புதியனவற்றைக் கண்டறியும் தேடல் மனப்பான்மையுடைய சிறாருக்காக ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் புதிதாக அமையவிருக்கிறது ‘ஏசிஎம் & மீ’ (ACM & ME) என்ற இடம்.
சிறுவர்கள் விளையாட்டு மூலம் தங்களின் தனித்துவத்தைக் கண்டறியவும் பல வண்ண விளக்குகளோடும் உயிரூட்டும் இசையோடும் நடனமாடிக் களிப்புறவும் இது வழிவகுக்கும்.
அவர்கள் காந்த வடிவங்களைப் பயன்படுத்தி தங்கள் படங்களை உருவாக்கலாம். ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் காட்சியகங்களில் இடம்பெறும் புராணகால உயிரினங்களைக் கற்பனையாக வடிவமைத்துப் பார்க்கலாம்.
ஜூன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் சமகாலக் கலைக் கூடத்தில் சிறுவர்களுக்கான இப்புதிய இடம் அமைக்கப்படுகிறது.
மே 23ஆம் தேதி முதல் அன்றாடம் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரையும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிவரையும் குடும்பத்தினருக்கு இது திறந்திருக்கும்.
கல்வி அமைச்சு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ஆரம்பக் கற்றல் கட்டமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளத்தில் குடும்பத்தினர் ஒன்றிணைந்து அர்த்தமுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம்.
மனநலத்தை பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வகையிலும், ‘நான் யார்?’, ‘என் கதை என்ன?’, ‘என்னால் என்ன உருவாக்க முடியும்?’ போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கண்டறிய வழிவகுக்கும் வகையிலும் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் பொருள்கள் வாயிலாகப் பாரம்பரியத்தைப் பேண வேண்டும் என்ற நோக்கில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிறுவர்கள் மட்டுமின்றி, அனைத்து வயதினரும் விளையாட்டின் மூலம் புதிய தகவல்களைக் கண்டறியவும் குடும்பமாக மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்கவும் இது தனித்துவம் வாய்ந்த ஒரு தளமாக அமையும்.