உலகில் நிச்சயமற்ற தன்மையும் பல்வேறு மாற்றங்களும் நிலவும் சூழலில் சிங்கப்பூரர்கள் பண்பாட்டையும், சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்துவதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
நான்கு தொகுதிகள் இணைந்து ஏற்பாடு செய்த ‘பொங்கலோ பொங்கல்’ எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார் அங் மோ கியோ அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு லீ.
“சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதாலேயே நம்மால் செழிக்க முடிகிறது. வரும் தலைமுறையினரும் இந்த ஒற்றுமையைத் தொடர்ந்து கட்டிக்காப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
அங் மோ கியோ குழுத்தொகுதி, ஜாலான் காயு, கெபுன் பாரு, இயோ சூ காங் தனித்தொகுதி உள்ளிட்டவற்றின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து ஜனவரி 25ஆம் தேதியன்று பொங்கல் கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஹு யோ சமூக நிலைய வட்டாரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லாவ், டேரல் டேவிட், நாடியா அஹமது, விக்டர் லாய், ஜாலான் காயு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இங் சீ மெங், கெபுன் பாரு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்ரி குவேக், இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் உள்ளிட்டோரும் விருந்தினராகப் பங்கேற்றனர்.
நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்தியர் நற்பணிக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கோலக் கலைஞர் விஜயாவின் தலைமையில், செயற்கை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆகப் பெரிய அங் மோ கியோ குழுத்தொகுதி, ஜாலான் காயு, கெபுன் பாரு, இயோ சூ காங் தனித்தொகுதி வரைபடம் கோலமாக இடப்பட்டிருந்தது.
மொத்தம் 2.4 மீட்டர் X 2.4 மீட்டர் அளவு கொண்ட வரைபடத்தைக் கொண்ட 4 மீட்டர் 4 மீட்டர் கோலம், சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பொறுப்பேற்ற ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த அனுபிரியா பன்னீர்செல்வன், 40, “தீபாவளி நிகழ்ச்சியின்போது இதேபோன்ற அலங்காரம் செய்தோம். இம்முறை பெரிய கோலமிடலாம் என முடிவெடுத்தோம். ஏறத்தாழ ஆறு பேர் இணைந்து மூன்று நாள்கள் இப்பணியில் ஈடுபட்டோம். சிறப்பாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி,” என்றார்.
பல குழுக்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதும் நிறைவான அனுபவமென்றார் அவர்.
கலாசார, கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது. பல்வேறு வயதினர்க்கும் ஏற்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தொண்டூழியராகச் செயல்பட்ட ஐஸ்வர்யா, “கடந்த ஆறு மாதங்களாக இந்நிகழ்ச்சிக்கான திட்டமிடல் நடைபெற்றது. இதில் பங்காற்றியதில் பெருமை,” என்றார்.
வட்டாரத்தைச் சேர்ந்த பலருடன் இணைந்து பொங்கல் கொண்டாடுவது நல்ல அனுபவம்,” என்றார் சிராங்கூன் நார்த் குடியிருப்பாளர் மகேஸ்பதி சத்யா, 64.
நிகழ்ச்சியில் தாய், அண்ணன் குடும்பம், உறவினர்கள் எனப் பதினொரு பேருடன் பங்கேற்ற தாதியரான துர்காதேவி, 38. “பல்வேறு இடங்களில் வசிக்கும் உறவினர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கொண்டாட்டமாக உணர்கிறேன்,” என்றார்.

