சிங்கப்பூரில் கலாசாரப் பதக்கம் பெற்றவரும் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞருமான காலஞ்சென்ற நீலா சத்தியலிங்கமும் அவரது கணவர் சத்தியலிங்கமும், தங்களின் நற்பண்புகள் நிறைந்த ஆளுமையால் பலரின் இதயங்களில் நிலைபெற்று வாழ்கின்றனர்.
அவ்வகையில், உலகப் புகழ்பெற்ற பரதக் கலைஞரும் விற்பன்னருமான பத்மா சுப்ரமணியம், தம் நினைவில் திருவாட்டி நீலா சத்தியலிங்கம் வாழ்வதாகக் கூறுகிறார்.
“மிகப் பெரிய மேதையாகத் திகழ்ந்தார் திருவாட்டி நீலா. எல்லாரையும் அரவணைக்கும் சிங்கப்பூரைப்போலவே அரவணைக்கும் பண்புமிக்கவர் அவர்,” என்றார் 83 வயது டாக்டர் பத்மா.
திருவாட்டி நீலாவின் கணவர் அமரர் சத்தியலிங்கத்தின் தந்தை தம் தந்தைக்கு நெருக்கமானவர் என்றும் மூன்று தலைமுறைகளாக தங்கள் குடும்பங்கள் அணுக்கமாக இருந்து வந்ததாகவும் அத்தம்பதியரை நினைவுகூரும் விழாவுக்காக சிங்கப்பூர் வந்துள்ள டாக்டர் பத்மா குறிப்பிட்டார்.
பிப்ரவரி 6ஆம் தேதி சிங்கப்பூர் வந்த டாக்டர் பத்மா, பிப்ரவரி 8, 9 ஆம் தேதிகளில் விரிவுரை ஆற்றினார். பிப்ரவரி 13ஆம் தேதி ஆசிய நாகரிகங்கள் அரும்பொருளகத்தில் விரிவுரை நடத்திய பிறகு அவர் தமிழகம் திரும்புவார்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைப்பள்ளியின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமாக இருந்தார் திருவாட்டி நீலா சத்தியலிங்கம்.
1938ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பு நகரில் பல் மருத்துவர் குடும்பத்தில் பிறந்த அவர், ஐந்து வயதிலிருந்து பரதநாட்டியம், கதக், கதகளி, மணிப்புரி போன்ற நடனங்களைக் கற்றுக்கொண்டார்.
பின்னர் 18ஆம் வயதில் சென்னையிலுள்ள புகழ்பெற்ற கலைப்பள்ளியான கலாக்ஷேத்ராவில் பயின்றார். அங்கு பயின்ற திரு எஸ். சத்தியலிங்கத்தைத் திருமணம் செய்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் 1970களில் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தனர். திருவாட்டி நீலா, 2017ல் தமது 79 வயதில் இயற்கை எய்தினார்.
திரு சத்தியலிங்கம், திருவாட்டி நீலா குறித்துக் கூறிய டாக்டர் பத்மா, “அத்தம்பதியரின் நோக்கம் என்றுமே பரந்ததாக இருந்தது. இந்தியாவிலிருந்து பல்வேறு கலைஞர்களை வரவழைத்துப் பயிலரங்குகளில் கற்பிக்க வைத்தனர். அப்படித்தான் அவர்கள் என்னையும் இங்கு அழைத்திருந்தனர்,” என்றார்.
“நீலா அம்மா, மிகப்பெரிய படைப்பூக்க அறிவாளி. தன்னலமற்றவர். நான் தொடங்கி வைத்த பரதா-இளங்கோ அறக்கட்டளை அமைப்பு, அவருக்கு ‘பரதபுத்ரி’ என்ற விருதை வழங்கியது. இது அனைவர்க்கும் வழங்கப்படும் விருதன்று. இதுவரையில் இந்த விருதைப் பெற்ற மூன்று பேரில் நீலாவும் ஒருவர்,” என்றார் டாக்டர் பத்மா.
பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள டாக்டர் பத்மா சுப்பிரமணியம், தமிழ் முரசுக்கு அளித்த நேர்காணலின்போது சிங்கப்பூர் பற்றிய தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
சிங்கை பற்றிய இனிய நினைவுகள்
இந்தியாவின் இரண்டாவது ஆக உயரிய விருதான பத்ம விபூஷனைக் கடந்த ஆண்டு பெற்ற டாக்டர் பத்மா, 100க்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். நடனக் கலைஞராக மட்டுமன்றி நடனத்துறை ஆராய்ச்சியாளராகவும் உள்ளார் இவர்.
சிங்கப்பூர்க் கலை விழாவுக்காக இரண்டு முறை நடன அமைப்பு செய்ததாகக் குறிப்பிட்ட டாக்டர் பத்மா சுப்பிரமணியம், 1982ல் வள்ளி கல்யாணம் என்ற நாட்டிய நாடகத்தை அமைத்ததை நினைவுகூர்ந்தார்.
“கலாசாரப் பன்முகத்தன்மை என்பது என் மனத்திற்கு நெருக்கமான ஒன்று. சிங்கப்பூர் அரசாங்கம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அப்போது கண்டறிந்தேன்,” என்று முகமலரக் கூறினார்.
சிங்கப்பூரின் பிரபல சீன இசை நாடகக் கலைஞர் சுவா சூ போங் அந்நாடகத்தில் நம்பிராஜனாகவும் மோகினி கதாபாத்திரத்தில் சீன நடனக் கலைஞர் கான் பெங் லியும் இடம்பெற்றார்கள் என்று அவர் கூறினார்.
படைப்புக்குப் பேரளவு கைகொடுத்த திருவாட்டி நீலா சத்தியலிங்கத்தின் மாணவர்கள் மட்டுமன்றி, சிஃபாஸ், பாஸ்கர் கலைப்பள்ளி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த இந்திய நுண்கலைஞர்களுடன் சீன, மலாய், இந்திய நடனமணிகளும் இசைக்கலைஞர்களும் அதில் இடம்பெற்றனர்.
“நான் புனைந்த இசைப்படைப்புகளை, இங்குள்ள பல்லின இசைக்குழு படைப்பதற்கு அமரர் திரு சத்தியலிங்கம் வழிநடத்தினார். திருநெல்வேலியில் பழங்காலத்தில் பாடப்பட்ட அம்மன் கொண்டாடிப் (சாமியாடி) பாட்டு எனது அண்ணியும் நாட்டுப்புற இசை ஆராய்ச்சியாளர் சியாமளாவும் மீட்டெடுத்து ஆராய்ந்த பாட்டு ஒன்றை இங்கு எடுத்து வந்தேன். இங்குள்ள சீன இசைக்கலைக்குழு அதை இசைத்தது,” என்றார் டாக்டர் பத்மா.
மொழி, கலாசாரம் குறித்த தம் கண்ணோட்டத்தை விளக்கிய அவர், தமிழ்மொழியைக் குறுகிய அளவிலான கோட்பாடுகளுக்குள் நினைக்கத் தம்மால் முடியவில்லை எனக் கூறினார். “காந்தியடிகளின் கூற்று ஒன்று என் நினைவுக்கு வருகிறது: என் சன்னல்கள் அத்தனையும் திறக்கிறேன். உலகெங்கிலிருந்தும் காற்று இங்கு வந்து சுழலட்டும். ஆனால் அந்தக் காற்று, என் காலை வாரிவிட அனுமதிக்க மாட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசியாவில் விரிந்துள்ள இந்தியப் பாரம்பரியம்
சிங்கப்பூர் மட்டுமன்றி ஆசியா முழுவதிலும் கலாசார நல்லிணக்கத்தை உணர்வதாகக் கூறும் டாக்டர் பத்மா சுப்ரமணியம், தாய்லாந்தில் பாவை நோன்புக்காக அந்நாட்டு நடனமணிகள் அறுவருடன் தமிழக நடனமணிகளை ஆட வைத்து அங்குள்ள திருப்பாவை-திருவெம்பாவை விழாவுக்குப் புத்துயிர் அளித்ததை நினைவுகூர்ந்தார்.
ஆசியக் கலாசாரத்தில் ஆன்மிக, பண்பாட்டு அடித்தளம் இருப்பதைக் குறிப்பிட்டார் டாக்டர் பத்மா. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள் தங்கள் வேர்களை மறவாமல் இருப்பதற்கு இங்குக் கொண்டாடப்படும் தைப்பூசத்தை உதாரணமாகக் கூறினார்.
“பரம்பரைப் பண்புகளைச் சிங்கப்பூர் இந்தியர்கள் கைவிடவில்லை. அதேநேரத்தில் மற்றவர்களையும் அரவணைத்து அவர்கள் நல்லிணக்கத்தைக் காப்பதால் இந்நாடு இவ்வளவு செழிப்பாக உள்ளது,” என்றார்.
கற்பூரம் போன்ற புத்திக்கூர்மை கொண்டுள்ள வருங்காலத் தலைமுறையினரிடம் திறமைக்குப் பஞ்சமில்லை என்று கூறிய டாக்டர் பத்மா, அவர்கள் தங்கள் பணிவை வளர்த்துக்கொள்ளும்போது மேன்மேலும் வளர்வர் என்றார்.
“அத்துடன், பரதநாட்டியம் போன்ற கலைகளை ஆசிரியர்கள் ஆன்மிக உணர்வுடன் கற்பிக்கவேண்டும். இயந்திரம்போல உடல், கை, கால்கள் ஆகியவற்றை அசைப்பதால் மட்டும் (நடனமணியாக) வளர முடியாது. அவ்வாறு வளர்ந்தாலும் அது தவறான வளர்ச்சியாகும். ஆன்மிகத்தைப் புரிந்துகொண்டு வருங்காலத் தலைமுறையினர் வளரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்,” என்று டாக்டர் பத்மா கூறினார்.