தாயக எல்லைகளைத் தாண்டி புதிய அர்த்தத்துடன் பொங்கல் கொண்டாட்டம்

5 mins read
88d31008-f716-43f9-af46-e7259401625c
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம். - படம்: தமிழ்செல்வி குணசேகரன்

நவீனமயமாகிவிட்ட உலகில் மனிதர்கள் இயந்திரங்களைப் போல சுழலும் இக்காலகட்டத்தில் அவர்களை ஒரு கணம் நின்று மீண்டும் மனிதர்களாக்குவது பண்டிகைக் காலங்களே.

அவற்றில் ஒன்று, தமிழர்கள் வாழையடி வாழையாகக் கொண்டாடும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை.

தாய்நாட்டில் இருந்தவரை, அதுவும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் பொங்கல் திருநாள் நெருங்குகையில் பண்டிகை உணர்வு தானாகவே பிறந்துவிடும்.

இந்நிலையில், மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எப்படிப் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர் என்பதை அறிந்துகொள்ள அவர்களைத் தொடர்புகொண்டது தமிழ் முரசு.

பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே பொங்கல் வைக்க ஒன்று கூடிய திருவாட்டி சங்கீதா குட்டியும் அவரது உற்றார் உறவினர்களும்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே பொங்கல் வைக்க ஒன்று கூடிய திருவாட்டி சங்கீதா குட்டியும் அவரது உற்றார் உறவினர்களும். - படம்: சங்கீதா குட்டி

ஆஸ்திரேலியாவில் பொங்கல்

அவர்களில் ஒருவர், 20 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரத்தில் வசித்துவரும் திருவாட்டி சங்கீதா குட்டி, 48. 

“நாங்கள் இங்கு வந்தபோது பொங்கல் திருநாளன்று அமைதியாகவே இருக்கும். ஆனால், இன்று தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், குவீன்ஸ்லாந்து தமிழ்ச் சங்கம் போன்றவை பொங்கல் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடுகின்றன,” என்றார் அவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த திருவாட்டி சங்கீதாவுக்கும் அவரது கணவருக்கும், தங்களுடைய பாரம்பரியம் தங்களுடன் முடிந்துவிடக்கூடாது, அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனை. 

அதனால், தங்கள் இரு மகள்களுக்கும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் மூலம் தங்களது பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். 

“நானும் என் கணவரும் சிங்கப்பூரில் வாழ்ந்தபோது பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலால் பொங்கல் கொண்டாட்டத்தைச் சுருக்கமாக முடித்துவிடுவோம். ஆனால், இங்கு வந்த பிறகு மூழ்கி முத்தெடுப்பதுபோல் இந்தப் பண்டிகையை முழுமையாக அனுபவிக்கும் விதமாக விரிவாக கொண்டாடத் தொடங்கினோம்,” என்று திருவாட்டி சங்கீதா கூறினார்.

வீட்டுவாயிலில் கரும்பைக் கட்டி, வீட்டில் வளர்த்த மஞ்சள், கத்தரிக்காய், குடமிளகாய், கோவைக்காய், கீரைகள், வெற்றிலை ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாட்டை நடத்துவது அவரது குடும்பத்தின் வழக்கம். 

‘உழவர் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்ற கூற்றை திருவாட்டி சங்கீதாவும் அவரது நட்பு வட்டமும் உறுதியாக நம்புகின்றனர். 

“ஒரு உழவராகவே மாறி, எங்கள் தோட்டத்தில் பயிர்களை விளைவித்து அறுவடை செய்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்,” என்றார் திருவாட்டி சங்கீதா. நண்பர்கள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளையோ பொங்கலுக்குத் தேவையானவற்றையோ ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது பண்டிகை உற்சாகத்தை அளித்து, அவர்களுக்கிடையிலான உறவுகளை வலுப்பெறச் செய்வதாகவும் அவர் சொன்னார். 

இனம், மொழி, சமயம் ஆகியவற்றால் வேறுபட்டோர் தங்களது பாரம்பரியத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு பாலமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருவாட்டி சங்கீதா, பண்பாடுகள் மாறுபட்டாலும் நோக்கம் ஒன்றே.

தமிழர்களுக்குப் பொங்கல் என்றால் மேற்கத்தியர்களுக்கு நன்றியுரைக்கும் நாள் (Thanksgiving day). இரண்டுக்குமே அடிப்படைத் தத்துவம் நன்றி தெரிவிப்பதுதான்.

“எந்த நாட்டில் இருந்தாலும் சரி, விரிவாகக் கொண்டாடவேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடினாலே போதும், இந்தப் பாரம்பரியம் தொடரும்,” என்கிறார் திருவாட்டி சங்கீதா.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட திருவாட்டி தமிழ்செல்வி குணசேகரன்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட திருவாட்டி தமிழ்செல்வி குணசேகரன். - படம்: தமிழ்செல்வி குணசேகரன்

துபாயில் பொங்கல்

துபாயில் கடந்த 11 ஆண்டுகளாக வசித்துவரும் திருவாட்டி தமிழ்செல்வி குணசேகரன், 35, குடும்பத்தாரும் தவறாது பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் அரக்கோணம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாட்டி தமிழ்செல்வி, தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தம் குடும்பத்துடன் தாயகத்திற்குச் சென்றுவிடுவார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம். - படம்: தமிழ்செல்வி குணசேகரன்

ஆனால், யுஏஇ தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள் இருப்பதையும் துபாயில் வாழும் தமிழர்கள் பொங்கல் பெரிய அளவில் கொண்டாடுவதையும் அறிந்தபின் அவரது பொங்கல் கொண்டாட்டம் தாயக எல்லைகளைத் தாண்டி புதிய அர்த்தத்தைப் பெற்றது. 

“கோலப் போட்டி, பொங்கல் பானை அலங்கரிப்பு, சிலம்பாட்டம், சமத்துவப் பொங்கல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருக்கும். மற்ற இனத்தவருடனும் பொங்கலைக் கொண்டாடும் வாய்ப்பும் கிடைத்தது,” என்ற திருவாட்டி தமிழ்செல்வி, இது போன்ற விரிவான பொங்கல் அனுபவம் சற்று வித்தியாசமானது என்றும் சொன்னார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம். - படம்: தமிழ்செல்வி குணசேகரன்

பொங்கல் கொண்டாட்டங்கள் என்றால் அவரவர் வீட்டில் பொங்கல் வைப்பதுடன் முடிந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தால் அத்திருநாளை மற்ற தமிழர்களுடன் இணைந்து கொண்டாட விழைந்தார் திருவாட்டி தமிழ்செல்வி.

“பொங்கலுக்கு 10 நாள்களுக்கு முன்பே பண்டிகை உற்சாகம் பிறந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் எப்படி வித்தியாசமாகக் கொண்டாடலாம் என இங்கு பலர் யோசிப்பர்,” என்றார் அவர். 

இவ்வகை பண்டிகைகளைக் கொண்டாடுவது அடுத்த தலைமுறையினர் தங்களது பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகக் கருதும் திருவாட்டி தமிழ்செல்வி, தம்மால் இயன்ற வரையில் தம் மகனுக்கு பண்டிகைகள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பதை உணர்த்தி வருகிறார்.

களிமண்ணில் அடுப்பு செய்து வெண்பொங்கல் செய்வது, மாட்டுப்பொங்கலுக்கு மாடுகள் இல்லாத பட்சத்தில் உழவு இயந்திரத்தை (tractor) வைத்துப் பூசை செய்வது எனத் தாம் சிறு பிள்ளையாக இருந்தபோது நடந்த பொங்கல் கொண்டாட்டங்களை அவர் நினைவுகூர்ந்தார்.

அதே அனுபவத்தை தம் மகனுக்கு நேரடியாக வழங்க முடியாவிட்டாலும், முடிந்த அளவுக்கு இந்தப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க முயல வேண்டும் என அவர் கடப்பாடு கொண்டுள்ளார்.

ஜப்பானில் பொங்கல்

ஜப்பானின் தலைநகர் தோக்கியோவில் கடந்த 24 ஆண்டுகளாக வசித்துவருகிறார் தோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான கௌரிஷங்கர் சந்தானம், 47. 

33 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டங்களை நடத்திவரும் தோக்கியோ தமிழ்ச் சங்கத்தில் தொடக்கத்தில் வெறும் நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள்தான் இருந்தன. 

பிறகு காலப்போக்கில் அந்த எண்ணிக்கையும் வளர்ந்து, கொண்டாட்டங்களும் இன்னும் பெரிய அளவில் அனைத்துலகக் கலைஞர்களுடன் நடந்தேறுவதைச் சுட்டினார் திரு கௌரிஷங்கர். 

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: கௌரிஷங்கர் சந்தானம்

ஜப்பான் போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்காத நாடுகளில் பொங்கல் கொண்டாடுவதன் சவால்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட திரு கௌரிஷங்கர், பொங்கல் ஏற்பாடுகள் அனைத்துக்கும் மெனக்கெட வேண்டும் என்றார். 

பொங்கல் மரபுகளில் ஒன்றான வாழை இலையில் உண்ணும் அனுபவத்தைப் பெற அந்நாட்டில் வாழையிலை கிடைப்பது சிரமம் என்றாலும் அதனை வேறுநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விருந்து பரிமாறும் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர் தோக்கியோவாழ் தமிழர்கள். 

இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் மற்ற பண்பாட்டுப் பின்னணியைச் சேர்ந்தோர் தமிழர் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது என்ற திரு கௌரிஷங்கர், ஜப்பானியர்கள் பலர் கொண்டாட்டங்களில் கலந்து ஆடல், பாடல், விருந்தோம்பலில் திளைப்பர் என்றும் சொன்னார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: கௌரிஷங்கர் சந்தானம்
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: கௌரிஷங்கர் சந்தானம்
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: கௌரிஷங்கர் சந்தானம்

தோக்கியோவின் முதல் தமிழ் இதழான ‘பொங்கல் மலர்’ ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளன்று வெளியிடப்படுவது தோக்கியோ பொங்கல் கொண்டாட்டங்களின் மற்றோர் சிறப்பம்சம்.

வெளிநாட்டுவாழ் தமிழர்களில் பலர் தங்களது குடும்பத்துடன் பண்டிகை உற்சாகத்தில் திளைக்க முடியாவிட்டாலும் தங்களுக்கென குடும்பம்போல ஒரு நட்பு வட்டத்தை அமைத்து இந்த பண்டிகைக் காலத்தைக் கழிக்கின்றனர்.

சவூதி அரேபியாவில் 16 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு பிராமிஸ்
சவூதி அரேபியாவில் 16 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு பிராமிஸ் - படம்: ப்இராமிஸ்

அவர்களில் ஒருவர், சவூதி அரேபியாவில் 16 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு பிராமிஸ், 34. 

“தமிழ்நாட்டில் இருந்தவரை பொங்கல் திருநாளை விடுமுறை விழாவாகத்தான் கருதினோம். ஆனால், வெளிநாட்டிற்கு வந்தபிறகுதான் பொங்கல் பற்றி நாங்கள் நிறைய தெரிந்துகொண்டோம்,” என்ற திரு பிராமிஸ், உலகில் எங்கிருந்தாலும் தமிழரின் பண்டிகையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்ற உறுதியுடன் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிறுத்தி நடத்துவதாகப் பகிர்ந்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரத்தில் வசித்துவரும் திரு ராஜன் நாயுடு, 67 - திருமதி ஹர்மித் கோர், 64, இணையரும் பொங்கல் திருநாளைக் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாடும் ராஜன் நாயுடு, 67 - ஹர்மித் கோர், 64, குடும்பத்தினர்.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாடும் ராஜன் நாயுடு, 67 - ஹர்மித் கோர், 64, குடும்பத்தினர். - படம்: ராஜன் நாயுடு
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம்.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: ராஜன் நாயுடு
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம்.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: ராஜன் நாயுடு
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம்.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம். - படம்: ராஜன் நாயுடு

பொங்கல் என்பது விவசாயத்திற்கு நன்றி செலுத்தும் அறுவடைத் திருநாள்.

ஆனால், இன்றைய காலத்தில், பலர் இப்பண்டிகையை உலகில் வாழும் மற்ற இனத்தவருக்குத் தமிழர் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் விழாவாகக் கருதுகின்றனர்.

‘தமிழர்’ என்ற அடையாளத்தை நிலைநிறுத்தி, அடுத்த தலைமுறைக்குத் தொடரச் செய்யும் வாய்ப்பாகவும் சிலர் பார்க்கின்றனர்.

குறிப்பாக, தாயகத்தைவிட்டு தொலைவில் கொண்டாடும்போது பொங்கல் போன்ற பண்டிகையின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அதிகமாக உணரமுடிகிறது.

குறிப்புச் சொற்கள்