சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் 755,000 டன் உணவு விரயம் ஏற்பட்டது என்றும், அதில் 18 விழுக்காடே மறுசுழற்சி செய்யப்பட்டது என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறுகிறது.
குறிப்பாக, கொவிட்-19 காலத்திலும் அதைத் தொடர்ந்தும் பொதுமக்கள் பலரும் இணையத்தில் உணவுப் பொருள்கள் வாங்கியதால், சில்லறை வர்த்தகர்களுக்கும் அவர்களுக்கு விநியோகிப்பவர்களுக்கும் உணவுப் பொருள்கள் மிஞ்சின. அவை காலாவதித் தேதியையோ சிறந்த நிலையிலிருப்பதற்கான காலக்கெடுவையோ நெருங்கும்போது தூக்கியெறியப்பட்டன. சில உணவு, பானங்கள் சேதமடைந்ததாலும் மொத்தமாக வீசப்பட்டன.
அவற்றுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில், ஜனவரி 2022ல் தொடங்கியது ‘மோனோ’ (MoNo) எனும் சமூக நிறுவனம். அதற்கு தேசிய சுற்றுப்புற அமைப்பும் தேசிய இளையர் மன்றமும் நிதி ஆதரவு வழங்குகின்றன.
கடந்த ஜூலை மாதத்தில் சைனாடவுனிலிருந்து தேக்கா பிளேசின் முதல் அடித்தளத்திற்கு இடம்பெயர்ந்த ‘மோனோ’ கடையில், ‘பெஸ்ட் பிஃபோர்’ தேதியை நெருங்கும் அல்லது கடந்த உணவு, பானங்களைப் பெறலாம்.
இவை காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்று விரைவில் கெடாதவை; உணவுகெடாப் பதனம் (Aseptic packaging), உயர்வெப்பப் பதனம் (UHT), போன்ற முறைகள்மூலம் ‘பெஸ்ட் பிஃபோர்’ தேதியையும் தாண்டி கூடுதல் காலம் நீடிக்கக்கூடியவை.
கடைக்குள்ளே இப்பொருள்களுக்குத் தனித்தனியாக விலை குறிப்பிடப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ள பெட்டிகளைத் தேர்ந்தெடுத்து, குலுக்கினால் விழாத அளவிற்குப் பொருள்களை நிரப்பலாம். ஒவ்வொரு பெட்டி அளவுக்கும் பரிந்துரைக்கப்பட்ட நன்கொடை வரம்பு உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் மக்கள் பணம் செலுத்துகின்றனர்.
“ஆனால் ஒருவர் தனக்குப் போதிய பணம் இல்லை என்றோ, குறைவாகவோ கூடுதலாகவோ பணம் கொடுக்க விருப்பம் என்றோ கூறினாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் கொடுக்கும் பணம் அந்த உணவுப் பொருள்களுக்கான விலையல்ல. அது நீடித்த நிலைத்தன்மைக்கான அவர்களின் பங்களிப்பு,” என்றார் ‘மோனோ’ இணை நிறுவனர் லொரெய்ன் கோ.
“முதன்முதலில் நாங்கள் தொடங்கியபோது அனைத்தும் இலவசமாக இருந்தன. ஆனால், மக்கள் பொருள்களைப் பெற்றபின் அவற்றைச் சேகரித்து வீணாக்கினர். அதனால் ஒரு வெள்ளிக்கு வழங்கத் தொடங்கினோம். அப்போதும் மக்கள் விலையுயர்ந்தவற்றையே எடுத்தனர். அதனால் 80 விழுக்காட்டுத் தள்ளுபடியில் விற்றும் பார்த்தோம். பின்பு இந்த பெட்டி முறைக்கு மாறினோம்,” என்றார் ‘மோனோ’வின் மற்றோர் இணை நிறுவனர் லியனார்ட் ஷீ.
தொடர்புடைய செய்திகள்
குறிக்கப்பட்டுள்ள தேதியை கடந்தாலும் உண்ணலாம்
“உணவுப் பொருள்களில் குறிக்கப்படும் தேதியைக் கண்டு, அந்தத் தேதிக்குப் பின் அந்த உணவு உட்கொள்வதற்குப் பாதுகாப்பானதல்ல எனப் பலரும் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். ‘இந்த தேதிவரை சிறந்த நிலையில் இருக்கும்’ (பெஸ்ட் பிஃபோர்) எனப் பதிக்கப்பட்டிருந்தாலும், சரியாகப் பதப்படுத்தியிருந்தால் அதைத் தாண்டியும் அந்த உணவு உட்கொள்ளும் நிலையில் இருக்க வாய்ப்பு உண்டு.
“அதனால் ‘பார், நுகர், சுவை’ என்ற வழிமுறைமூலம் உணவுப் பொருள்கள் இன்னும் நல்ல நிலையில் இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். உற்பத்தியாளர்களும் வழங்குநர்களும் எப்பொருள்கள் எப்பொழுதுவரை நீடிக்கும் என்றும் எங்களுக்கு ஆலோசனை வழங்குவர்,” என்றார் லியனார்ட்.
உதாரணத்திற்கு, பிஸ்கட்டுகள், குக்கீஸ் போன்றவை தேதி கடந்தாலும் சரியாகப் பத்திரப்படுத்தப்பட்டிருந்தால் அதிகபட்சம் மென்மையாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“எங்கள் தொண்டூழியர்களும் நாங்களும் உணவுப் பொருள்களை நாங்களே சோதித்தும் பார்க்கிறோம். மக்களும் தாங்கள் எடுத்துச் சென்ற பொருள்கள் ஏதேனும் காலாவதியானதாகக் கருதினால் உடனே எங்களிடம் தெரிவித்து, வேறொன்றை எடுத்துச் செல்லலாம்,” என்றார் லியனார்ட்.
ஆனால், வயதில் மிகக் குறைந்தவர்களும் மூத்தோரும், கர்ப்பிணிப் பெண்களும் ஏதேனும் ஒவ்வாமை (allergy) கொண்டோரும் இப்பொருள்களைத் தவிர்க்கும்படி அவர் வலியுறுத்தினார்.
‘worthy.mono.sg’ எனும் இணையத்தளத்தையும் தொடங்கி, அதன்வழி மக்களுக்கு இலவசப் பொருள்களையும் வழங்கிவருகிறது ‘மோனோ’. மக்களும் தாங்கள் ஏதேனும் நன்கொடையாக வழங்கவோ பெறவோ விரும்பினால் அத்தளத்தை நாடலாம்.
உணவுக் கட்டுப்பாடுகள் அதிகம்
தற்போது இங்கிலாந்திலும் அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் ‘பெஸ்ட் பிஃபோர்’ தேதியைத் தாண்டியும் உணவுவகைகள் கடைகளில் விற்கப்படலாம். இங்கிலாந்தில் சில கடைகள் ‘பெஸ்ட் பிஃபோர்’ தேதியைக் காட்டுவதையே நிறுத்தியுள்ளன.
ஆனால், சிங்கப்பூரில் சட்டப்படி பெஸ்ட் பிஃபோர் தேதி, காலாவதித் தேதி, பயன்படுத்துவதற்கான இறுதித் தேதி, ஆகிய தேதிகளைத் தாண்டி எந்த உணவும் விற்கப்படக்கூடாது என சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் 90 விழுக்காட்டுக்கும் மேலான உணவை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றில் சில நாடுகள் அனைத்துலகத் தரநிலைகளின் அடிப்படையில் ‘பெஸ்ட் பிஃபோர்’, காலாவதித் தேதிகளைக் குறிப்பிடுவதில்லை. அதனால், சிங்கப்பூரில் எச்சரிக்கை கருதி, அனைத்தும் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
இதனால் உணவு விரயமாவதால், ‘பெஸ்ட் பிஃபோர்’ தேதி குறித்து சிங்கப்பூர் சட்டம் இன்னும் மேம்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூடுதல் வழங்குநர்கள் உணவு விரயத்தைத் தடுக்க முன்வருவதைத் தாம் விரும்புவதாகவும் கூறினார் லொரெய்ன்.
“கண்டிப்பான சட்டம் ஒருபுறம், உற்பத்தியாளர்கள் தங்கள் பெயரைத் தற்காக்கவும் உணவுவகைகளை வீசுகின்றனர்,” என்றார் அவர்.
தொண்டூழியர்களின் இன்றியமையாப் பங்கு
தொண்டூழியர்களின் உதவியால் ‘மோனோ’ அன்றாடம் பகலில் தொடங்கி இரவுவரை இயங்கிவருகிறது.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருந்து அறிவியல் பயிலும் சு.லோஹித்தா, 19, கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து ‘மோனோ’வில் தொண்டாற்றிவருகிறார்.
“நான் வாரத்தில் இருமுறையாவது பள்ளி முடிந்ததும் இங்கு மூன்று மணிநேரம் தொண்டாற்றுவேன். இங்கு நிறைய கற்றுக்கொண்டேன்,” என்றார் லோஹித்தா.
பள்ளி விடுமுறையில் தொண்டூழிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது ஊர்வி பிரதா, 17, ‘மோனோ’வைப் பற்றி அறிந்துகொண்டார். சுற்றுப்புறத்தைக் காப்பதில், குறிப்பாக மறுசுழற்சியில் நாட்டம் கொண்ட அவருக்கு இது நல்ல வாய்ப்பாகத் தோன்றியது.
“இதன்வழி மக்களுக்கு உணவு விரயத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்,” என்றார் அவர்.
‘மோனோ’ பற்றிய மேல்விவரங்களுக்கு mono.sg இணையத்தளத்தை நாடலாம்.