ஒருவர் அணியும் ஆடையே பிறருக்கு அவர்மீது உண்டாகும் முதல் அபிப்ராயத்தை நிர்ணயிக்கும்.
பெரும்பாலான பெண்கள் தாங்கள் உடுத்தும் உடைக்கும் தங்களின் வெளித்தோற்றத்துக்கும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இது ஆண்களுக்கும் பொருந்தும்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் பெண்கள் பிரிவான ‘ஷீ’ (Sisterhood of Entrepreneurs/SHE) சனிக்கிழமை (மே 31) ஆண்களுக்கான உடைகள் பற்றிய ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
வர்த்தகத் தலைவர்களும் நிபுணர்களும் வர்த்தகச் சந்திப்புகளுக்கு எந்த உடைகள் அணிய வேண்டும், ஒருவரின் தோற்றத்துக்கும் சருமத்துக்கும் எந்த வண்ணத்தில் உடைகள் சிறப்பாகப் பொருந்தும் ஆகியவற்றைப் பயிலரங்கு விளக்கியது.
பெண்கள் பிரிவு ஆண்களுக்காக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது சிறப்புமிக்க ஓர் அம்சம்.
’ஷீ’ தலைவரும் தொழில்முனைவருமான ஜாய்ஸ் கிங்ஸ்லி பயிலரங்கை வழிநடத்தினார். தொழிற்சபை இயக்குநர்களில் ஒருவரான விவேக் சாப்ரா சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.
“பல்லாண்டுகளுக்கு முன்பே இந்நிகழ்ச்சி இருந்திருந்தால் நான் என் வர்த்தகத்தில் இன்னும் பல வெற்றிகளைக் கண்டிருப்பேன்,” என நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திரு சாப்ரா.
‘பிஸ்னஸ் ஃபார்மல்’, ‘பிஸ்னஸ் புரொஃபெஷனல்’, ‘பிஸ்னஸ் கேஷுவல்’, ‘வெள்ளிக்கிழமை கேஷுவல்’ ஆகிய நான்கு வகை உடைகள் பற்றி திருவாட்டி கிங்ஸ்லி பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
முறையான வர்த்தகச் சந்திப்புகளுக்கு நீலம், சாம்பல், கறுப்பு ஆகிய நிறங்களிலான மேல்சட்டை, கால்சட்டைகள் பொருத்தமானவை, வெளிர் நிறங்களிலானவை தவிர்க்கவேண்டியவை என்றார் அவர்.
மேல்சட்டை, கால்சட்டை, காலுறை மூன்றும் ஒரே மாதிரி நிறத்தில் இருக்க வேண்டும்; உள்ளே அணியும் சட்டை வெள்ளை, இளநீலம், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் ‘டை’ (tie), சட்டைப்பை சதுரம் (pocket square) போன்றவற்றை அணியாவிட்டாலும் அவை தோற்றத்துக்கு மெருகேற்றும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, சருமத்திற்கேற்ப வண்ணப் பகுப்பாய்வு அங்கம் நடைபெற்றது.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கேற்ற வண்ண உடைகளை ஆராய்ந்து அவற்றைப் பரிந்துரைத்தார் திருவாட்டி கிங்ஸ்லி. நான்கு பருவங்களுக்கேற்ப நிறங்களைப் பிரித்து, அவை ஒவ்வொன்றும் எத்தகைய பண்புடையவர்களுக்குப் பொருந்தும் என்பதையும் அவர் விளக்கினார்.
“உடை அணிவதில் வண்ணப் பகுப்பாய்வுபோல நுட்பமான அம்சங்கள் இருக்கின்றன என இப்பயிலரங்கு எனக்கு உணர்த்தியது,” என்றார் தார்சான் அனைத்துலக நிறுவனத்தின் தோற்றுநர் வி ஜி பாலச்சந்தர்.
இது பள்ளியில் கற்கக்கூடிய விஷயமன்று என்றும் தன்னைப்போன்ற வர்த்தகத் துறையினருக்கு இது பயனளித்தது என்றும் தொழிற்சபை இயக்குநர்களில் ஒருவரான சுனில் ராய் கூறினார்.
எனினும், தற்போது பல நிறுவனங்களிலும் துறைகளிலும் ‘இப்படித்தான் உடை அணிய வேண்டும்’ என்ற கட்டுப்பாடு இருப்பதில்லை என்றார் ‘கன்டென்ட்வர்க்ஸ்’ விற்பனை, சந்தைப்படுத்துதல் இயக்குநர் த.சண்முகரத்தினம்.
“ஓர் உடை அணிந்து கண்ணாடியில் பார்க்கும்போது உங்களுக்கே மகிழ்ச்சியாக உள்ளதா? அப்படியென்றால் அதுதான் உங்களுக்கான உடை,” என்றார் அவர்.
இதையடுத்து, இதே நிகழ்ச்சி சனிக்கிழமை ஜூன் 14ஆம் தேதி தொழிற்சபை அலுவலக அறையில் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு https://tinyurl.com/SICCI14Jun இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

