இந்திய உணவு விரும்பிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது ‘சிங்கப்பூரின் முதல் வாத்து பிரியாணி’ எனும் உணவுக்கடைப் பதாகை.
லிட்டில் இந்தியாவின் சாம் லியோங் ரோட்டில் உள்ள டிரையோ வணிக வளாகத்தின் வெளிப்புறம் அமைந்துள்ள ‘பாமாஸ் கிச்சன்’ இந்தப் பதாகை மூலம் தங்கள் வாத்து பிரியாணியை வருகையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
பல்லினக் கலாசாரத்தின் உணவு வகைகளைச் சுவைக்க ஏராளமான வாய்ப்புள்ள சிங்கப்பூரில் வாத்து இறைச்சி புதிதல்ல. எனினும், இந்திய உணவுகளில் வாத்திறைச்சி சேர்க்கப்படுவது சற்றே அரிதானது.
‘பீக்கிங் டக்’ எனப்படும் பிரபல உணவு வகை உள்பட பல வகைகளில் சமைக்கப்படும் வாத்து இறைச்சி, சீன உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால், கலாசாரக் காரணிகள், இறைச்சியின் தன்மை, எளிதில் கிடைக்காதது, சுவை, விருப்பம் என நீண்டுகொண்டே செல்லும் பட்டியலில் ஏதேனும் சில காரணங்களால் இந்திய உணவுகளில் மீன், கோழி, ஆட்டிறைச்சியைப் போல வாத்து இறைச்சிக்கு அவ்வளவாக இடம் கொடுக்கப்படவில்லை.
அழகுற அலங்கரிக்கப்பட்டு எட்டு முதல் ஒன்பது மேசைகளுடன் கூடிய இந்தச் சிறு உணவுக்கடையின் பிரத்தியேக உணவாக மாறியுள்ளது வாத்து பிரியாணி.
சுற்றுப்பயணிகள் அதிகம் விரும்பி இந்தப் பிரியாணியைச் சுவைப்பதாகவும், அவர்களது சுவைக்கேற்றபடி இது தயாரிக்கப்படுவதாகவும் கூறினார் இக்கடையின் உரிமையாளர் திருவாட்டி பாமா, 77.
அவர், இந்த வாத்து பிரியாணியைப் பெரும்பாலும் சீனர்கள் உண்பதையும் இந்தியர்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“பாசுமதி அரிசி தனியே வடிக்கப்பட்டு, மசாலா வகைகளும், வாத்து இறைச்சியும் தனித்தனியே வேகவைக்கப்பட்டு, பின்னர் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குறைந்தளவு நெருப்பில் தயாரிக்கப்படும் இந்த வாத்து பிரியாணி, பச்சை மிளகாயின் நறுமணம், சுவையுடன் கமகமக்கும்,” என்றார் அவர்.
தங்கள் உணவுக்கடையில், ‘எம்எஸ்ஜி’ எனும் அஜினோமோட்டோ, உணவு கெடாமல் வைக்கும் பதனப் பொருள்கள், செயற்கை வண்ணம் என எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்றார் கடை உரிமையாளர் பாமா.
கடந்த 2019ஆம் ஆண்டு இக்கடையைத் தொடங்கிய அவர், அப்போதிலிருந்தே தங்கள் உணவுப் பட்டியலிலும், வருகையாளர்களின் விருப்பப் பட்டியலிலும் வாத்து பிரியாணிக்கு இடமிருப்பதாகச் சொன்னார்.
அங்கிருந்து இரு கிலோமீட்டர் தொலைவில் நார்த் பிரிட்ஜ் ரோட்டில் நூறாண்டு பழமையான, இப்போதுள்ள பிரியாணி கடைகளுக்கு முன்னோடியாகத் திகழும் ‘இஸ்லாமிக்’ உணவகம், 1921 ஆம் ஆண்டிலிருந்தே வாத்து பிரியாணி வழங்கி வருகிறது.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து தற்போது வரை மூன்று தலைமுறையாக நடத்தப்படும் இந்த உணவகம், பல்வேறு பழங்கதை பேசும் புகைப்படங்களால் நிறைந்துள்ளது.
வாத்து தொடர்பாக மிகவும் ரசனையுடன் பேசினார் 2008ஆம் ஆண்டிலிருந்து இக்கடையைப் பொறுப்பேற்று நடத்திவரும் உரிமையாளர் கலீல் ஏ. வஹாப், 63.
வாத்து தனக்கு மிகவும் பிடித்தமான பறவை என்றும், வாத்து பொம்மைகளை விரும்பிச் சேகரிப்பதாகவும் கூறினார்.
நீருக்கு மேல் நீந்தும் வாத்துகளின் அமைதியையும் மகிழ்ச்சியையும் பார்ப்பதுபோல, நீருக்கடியில் நீரோட்டத்தை எதிர்த்து நீந்த அது நடத்தும் போராட்டத்தை யாரும் கவனிப்பதில்லை என்று கூறிய அவர், “மக்களை நாம் பார்க்கும் விதமும் இத்துடன் பொருந்திப்போகும்,” என்றார்.
பாமாஸ் கிச்சனில் காணப்படும் தனித்துவமான வாத்து பிரியாணி குறித்து பேசியபோது, அக்கடையின் 1962ஆம் ஆண்டு ரசீதைச் சுட்டிக் காட்டி அந்த உணவுப்பட்டியலில் வாத்து பிரியாணி இருப்பதைத் தெரிவித்தார்.
“ஆண்டாண்டுகாலமாக வாத்து பிரியாணி வழங்கி வருகிறோம்,” என்று சொல்லிய கலீல், பெருந்தொற்றுக் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வழங்கப்பட்ட பிரியாணியைத் தற்போது அன்றாடம் வழங்கி வருவதாகவும் சொன்னார். டெஸ்கர் ரோட்டில் உள்ள தங்களது கிளை உணவுக் கடையிலும் அது கிடைக்கும் என்றார்.
வாத்து இறைச்சியைத் தோலுடன் வைத்து 25 வகை மசாலாப் பொருள்கள் சேர்த்து நீண்ட நேரம் மிதமாகச் சமைக்கப்படும் இக்கடையின் பிரியாணி, மத்திய கிழக்கு நாடுகளின் சுவையை ஒத்ததாக அமைந்துள்ளது.
கடந்த 1921ஆம் ஆண்டிலிருந்தே வாத்து பிரியாணி தவிர புகழ்பெற்ற மைசூர் ஆட்டிறைச்சியையும் வழங்கும் இந்த உணவகம், இந்திய, சீன, மலாய் என அனைத்து இன வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளதாகக் கூறினார் கலீல்.