தனிமனித அடையாளத்தை வெளிப்படுத்தும் தாளங்கள்

2 mins read
874112cb-b2a8-4dcf-a560-015a1a926852
வாசிப்பின் தரம், வாசிப்பு வழி வெளிப்படுத்தும் உணர்வுகள், வாசிப்பாளர்க்கு எது தனித்துவம் தருகிறது ஆகிய கேள்விகளைத் தன் சிந்தையில் நிறுத்தி வைப்பதாக லலித் குமார் கூறுகிறார். - படம்: லலித் குமார்

இளம் ஆடவராக, கலைஞராக லலித் குமார் கணேஷ், 35, வாழ்க்கையில் கடந்துவந்த பல்வேறு கட்டங்களுக்குச் சாட்சியாக, உற்ற துணையாக இருந்தது தபேலா இசைக்கருவி.

பல மேடை நிகழ்ச்சிகளைப் படைத்த அனுபவம் கொண்டுள்ள இவர், பிறருக்கும் இந்த இசைக்கருவியை வாசிக்கக் கற்பிக்கிறார்.

“பள்ளிகள், வேலைகள், உறவுகள் என ஒவ்வொன்றும் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் தபேலாவுடனான பந்தம் என்னைப் பின்தொடர்ந்தது,” என்றார் திரு லலித்.

கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 7, 8) நடைபெற்ற ‘பெஷ்கார்: தபேலாவுடனான நெடும்பயணம்’ (Peshkar: An Odyssey with Tabla) என்ற அவரது நிகழ்ச்சி இந்த வாழ்க்கைப் பயணத்தைப் பிரதிபலித்தது.

தபேலாவைத் தனியாக வாசித்தது மட்டுமன்றி சித்தார், வாய்ப்பாட்டு, கதக் நடனம் ஆகியவற்றுடனும் இணைந்து நிகழ்ச்சி படைத்தார்.

தபேலா இசையைப் படைக்கும்போது புரவிகள்போல நரம்புகளில் உணர்வுகள் விரவி ஓடின. விறுவிறுப்பாக இவரது விரல்களும் கைகளும் பலவகைத் தாளங்களைப் போட்டன. மணிக்கணக்கான பயிற்சிகள், ஒத்திகைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தபேலாவுடனான இவரது பந்தம் மேலும் ஆழமானது.

பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது ‘டெம்­பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ (Temple of Fine Arts) நிறு­வ­னத்தின் கலைப் பள்ளியில் தொடங்கிய இவரது தபேலா இசைப் பயணம் தற்போது பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது.

“நிகழ்ச்சி நெறியாளராக, பிரதமர் பங்கேற்ற கலந்துரையாடலை வழிநடத்தி என் பேச்சாற்றலை வளர்த்தேன். ஒரே ஓர் இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்துகொண்டு பெர்க்லி இசைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நான், இசைத்தயாரிப்புக்கான திறன்களுடன் பட்டம் பெற்றேன். அத்துடன் என் தபேலா வாசிப்புத் திறனையும் ஆழப்படுத்தினேன்,” என்று அவர் கூறினார்.

வாசிப்பின் தரம், வாசிப்பு வழி வெளிப்படுத்தும் உணர்வுகள், வாசிப்பாளர்க்கு எது தனித்துவம் தருகிறது ஆகிய கேள்விகளைத் தன் சிந்தையில் நிறுத்தி வைப்பதாக லலித் கூறுகிறார்.

இசை வழியாக உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு, கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியிருந்ததாக லலித் கூறினார். சொந்த நிறை குறைகளைப் பற்றிய வெளிப்படைத்தன்மை தேவைப்பட்டதாக அவர் சொன்னார்.

மேடையில் படைத்த இசை அங்கங்கள் தனது சொந்தப் படைப்புகள் என்று குறிப்பிட்ட லலித், பார்வையாளர்களுடன் ஊடாடும் வகையில் அவை அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.

“பல நாள் சந்தித்திராத நண்பருடன் சூடான காப்பி குடித்துக்கொண்டே பேசுவதுபோல இருக்கும். இதில் வரையறைகள் வகுக்கப்பட்டாலும் அவற்றுக்குள் ஆத்மார்த்தமான இணைப்புகளை உருவாக்க முடியும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்