சிங்கப்பூரில் தமிழகக் கிராமியக் கலைகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்து, பண்பாட்டுப் பெருமையைப் பிற இனத்தவர்க்கும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளைத் தீவெங்கிலும் உள்ள சமூக மன்றங்களின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் தை மாதத்தில் நடத்தி வருகின்றன.
அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பொங்கோல் 21’ சமூக மன்றத்தின் ‘ராக்கிங் பொங்கல்’ நிகழ்ச்சி, கண்கவர் நிகழ்த்துகலை அங்கங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தேறியது.
உறுமி மேள இசைக்குழுவின் விறுவிறுப்பான இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கரகாட்டமும் மயிலாட்டமும் இடம்பெற்றன. மயில் தோகையுடன் மங்கையர்கள் மேள தாளங்களுக்கு ஏற்ப அசைந்தாடியது, இதுவரை அத்தகைய நடனத்தைக் கண்டிராத சிங்கப்பூரர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. வட்டாரவாசிகள் பங்கேற்ற நடனப் போட்டியும் பாட்டுப் போட்டியும் பார்வையாளர்களை மகிழ்வித்தன.
அத்துடன், மண்பானையை அலங்கரிப்பது, பட்டங்களுக்கு வண்ணம் தீட்டுவது போன்ற கைவினைக்கலை நடவடிக்கைகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. சிறார் முதல் பெரியவர்கள்வரை பலர் இணைந்து வண்ணம் தீட்டி, நிகழ்ச்சிக்கு எழில் கூட்டினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிட்டத்தட்ட 220 வட்டாரவாசிகள் அனைவர்க்கும் வாழையிலையில் சுவையான உணவு பரிமாறப்பட்டது. பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
சமூகமாகத் தாங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் இன்பம், நன்றியுணர்வு, அறுவடை ஆகியவற்றை ஒட்டி பொங்கல் கொண்டாடுவதாகத் திருவாட்டி இயோ, தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியின் படத்தொகுப்புடன் பதிவிட்டார்.
மகிழ்ச்சி நிறைந்த இந்நிகழ்ச்சி, பொங்கலைப் பற்றிய விழிப்புணர்வை இந்தியர் அல்லாதோருக்கும் உண்டாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாக ‘பொங்கோல் 21’ சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் கௌரி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
“பொங்கும் பொங்கலைப் போல சிங்கப்பூர் இந்தியச் சமூகம் தித்திப்பானது; செழிப்புடன் பொங்குகிறது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தோரையும் அரவணைத்து, எங்களுடன் இணைந்து ஈடுபடுத்தும் நிகழ்ச்சியாக இது உள்ளது. தமிழர் அல்லாத இந்தியருக்குமே நம் பண்பாட்டைப் பற்றி அறியவும் நிகழ்ச்சி வகைசெய்கிறது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘பொங்கோல் 21’ சமூக மன்றத்தின் பொங்கல் நிகழ்ச்சி இன்பமயமாக இருந்ததாக ஜெயப்பிரியா பாலசுப்பிரமணியம், 40, தெரிவித்தார். “கண், காது, வயிறு ஆகியவற்றை நிறைத்த சிறப்பான நிகழ்ச்சி. எல்லாச் சொந்தங்களையும் பார்த்தது போன்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

