தமிழின் இளமையைப் பறைசாற்றிய நிகழ்ச்சி

2 mins read
850056dd-b65b-4b4d-a694-9fb4b4040838
போட்டியில் பங்குபெற்ற உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களின் குழுப்படம். - படம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்

ரவி கீதா திவிஜா

மற்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் இவ்வாண்டு தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, ‘தமிழின் இளமை’ என்ற பொதுவான தலைப்பைப் பற்றி ஆய்வு செய்து படைக்க உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

‘தமிழும் இளமையும்’ என்ற இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியில் ஏறத்தாழ 15 பள்ளிகளிலிருந்து 90 மாணவர்கள் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.

தமிழ் மொழியை மாணவர்களிடத்தில் ஊக்குவித்து, அதை வாழும் மொழியாக ஆக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

பன்னிரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கவிஞர் தங்கம் மூர்த்தியும் தமிழ் ஆர்வலர் சபா முத்து நடராசனும் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.

“சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் இயல்பாகவே திறன்மிக்கவர்கள். ஆனால், காலம் மாறும்போது அதற்கேற்ப நமது சிந்தனைத்திறனும் மாறவேண்டும். அதற்காக மாணவர்கள் நிறைய பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டும்,” என்ற வேண்டுகோளை முன்வைத்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி.

இப்போட்டியில் தொடக்கக் கல்லூரி மாணவர் பிரிவில், தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சித்வியா சிதம்பரம்,16, முதல் பரிசை வென்றார்.

“சிறு வயதிலிருந்தே தமிழ் சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று, பரிசுகள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இப்போட்டிக்குத் தயார் செய்ததன் மூலம் நான் நிறைய புது விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மேலும், இளமை என்பது வயது சார்ந்ததன்று, மனம் சார்ந்தது,” என்றார் சித்வியா.

மேல் உயர்நிலைப் பிரிவில், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தைச் சேர்ந்த கணேஷ் ஹரிஹரசுதன், ஜஸ்பர் விக்டர் என்ற இரண்டு மாணவர்கள் முதல் பரிசை வென்றனர். அவர்கள் ‘வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழி’ என்ற தலைப்பில் தங்கள் படைப்பை முன்வைத்தனர்.

“தமிழ் ஒரு பழைமையான மொழியாக இருந்தாலும் செயற்கை நுண்ணறிவின்வழி அதனை எப்படி இளமையாக வைத்திருக்க முடியும் என்பதைப் பற்றி கற்றுக்கொண்டு, மக்களுக்குக் கூற விரும்பினேன்.” என்றார் கணேஷ் ஹரிஹரசுதன்,14. 

கீழ் உயர்நிலைப் பிரிவில், தஞ்சோங் காத்தோங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி தியா பொன்ராஜ் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். 

“என் மாணவி தியாவிற்கு தமிழின்மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. ‘வைரத்திற்குப் பட்டை தீட்டுவதுபோல’ நான் அவளுக்குச் சில திருத்தங்களைச் செய்ய உதவினேன். குறிப்பாக, இந்த இளம் தலைமுறை தமிழைப் போற்ற வேண்டும் என்பதே என் கருத்து,” என்றார் தமிழாசிரியை முனைவர் மீனாட்சி சபாபதி.

“பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, பிள்ளைகளும் பெற்றோர்களும் வீட்டில் தமிழில் பேச வேண்டும்,” என்று சங்கத்தின் துணைக் குழுத் தலைவர் சாமிநாதன் இராமநாதன், 40, வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்