சிறப்புத் தேவையுடையோரை முன்னிலைப்படுத்திய ‘பிளே இன்குலூசிவ் 2024’

2 mins read
e3ea83a1-2728-423b-a7b7-fe3a6abf3d7f
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, விளையாட்டுகளைத் தொடங்கிவைத்தார். - படம்: ஸ்போர்ட்எஸ்ஜி
multi-img1 of 2

சிறப்புத் தேவை விளையாட்டாளர்களையும் பொதுமக்களையும் இணைக்கும் சிங்கப்பூரின் மாபெரும் ‘பிளே இன்குலூசிவ் 2024’ போட்டிகள் இவ்வாண்டு ஆகஸ்ட் 3, 17ஆம் தேதிகளில் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் நடைபெற்றன.

ஸ்போர்ட்கேர்ஸ், சிறப்பு ஒலிம்பிக்ஸ் சிங்கப்பூர் (Special Olympics Singapore), சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு மன்றம் (Singapore Disability Sports Council) ஆகிய அமைப்புகள் கல்வி அமைச்சின் பங்கேற்கும் பள்ளிகளுடன் இணைந்து இப்போட்டிகளை ஏழாம் முறையாக ஏற்பாடு செய்தன.

இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 2,200க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் பங்குபெற்றனர். அவர்களில் 1,200 பேர் சிறப்புத் தேவையுடைய விளையாட்டாளர்களும் ஒன்றிணைந்த பங்காளிகளும் ஆவர்.

90க்கும் மேற்பட்ட பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் சிறப்புத் தேவையுடைய பெரியோருக்கான அமைப்புகள் இதற்கு வலுவான ஆதரவளித்தன.

சிறப்பு அம்சமாக, முதன்முறையாக விளையாட்டுகளில் பொதுமக்களும் கலந்துகொண்டனர். கண்கட்டி ஓடுதல், பொச்சா (Boccia), மிதிவண்டி ஓட்டுதல், தரைப்பந்து, காற்பந்து, குறிசுடுதல், ரக்பி போன்ற விளையாட்டுகளில் அவர்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஈடுபட்டனர்.

ஒலிப்பந்து (soundball) எனப்படும் பார்வையற்றோருக்கான டென்னிஸ், சக்கர நாற்காலி ரக்பி, அஞ்சலோட்டம் (relay run), காற்பந்திலும் கூடைப்பந்திலும் திறன் சவால்கள் என ஐந்து புதிய விளையாட்டுகள் இவ்வாண்டு அறிமுகமாகின.

ஆகஸ்ட் 3ஆம் தேதி, சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.

இப்போட்டிகள் பல விளையாட்டாளர்களின் திறனை வெளிக்கொணர்ந்தன.

பல்திறன் வித்தகர் ரிமான்

கூடைப்பந்தில் தங்கம் வென்ற செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் பள்ளி மாணவர் 16 வயது சையது ஹக்கீம் ரிமான் சையது அஹ்மது, இவ்வாண்டு முதன்முறையாக ‘பிளே இன்குலூசிவ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றதாகக் கூறினார்.

அவரும் அவரது பள்ளி மாணவர்களும் ஆங்கிலிகன் ஹை பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் பயிற்சி செய்தனர்.

இவ்வாண்டு தனியாகவே பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யக் கற்றுக்கொண்டார் ரிமான். பயிற்சிகளுக்குப் பிறகு தானாகவே வீடு திரும்பியதாக அவர் கூறினார்.

மேலும், தன்னார்வத்தால் ஆங்கிலம் கற்றுக்கொண்ட ரிமானால் இன்று ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. “என்னால் புத்தகம் படிக்க முடிகிறது. நான் நண்பர்களுடன் பேசி, காணொளிகளைக் கண்டு ஆங்கிலம் கற்றேன்,” என்றார் ரிமான்.

தொழில்நுட்பப் பிரியரான ரிமான், எதிர்காலத்தில் ‘சேலஞ்சர்’ கடையில் காசாளராக விரும்புகிறார்.

தீயணைப்பாளராக விரும்பும் ஷேக்

தரைப்பந்தில் தங்கம் வென்ற ஷேக் தாவூத், 18.
தரைப்பந்தில் தங்கம் வென்ற ஷேக் தாவூத், 18. - படம்: ரவி சிங்காரம்

தரைப்பந்தில் தங்கம் வென்ற ஷேக் தாவூத், 18, இம்முறை மூன்றாம் ஆண்டாக ‘பிளே இன்குலூசிவ்’வில் பங்குபெற்றார். இவரது தரைப்பந்து ஆர்வம் 2021ல் தொடங்கியது.

“என் இலட்சியம் சிங்கப்பூரைத் தரைப்பந்தில் பிரதிநிதிப்பதே. எதிர்காலத்தில் நான் தீயணைப்பாளராகப் பணியாற்றி சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறேன்,” என்றார் ஷேக்.

குறிப்புச் சொற்கள்