பரவலாகத் தொடங்கியுள்ளது.

‘ஓட்ரோவர்ட்’ வகையினர் வெளிப்புற ஓசைகளிலிருந்து வேண்டுமென்றே ஒதுங்கியிருப்பது, சமூகத் தொடர்புகளினால் பதற்றமடைவது ஆகிய குணங்களைக் கொண்டவர்கள் அல்லர்.

மாறாக, எல்லாப் பரபரப்புக்குமிடையே தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே வடிவமைத்துக்கொள்பவர்கள்.

பலர் கூடிப் பேசி, சிரிக்கும் பரபரப்பான காப்பிக்கடையில், தனிமையில் அமர்ந்து காப்பி பருகுபவர்கள்; ஒருபுறம் கனவு, மறுபுறம் உண்மைநிலை என நிறைவான மனப்போக்கைக் கொண்டவர்கள்.

பிறருடன் பழகுவதால் சோர்வடைவதும் இல்லாமல், தனிமையைப் பிரதானமாகவும் விரும்பாமல் இருப்பவர்கள் இந்த இயல்பினர். குழுக்களில் இருந்தாலும் தனித்துச் செயல்படக் கூடியவர்கள். அதே நேரத்தில், பிறரது கவனத்தை ஈர்க்கவும் முயற்சிப்பவர்களும் அல்லர்.

இவர்களைக் குறிப்பிட்ட இரு பிரிவுகளுக்குள் அடங்காதவர்கள் என நிபுணர்கள் வரையறுக்கின்றனர்.

சுதந்திரமாக, கூட்டுக்குள் அடைபடாத, அதே நேரத்தில் உள்ளுணர்வுகளோடு பொருந்திப்போகும் வாழ்வை வாழ்பவர்கள் இவர்கள்.

சமூக ஊடகம், உறவு, நட்பு வட்டம், அவை தரும் அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதைத் தாண்டி, அதில் இருந்துகொண்டே பகுத்தறிவுடன் செயல்படுபவர்கள் இவ்வகையினர்.

மிகையான இணைப்பு, கவன ஈர்ப்பு ஆகியவற்றுக்கு அதிக மதிப்பு கொடுக்கும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், ‘ஓட்ரோவர்ட்’ இயல்பு சிறந்தது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது.

மகிழ்ச்சி என்பது வெளிப்புற இசைவுகளிலும் ஒப்புதல்களிலும் இல்லை, அது மனத்தைப் பொறுத்தது எனும் கருத்தை இது நினைவூட்டுவதாகப் பலரும் பேசத்தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்