இந்திய மருத்துவ நிபுணர்களுக்கு அந்திமகாலப் பராமரிப்பு முதன்மைப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம், முதற்கட்டமாக நான்கு நாள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சினில் நடைபெற்ற அறிமுகத் திட்டத்தையடுத்து, சிங்கப்பூரிலிருந்து சென்ற ஐந்து நிபுணர்கள் மார்ச் 3 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பயிலரங்குகளை வழிநடத்தினர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தை வழிநடத்தும் கூ டெக் புவாட் மருத்துவமனையின் அந்திமகாலப் பராமரிப்பு மூத்த ஆலோசகரான மருத்துவர் ராமசுவாமி அகிலேஸ்வரன், முதல் பயிலரங்கை வழிநடத்தினார்.
அந்திமகாலப் பராமரிப்பு குறித்த அறிமுகப் பயிலரங்கைத் தொடர்ந்து, ‘இன்ஸ்பைரிங் கனெக்ஷன்ஸ்’ எனும் பயிற்சி நிறுவனத்தின் கற்றல் தீர்வு நிபுணரான சூசன் லிம், பயிற்சியளிப்பு முறை குறித்தும் தொடர்புத் திறன் குறித்தும் பயிலரங்கு நடத்தினார்.
இரண்டாம் நாளன்று, கேரள மாநிலத்தில் இயங்கிவரும் மூத்தோர், அந்திமகாலப் பராமரிப்பு மையத்திற்குச் சென்று அங்கு நடைமுறையிலுள்ள திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டனர்.
இதனை வழிநடத்திய மருத்துவர் அகிலேஸ்வரன், இது நல்ல அனுபவம் என்றார்.
“சிங்கப்பூரில் அளிக்கப்படும் பராமரிப்பை ஒப்பிடுகையில் இது மாறுபட்டது. மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்றாலும், அன்பும் அரவணைப்பும் நிறைந்திருந்தது. அதுவே பராமரிப்பின் அடிப்படை. பிற திறன்களை மேம்படுத்த பயிற்சிகள் உதவும்.
“பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்களுக்கு இது கண்திறப்பாக அமைந்திருக்கும். எங்கெல்லாம் தேவைகள் இருக்கிறதோ, அவற்றைப் பூர்த்திசெய்ய இதுபோன்ற அமர்வுகள் உதவும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்ததையடுத்து, வலி மேலாண்மை குறித்த அமர்வை வழிநடத்தினார் மருத்துவர் அகிலேஸ்வரன். பலவிதமான வலிகள், அதற்குரிய தீர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பொதுவாக மூத்தோருக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் குறித்த அமர்வை வழிநடத்தினார் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமையின் ஆதரவுப் பராமரிப்பு, அந்திமகாலப் பராமரிப்பு ஆலோசகர் லிம் லிங் யின்.
விரிவுரைகள், குழு விவாதங்கள், விளக்கக் காட்சிகள், ஆலோசனைகள், உதவிக் குறிப்புகள் என பலவற்றை உள்ளடக்கிய இப்பயிலரங்குகளைத் தொடர்ந்து, இசைவழி சிகிச்சை குறித்த அமர்வும் நடைபெற்றது. இசைவழி சிகிச்சை நிபுணர் மே இங், இந்தியாவில் இசைவழி சிகிச்சை அளித்துவரும் புவனேஸ்வரி இருவரும் இதனை வழிநடத்தினர்.
இசைவழி உணர்வுகளைத் தூண்டுவது, நோயாளிகள் வலியை மறக்கச் செய்வது உள்ளிட்டவை குறித்த காணொளிகள், பாடல்கள், எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.
மார்ச் 6ஆம் தேதி வலி, மூச்சுத்திணறல், ‘டெலிரியம்’ எனும் ஒருவகை குழப்ப, மயக்கநிலை, அவசரநிலைகள் என பல தலைப்புகளின்கீழ் குழு விவாதங்களுடன் கூடிய பயிலரங்கு நடைபெற்றது.
பங்கேற்பாளர்கள் குழுக்களாக படைத்த விளக்கக் காட்சியுடன் முதற்கட்ட பயிலரங்குகள் முடிவடைந்தன.
மூன்றாண்டுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ள இப்பயிற்சித் திட்டத்தின்கீழ், அடுத்தடுத்து நேரடி, இணையவழி பயிலரங்குகள் நடைபெறும். இந்திய மருத்துவத் துறை நிபுணர்கள் சிங்கப்பூருக்கு வந்து இங்குள்ள நடைமுறைகளை நேரடியாகப் பார்த்துக் கற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் என சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் தெரிவித்தது.

