தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அரிசியின் சிறப்பை உணர்த்தும் பொங்கல், ஒற்றுமையின் படிப்பினையை உணர்த்தவேண்டும் என்றனர் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள்.

நெற்பயிரின் சிறப்பை உணர்ந்த தாம்சன், மேரிமவுண்ட் வட்டாரவாசிகள்

2 mins read
8c07a7a3-fb08-4cba-8989-0543590ab7c1
கல்விக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங்குடன் (இடமிருந்து 4வது) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள். - படம்: மேரிமவுண்ட் நற்பணி செயற்குழு

நெற்பயிர்களைக் கொண்டு அரிசியிலிருந்து உமிநீக்கி பொங்கல் வைக்கப்பட்டு சுற்றியுள்ள அனைவரும் கொண்டாட்டத்தைக் கண்டு ரசித்தனர்.

மேரிமவுண்ட், தாம்சன் நற்பணிச் செயற்குழுக்கள் இந்தக் கொண்டாட்டத்துக்கு ஜனவரி 19ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்தன.

கிட்டத்தட்ட 120 வட்டாரவாசிகள் பங்கேற்ற அணுக்கமான குடும்ப நிகழ்ச்சியாக இது அமைந்தது.

1950களைச் சேர்ந்த ஓர் ஆட்டுக்கல்லும் 1960களைச் சேர்ந்த ஓர் அம்மிக்கல்லும் காட்சிக்கு வைக்கப்பட்டு, பின் பயன்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் வயல்வெளிகளில் வேலை செய்த அனுபவம் பற்றியும் உமிநீக்குவது எப்படி என்றும் பழங்கால விவசாயக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் வந்திருந்தோருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கல்விக்கான துணையமைச்சரும் மேரிமவுண்ட் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான கான் சியாவ் ஹுவாங் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

நவீன சிங்கப்பூரின் 60ஆம் நிறைவாண்டான ‘எஸ்ஜி60’யை ஒட்டி வைராவிமட காளியம்மன், இந்திய முஸ்லிம் சமூகச் சேவை சங்கம், கோங் பெங் செங் பெளத்த மடாலயம் ஆகியவற்றுக்குத் தலா 60 அரிசிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

ஆடல் பாடல் அங்கங்களும் சிலம்பாட்டமும் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் வருகையாளர்களுக்குச் சைவ உணவும் பரிமாறப்பட்டது.

நவீன சிங்கப்பூரின் உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள உழைப்பையும் இன நல்லிணக்கத்தின் அருமையையும் நினைத்துப்பார்க்கும்படி இந்நிகழ்ச்சி ஊக்குவிப்பதாகத் தாம் நம்புவதாக தாம்சன் நற்பணிச் செயற்குழுவின் துணைத்தலைவர் சுமதி தாமோதரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சி அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டதாக பங்கேற்றோரில் ஒருவரான மேஹ்ரஜ் அலி, 36, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“எல்லோரும் ஒருவருடன் ஒருவர் உறவாட முடிந்தது. அத்துடன் தகவல்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ளக்கூடியதும் மனநிறைவாக உள்ளது,” என்று திருவாட்டி மேஹ்ரஜ் கூறினார்.

சிங்கப்பூரின் தொடக்க காலத்தில் இந்தியர்களின் வீடுகள் எப்படி இருந்தன என்பதையும் காலம் எப்படி மாறியுள்ளது என்பதையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் முயற்சியதாக நிகழ்வு அமைந்திருப்பதை ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் மேரிமவுண்ட் செயற்குழுவின் செயலாளருமான எஸ் ரமேஷ் தெரிவித்தார்.

“சிங்கப்பூரின் 60ஆம் நிறைவாண்டைக் கொண்டாடும் பொருட்டு அரிசி நன்கொடை வழியான சமூகப் பங்களிப்பு, இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விளங்குகிறது,” என்றார் ஏற்பாட்டுக்குழுவின் இணைத்தலைவர் கோ.ஆசைத்தம்பி.

குறிப்புச் சொற்கள்