ஒரு முடிவில் ஒரு தொடக்கம்: ‘பறை’ நாடகம்

3 mins read
நாத்து நட்டு, கள பறிச்சு! தன்னேனன்னானே!!   நாள் முழுதும் வேல செஞ்சோம்! தன்னேனன்னானே!!!
34f91ee0-1b2f-4f95-9211-e55de756b47d
காளை மாடு ‘தங்கத்துடன்’, ‘மணி’ - நாடகக் காட்சி - படம்: லாவண்யா வீரராகவன்

வேளாண்மை, மாடுகள், பொங்கல் கொண்டாட்டம், பறை இசை, மஞ்சுவிரட்டு, அறுசுவை உணவு, இயற்கையுடன் இயைந்த வாழ்வு எனக் கிராமத்து வாழ்வியலைக் கண்முன் நிறுத்தியது அண்மையில் நடைபெற்ற ‘பறை’ நாடகம்.

‘ஏகேடி கிரியேஷன்ஸ்’ கலை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நாடகம் ஆகஸ்ட் 16ஆம் தேதி ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்றது.

பள்ளி, கல்லுரி மாணவர்கள் உட்பட ஏறத்தாழ 20 பேர் இணைந்து நடத்திய இந்நாடகம் மூன்று முறை மேடையேறியது. பள்ளி மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இதனைக் கண்டுகளித்தனர்.

பார்வையாளர்களில் இருந்த சிறுவர்களை நாடகத்தில் பங்கேற்கச் செய்த குழுவினர்.
பார்வையாளர்களில் இருந்த சிறுவர்களை நாடகத்தில் பங்கேற்கச் செய்த குழுவினர். - படம்: லாவண்யா வீரராகவன்

வீதியில் கதை சொல்லும் இரு பெண் ‘கட்டியங்காரர்கள்’ இசையுடன் கூடிய தெருக்கூத்து பாணியில் கதையின் முன்னுரையைப் பாட, பல்வேறு கதாபாத்திரங்களுடன் கண்முன் விரியத் தொடங்கியது அந்நாடகம்.

கிராமத்து விவசாயிகளான பெற்றோரின் மகன் ‘மணி’, அவர்கள் வீட்டிலிருக்கும் காளைக்கன்றான ‘தங்கத்துடன்’ விளையாடி, உறவாடி வளர்வதையும் அவர்களுக்கிடையிலான பிணைப்பையும் எடுத்துரைத்தது நாடகத்தின் முற்பகுதி.

அந்த விவசாயி அனுபவிக்கும் சிரமங்களையும் மாட்டின் இறப்பையும் விவரித்த நாடகம், பின்னர் மாட்டின் தோல் பறை எனும் இசைக் கருவியாக மாறி மக்களை மகிழ்விப்பதாக முடிவடைந்தது.

விவசாயம் செய்யும் முறை குறித்துக் கதை மூலம் விளக்கியதும் பார்வையாளர்களில் இருந்த சிறுவர்களை நாடகத்தினுள் அழைத்துப் பங்கேற்கச் செய்ததும் கூடுதல் சிறப்பு.

கட்டியங்காரர்களுடன் கதாபாத்திரங்கள்.
கட்டியங்காரர்களுடன் கதாபாத்திரங்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

‘கணீர்’ குரலில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதுடன் பொங்கல் காட்சிகளில் தவில், பறை என இசைக்கருவிகளை வாசித்தும் நடனமாடியும் அசத்தினார் ‘மணி’ கதாபாத்திரத்தில் ‘வாழ்ந்த’ அறின் ஜெய் கண்ணன்.

நேசம், நெகிழ்ச்சி, சோகம் என அனைத்து உணர்ச்சிகளையும் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்தினார் ‘மணி’.

வேளாண்மை உள்ளிட்ட தமிழர்களின் கலாசாரங்களையும் பிறப்பு, இறப்புத் தத்துவங்களையும் சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த கலைஞரான காலஞ்சென்ற ஆனந்த கண்ணன், திரையில் தோன்றி நாடகத்துக்கு முன்னுரை அளித்தது பார்வையாளர்களின் இதயங்களைக் கனக்கச் செய்தது.

நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடிய குழுவினர்.
நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடிய குழுவினர். - படம்: லாவண்யா வீரராகவன்

“பறையை மையமாக வைத்து, அவரது எண்ணத்தில் உருவான கதைக்கு உயிர்கொடுக்க மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்துச்சென்று, சிக்காட்டம், கைச்சிலம்பாட்டம், சாட்டைக்குச்சி, தேவராட்டம் உள்ளிட்ட மரபுக் கலைகளை உரிய ஆசான்களிடம் கற்று வந்தோம்.

“கற்றவற்றைக் கோத்து நேர்த்தியான நாடகமாக சிங்கப்பூர்த் தமிழர்களிடம் எடுத்துச் சென்றது நிறைவான அனுபவம்,” என்றார் ஏகேடி கிரியேஷன்ஸ் இயக்குநர் ராணி கண்ணா.

மரபுக் கலைகள், தமிழ்க் கலாசாரத்தின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றைப் பார்த்தே வளர்ந்ததாகச் சொன்ன அவா கண்ணன், இந்நாடகத்தைத் திட்டமிட்டபடி சிறப்புடன் அரங்கேற்ற, குழுவினர் அயராது உழைத்ததைச் சுட்டினார்.

இதனை ஒரு நல்ல கற்றல் வாய்ப்பாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

நாடகத்தில் பொங்கல் கொண்டாட்டக் காட்சி.
நாடகத்தில் பொங்கல் கொண்டாட்டக் காட்சி. - படம்: லாவண்யா வீரராகவன்

நாடகத்தில் நடித்த, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழாசிரியர்களுக்கான பட்டயக் கல்வி பயிலும் மாணவிகள் சாந்தினி பரமசிவன், கிரிஷ்மிதா உள்ளிட்டோர், “இந்நாடகம் வாயிலாகக் கற்றுக்கொண்டவை, தங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் பாரம்பரியக் கூறுகளையும் சுவாரசியமான முறையில் கற்றுத்தரப் பேருதவியாக இருக்கும்,” என்றனர்.

ஓய்வுகாலத்தில் இதுபோன்ற தமிழ்க் கலைகளைப் போற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் இளையர்களை ஊக்கப்படுத்துவதும் மிகுந்த இன்பமளிப்பதாகத் தெரிவித்தனர் சுவா சூ காங்கிலிருந்து வந்திருந்த ஞானம்-உடையப்பன் இணையர்.

ஆனந்த கண்ணனின் எண்ணத்தில் உருவான படைப்பைக் காணவந்ததாகச் சொன்ன பத்மாவதி-ராஜேந்திரன் இணையர், மாணவர்கள் பலரும் திறம்பட நடித்து நாடகத்தை மேலும் சிறப்பித்ததாகக் கூறினர்.

நாடகத்தைப் பார்த்த சிறுவர்கள் சக்தி, துர்கேஷ் இருவரும் நாற்று நடுவது போன்றும் களை பறிப்பது போன்றும் நடித்ததும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடியதும் உற்சாகமளித்ததாகக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்