சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) இரவு 7 மணிக்கு விக்டோரியா சாலையில் அமைந்துள்ள தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள பாசிபிலிட்டி அறையில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட உள்ளது.
இந்நிகழ்வில் திரு அருண் மகிழ்நன், திருவாட்டி நளினா கோபால் இணைந்து தொகுத்துள்ள ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ நூல் குறித்த ஆய்வு இடம்பெறவுள்ளது.
விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றவுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகர் அருண் மகிழ்நன் தொகுப்பாசிரியர் உரை வழங்குகிறார்.
தேசியப் பல்கலைக்கழக ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக அறிவியல் இளங்கலை 4ஆம் ஆண்டு மாணவி அருணா கந்தசாமி நூலாய்வு செய்யவிருக்கிறார்.

