பொங்கல் என்பது நமக்கு உணவளிக்கும் வேளாண்மைக்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லும் அறுவடைத் திருநாள் என்பது அனைவரும் அறிந்ததே.
வாழையடி வாழையாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் என்றாலே நம் கண்முன் நிற்பது பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, வாழை இலை எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பொங்கல் திருநாளின்போது நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த மரபுகளை இன்றைய தலைமுறையும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
ஆயினும், பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளையும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம், அவற்றின் பயன், முக்கியத்துவம் என்ன என்பன குறித்து நம்மில் சிலர் அறியாமல் இருக்கலாம்.
பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது கரும்பு. பொதுவாக தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையுள்ள அறுவடைக் காலத்தில் முக்கியப் பயிராக இது கருதப்படுகிறது.
கரும்பின் கடினமான, நீண்ட தண்டு வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் நன்மை தீமைகளையும் குறிக்கிறது. அது பொறுமையாக வளர்ந்து, இறுதியில் மக்களுக்கு தித்திப்பை வழங்குகிறது.
கரும்பைப் போல் நாமும் இளமையில் கடினமாக உழைத்தால் முதுமையில் இனிமையான வாழ்வை வாழலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
பொங்கல் பானையில்லாத பொங்கல் கொண்டாட்டமா? மண்பானையில் பொங்கலிடுவதே மரபு.
தொடர்புடைய செய்திகள்
மண்பானைகளில் சமைப்பதன் மூலம் சத்துகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்பதை அன்றே முன்னோர்கள் அறிந்துவைத்திருந்தனர். ஆனால், காலப்போக்கில் மண்பானைப் பயன்பாடு பெரிதும் குறைந்துவிட்டது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதற்கேற்ப, பொங்கல் திருநாளன்று மண்பானையில் பொங்கலிடுவதன் மூலம் நம் பண்பாட்டிற்கு நெருக்கமான குயவர்கள் போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும், தொழிலும் முன்னேற்றமடையும்.
அடுத்ததாக, மஞ்சள் கொத்து. மஞ்சள் கிழங்கு மருத்துவ குணமிக்கது. இவ்வாறு, மகிமை மிக்க மஞ்சள் கொத்தைப் பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர்.
வாழை மரம் செழிப்பைக் குறிக்கிறது, அறுவடைத் திருநாளான பொங்கலுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை அளிக்கும் வளத்தைக் குறிக்கிறது. மேலும், வாழை இலையில் ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உயிரணுக்களின் சிதைவைத் தடுக்க உதவுகின்றன.
பொங்கலில் வாழை இலையின் பயன்பாடு என்பது வெறும் ஓர் உணவுத்தட்டாக மட்டுமன்று. அது இயற்கை, தூய்மை, வளம், நலம், பாரம்பரியம் ஆகியவற்றுக்கான ஒரு முழுமையான சின்னமாகும்.
மரபு என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், அதில் பொதிந்துள்ள பொருளை நன்கு புரிந்துகொண்டு, கேள்வி அறிவுடன் அணுகுவது அவசியம்.
அப்போதுதான் அதன் சிறப்பு நிலைத்திருக்கும். அது ஓர் உன்னதமான, உண்மையான கொண்டாட்டமாக மாறும்.

