நான்கு ஓவியர்களின் 1952 பாலி பயணத்தைச் சித்திரிக்கும் வரலாற்றுக் கண்காட்சி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தின் பத்தாம் தளத்தில் நடைபெறுகிறது.
கலைப் பயணத்தில் புதிய உந்துதலைத் தேடி லியு காங், சென் சோங் சுவீ, சென் வென் ஹசி, சியோங் சூ பியெங் ஆகிய நான்கு சிங்கப்பூர் ஓவியர்கள் ஜாவாவுக்கும் பாலிக்கும் சென்றனர்.
அவர்கள் மேற்கொண்ட பாலி பயணம் 1952 ஜூன் 8 முதல் ஜூலை 28 வரை ஏழு வாரங்கள் நீடித்தது. அதன்வழி அவர்கள் படைத்த 1953 ஓவியக் காட்சி சிங்கப்பூரின் கலை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.
“பாலியில் எழில்மிகு இயற்கைக் காட்சிகளுடன், கலை உணர்வைத் தூண்டும் உடைகளும் நடனங்களும் எங்களை ஈர்த்தனநெடுங்காலமாகவே அங்குச் செல்ல விரும்பியிருந்தோம். 1952ல் வருடாந்தர வேலை விடுப்பை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொண்டோம்,” என்று தன் 1983 நேர்காணலில் லியு காங் கூறியிருந்தார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இக்கண்காட்சி நடைபெறுவதற்குக் காரணம், லியு காங்கின் மருமகள் கிரெச்சன் லியு. இப்பயணம் பற்றித் திருவாட்டி கிரெச்சன் ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார்.
திருவாட்டி கிரெச்சன் 2016ல் லியு காங்கின் அறையில் பழைய காலணி அட்டைப் பெட்டியைக் கண்டெடுத்தபோது லியு காங் தன் பயணத்தில் எடுத்த 1,000 புகைப்படங்களைக் கண்டார்.
அவற்றோடு, லியு காங்கின் நாட்குறிப்பு, ஓவியர்களின் கடிதங்கள், நேர்காணல்கள் போன்றவற்றிலிருந்து கிடைத்த தகவல்கள்மூலம் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பாலியைக் கற்பனை செய்தல்
‘பாலி சொர்க்கமாகக் கருதப்படுவது ஏன்’, ‘காலனித்துவக் காலத்தில் டச்சுக்காரர்கள் எவ்வாறு பாலித் தீவில் சுற்றுப்பயணத்தை வளர்த்தனர்’, ‘இந்தோனீசியா 1949ல் சுதந்திரம் பெற்றபின்னரும் முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில் இந்துப் பெரும்பான்மைத் தீவாக பாலி எவ்வாறு திகழ்கிறது’ போன்ற கேள்விகளை இந்த அங்கம் ஆராய்கிறது.
பாலியை அனுபவித்தல்
இந்த அங்கத்தில் லியு காங் எடுத்த 300க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மூலம் பாலி, ஜாவாவின் அக்கால வாழ்வு சித்திரிக்கப்படுகிறது.
பாலியின் கோயில்வடிவம், மாளிகைகளும் அரும்பொருளகங்களும், பாலி நிலப்பரப்பு, சந்தைகள், பாலி நீரிணையைத் தாண்டுவது, விவசாயம் என வெவ்வேறு பிரிவுகளாகப் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஜகார்த்தா, பாண்டுங், சுரபாயா அனுபவங்களும் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
பாலியின் மரபு
நான்கு ஓவியர்களும் பாலி பயணத்துக்குப் பின்னர், 1953 நவம்பர் கண்காட்சிக்காக 15 மாதங்களாக உருவாக்கிய ஓவியங்களில் சில இந்த அங்கத்தில் இடம்பெற்றுள்ளன.
பல ஆண்டுகள் கடந்தும் பாலித் தீவு தன் மரபைக் காத்துவந்துள்ளதால் கண்காட்சியில் காணும் பல மரபு அம்சங்களையும் இன்றும் அங்கு நேரில் காணமுடிகிறது.
மேல்விவரங்களுக்கு https://exhibitions.nlb.gov.sg/current/untoldstories/about/ இணையத்தளத்தை நாடலாம்.