கருவுற்ற காலத்தில் பெண்கள் மிக ஆரோக்கியமான உணவுவகைகளை உட்கொள்ள வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி, பி, போன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் கருவுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
சைவ உணவு அல்லது தாவர அடிப்படையிலான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்து வரும் பெண்கள், கருவுற்ற காலத்தில் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் அவர்களின் உணவுப் பழக்கத்தில் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள சில வழிகள் உள்ளன.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் ஊட்டச்சத்து, உணவுமுறைப் பிரிவில் உணவுமுறை வல்லுநராக இருக்கும் சோங் யான் ஃபோங், கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத வகையில் நன்கு திட்டமிடப்பட்ட உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
சைவ உணவு, தாவர அடிப்படையிலான உணவுமுறையை பின்பற்றி வரும் பெண்களின் உணவுமுறையில் சில சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, தாவர அடிப்படையிலான உணவுமுறை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.
அதில் மாமிசத்தில் கிடைக்கும் சத்துக்கள் இல்லாததால் அதற்கு ஏற்றவாறு மாற்றுத் தெரிவுகளைத் தாவர உணவு வகைகளில் தேட வேண்டும்.
புரதச்சத்து
கரு உருவாகும்போது அதற்குப் புரதச்சத்து மிக அவசியம். வளரும் கருவுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தாயின் திசுக்கள் வலுவாக இருக்க வேண்டும் என்பதால் புரதச்சத்து மிக முக்கியம். தாவர அடிப்படையிலான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும்போது டோஃபு, பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
இரும்புச்சத்து
கருவுக்குப் போதுமான அளவு ரத்தம் இருக்க வேண்டும். இதனால், இரும்புச்சத்து மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது சிறந்தது. பொதுவாக, இறைச்சி வகைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆனால், சைவ உணவுக்கு மாற்றுத் தெரிவாக கீரை வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
வைட்டமின் பி12
கருவின் மூளை, முதுகெலும்பு, சிவப்பு ரத்த அணுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வைட்டமின் பி12 அத்தியாவசியமான ஒன்று. பெரும்பாலான இறைச்சி வகைகளில் வைட்டமின் பி12 அடங்கியுள்ளது. ஆனால், தாவர அடிப்படையிலான உணவு வகைகளில் சிறிய அளவில் மட்டுமே வைட்டமின் பி12 உள்ளது. போதுமான அளவில் வைட்டமின் பி12 இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. தாவர அடிப்படையிலான பாலாடைக்கட்டி, சோயா, பாதாம் பால் போன்றவற்றில் வைட்டமின் பி12 உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கால்சியம்
கருவின் எலும்பு வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான இதய நலனுக்கும் தேவை கால்சியம். ஆனால், பெரும்பாலான தாவர வகை உணவுகளான பருப்புகள், முழு தானியங்கள், விதை வகைகள் ஆகியவை உடலில் கால்சியம் சேரும் தன்மையைக் குறைக்கும் இயல்பு கொண்டவை என்பதால் ப்ரோக்கோலி, பாதாம், டோஃபு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
ஸிங்க்
கருவின் மூளை, அணுக்கள் வளர்ச்சிக்கு ஸிங்க் (zinc) சத்து மிக அவசியம். ஸிங்க் சத்து தாயின் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. முழு தானியங்கள், தாவர அடிப்படையிலான உணவு வகைகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் ஸிங்க் சத்து உடலில் முழுமையாக சேராது. இத்தகைய உணவுமுறையை கடைப்பிடிக்கும் பெண்கள், அசைவ உணவு வகைகளைச் சாப்பிடும் பெண்களை விட 50 விழுக்காடு அதிகமான ஸிங்க் சத்து அடங்கியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். பூசணி விதை, முந்திரி, ஓட்ஸ், சோயா உணவு வகைகள் ஆகியவற்றையும் உட்கொள்ளலாம்.
ஃபோலேட்
ஒரு கருவின் நரம்பு வளர்ச்சிக்கு ஃபோலேட் கைகொடுக்கிறது. பெரும்பாலானோர் உணவிலிருந்து போதுமான அளவு ஃபோலேட் உட்கொள்வதில்லை என்பதால் ஃபோலேட் ஊட்டச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இருந்தாலும், கீரை, அஸ்பாரகஸ், ப்ரஸ்ஸஸ் போன்றவற்றில் ஃபோலேட் இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.