எழுத்தாளர் ஹரிஷ் ஷர்மா எழுதிய ‘ஸ்டேயிங் அலைவ்’ என்ற ஆங்கில நாடகத்தைத் தமிழில் ‘இல்’ அதாவது இல்லம் என்ற பெயரில் மொழியாக்கம் செய்து, இயக்கி, மேடையேற்றியுள்ளார் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலரான சலீம் ஹாடி.
இந்நிகழ்ச்சி ஏப்ரல் 26ஆம் தேதி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் இருமுறை நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இளையர்களுக்காக நடத்தப்பட்டது. இரண்டாவது முறை அதே நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியவர்களுக்காக நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் அப்பா, அம்மா, அக்கா, தம்பி என்ற நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள் உள்ளன. குடும்பத்திற்கு ஏற்ப வரைமுறைகள் மாறுபடும். ஆனால், நாம் வெளிப்படையாகப் பேசாமல் மனத்தில் பூட்டி வைத்துக்கொண்டே இருந்தால், அது மன உளைச்சலை ஏற்படுத்தி, உயிரை மாய்த்துக்கொள்ள முயலும் அளவிற்கு இட்டுச் செல்லக்கூடியது என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது.
இந்த நாடகத்திற்குப்பின், ஆத்மேன் சோஷியல் என்ற நிறுவனத்தின் நிறுவனரான கணேசன் ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் அங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“ஒரு வீடு என்பது எப்படி இருக்க வேண்டும்?”, “குடும்பத்தினரிடம் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது போன்ற வரைமுறைகள் வீடுகளில் உள்ளதா?”, “குடும்பத்தினர்கள் ஒருவருக்கொருவர் மனந்திறந்து பேசுவதை எப்படி ஊக்குவிப்பது?” போன்ற கேள்விகள் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.
“நான் இந்த நாடகத்தில் மகள் கதாபாத்திரத்திற்கு தயார் செய்ததன்வழி பல அம்சங்களை உணர்ந்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக, குடும்பத்தில் மனம் திறந்து பேசுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்,” என்று சிவசண்முக பிரியா,21, கூறினார்.
“இந்நாடகம் மற்ற நாடகங்களைபோல் இல்லாமல் வேறுபட்டிருந்தது. எளிமையான கதைக்களம், கதாபாத்திரங்கள், வசனங்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. அதோடு, பெற்றோர், பிள்ளைகள் என்ற இரு சாராரும் வெளிப்படையாகப் பேசுவதற்கு முயல வேண்டும் என்பதை இந்த நாடகத்தின் மூலம் உணர்ந்தேன்.” என்று பார்வையாளர் சுபத்ரா பிரபாகரன்,18, சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“நாடகம் உருக்கமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்ளுதல் போன்ற அவல நிலையைத் தடுக்க நாம் கண்டிப்பாக மனம் விட்டுப் பேசுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்,” என்று கூறினார் பார்வையாளர் குமாரசாமி ரேவதி சிதம்பர ஈஸ்வரி,50.

