கலைஞனின் வாழ்வைக் கண்முன் நிறுத்திய ‘ஃபசாட்’ நாட்டிய நாடகம்

3 mins read
ஐயா! உந்தன் அருகில் நின்று கொண்டு ஆடவும் பாடவும் கொண்டாடவும் நான் வரலாமோ!!
fd065c14-9c07-43ba-b0a9-9a1a168af802
 ‘ஃபசாட்’ நாட்டிய நாடகக் காட்சி. - படம்: லிஜே‌ஷ் கருணாகரன்

ஒரு கலைஞனுக்குக் கலை மீதுள்ள தீராக் காதல், அதனால் அவனுக்கு வாழ்வில் ஏற்படும் சிரமங்கள் என அனைத்தையும் கண்முன் நிறுத்தியது, செப்டம்பர் 14ஆம் தேதி விக்டோரியா உள்ளரங்கில் நடைபெற்ற ‘ஃபசாட்’ (facade) நாட்டிய நாடகம்.

ஒரு நடனக் கலைஞனின் வாழ்வில் நடந்த துயரச் சம்பவத்தை அவன் நினைவுகூர்வதாகத் தொடங்கியது அந்நாடகம். அத்துயரத்தினின்று மீள நடனத்தில் அவர் கவனம் செலுத்த முடிவு செய்து, தம் மாணவர்கள், சக கலைஞர்களுடன் நடனப் பயிற்சியில் மூழ்கிப் போகிறார்.

மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடுவதே இனி வாழ்க்கை எனும் முடிவுடன் வாழ்ந்து வருகையில், ஒரு கட்டத்தில் அவரால் நடனமாட முடியாமல் போகிறது. தாம் நினைத்தபடி உடல் ஒத்துழைக்காததைக் கண்டு அதிர்ந்த அவருக்குப் பேரிடியாக வந்திறங்கியது நுரையீரல் நோய் குறித்த செய்தி.

அதனை மறைத்து, மாணவர்களுடன் தொடர்ந்து நடனமாடி, கலையில் மூழ்கியபடியே அவரது உயிர் பிரிகிறது.

நடனக் கலைஞர் நிவீன் ஹர்ஷல்.
நடனக் கலைஞர் நிவீன் ஹர்ஷல். - படம்: லிஜே‌ஷ் கருணாகரன்

‘பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி’ சார்பில் நடனக் கலைஞர் நிவீன் ஹர்ஷல் எண்ணத்தில் உருவான இந்நாட்டிய நாடகம் அரங்கைக் கட்டிப்போட்டது.

கலைஞர்கள் பத்துப் பேர் இணைந்து 75 நிமிடங்கள் நடத்திய இந்நாடகம் காதல், சோகம், மனவலிமை, கழிவிரக்கம் என ஒரு கலைஞனின் பல்வேறு உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களை வென்றது.

“பொதுவாக, ரசிகர்கள் மேடை நிகழ்ச்சிகளில் பார்ப்பது கதாபாத்திரத்தையே! அக்கதாபாத்திரம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை வெளிக்கொணர்வது மட்டுமே மேடையில் கலைஞனின் இலக்கு.

“ஆனால், திரைக்குப் பின்னால் அவர்களது வாழ்வில் பல்வேறு பரிமாணங்களும் சிரமங்களும் உள்ளன. கலை மீதான ஆர்வம், சிரமங்களை மறைத்து மக்களை மகிழ்விக்கச் செய்கிறது. அவர்களது வாழ்வின் உண்மை முகத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி அமைந்தது பெருமை,” என்றார் இதில் நடனமாடிய விஷ்ணுபிரியா நடராஜன், 24.

முதன்முறையாகத் தம் ஆசிரியருடன் நடனமாடுவது சொல்லொணாப் பெருமை என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அவர்.

உணர்வுகளை ஒருசேர வெளிப்படுத்திய ‘ஃபசாட்’ நாட்டிய நாடகக் காட்சி.
உணர்வுகளை ஒருசேர வெளிப்படுத்திய ‘ஃபசாட்’ நாட்டிய நாடகக் காட்சி. - படம்: லிஜே‌ஷ் கருணாகரன்

இதன் கருத்துருவாக்கத்திலும் நிர்வாகத்திலும் பணியாற்றியுள்ளார் நடனக் கலைஞர் சுபாஷினி விஜயமோகன்.

“பத்தாண்டுகளுக்கு முன்பு தனி நடனமாக மேடையேறிய இந்நிகழ்ச்சி, குழு நடனமாக மீண்டும் மேடையேறியுள்ளது. ஒருவருக்காக எழுதப்பட்ட கதையை குழுவுக்கென மாற்றி எழுதுவது சவாலானது. கதையின் கரு மாறாமல், அனைவர்க்கும் முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் அமைப்பது சவாலாக இருந்தது. அனைவரும் ஆலோசித்து எழுதி, அது நன்றாக நடந்தேறியுள்ளது மனநிறைவாக உள்ளது,” என்றார் அவர்.

தாம் தனியாக மேடையேறியபோது பயிற்சி செய்வது, அவ்வப்போது தேவைக்கேற்ப அசைவுகளை மாற்றுவது உள்ளிட்டவற்றைச் செய்ததாகக் கூறினார் நடனக் கலைஞரும் நிகழ்வின் நடன இயக்குநருமான நிவீன்.

“குழுவாக நடனமாடும்போது சரியான நடன அமைப்பும் ஒழுங்குமுறையும் தேவைப்பட்டது. இதில் ஆடிய அனைவரும் முழுநேரப் பணிகளில் இருந்தாலும், இதற்கென நேரம் ஒதுக்கி ஒத்துழைத்தது நிகழ்வின் வெற்றிக்கு முக்கியக் காரணம்,” என்றார்.

நிவீனின் நடனம் தம்மை மெய்மறக்கச் செய்ததாகவும் 75 நிமிடங்கள் பறந்தோடியதாகவும் சொன்னார் நடன நிகழ்ச்சியைக் கண்ட திறன்பேசி நிறுவன ஊழியர் மிருதுளா.

“நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட குழு நடனம், கதையுடன் ஒன்றி நடித்த, நடனமாடிய கலைஞர்கள், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்திய காணொளிக் காட்சிகள் என ஒரு முழுமையான படைப்பைக் கண்டது மகிழ்ச்சி,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவியும் நடனம் கற்று வருபவருமான பிரியா.

“கலைஞர்களின் நடிப்பையும் நடனத்தையும் பாராட்ட சொற்கள் போதவில்லை. சிறு பிள்ளைகளைப் பெற்றோர் இவ்வகை நடன நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவர வேண்டும். அவர்களுக்குப் புதுவித அனுபவத்தை அளிப்பதுடன், கலைக் கண்ணோட்டத்தையும் வளர்க்கும்,” என்றார் ‘கதக்’ நடனக் கலைஞரான ஜனனி.

குறிப்புச் சொற்கள்