தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
‘டைம்ஸ்’ நூல் விற்பனை நிறுவனம், ஹாலந்து சாலையில் உள்ள ஜெலிட்டா கடைத்தொகுதியில் இருந்த அதன் கடைசி கடையையும் செப்டம்பர் 22ஆம் தேதி மூடிவிட்டது.  

காலத்திற்கேற்ப மாறிவரும் நூல் வாசிப்புப் பழக்கம்

2 mins read
6d48d694-b774-4692-b77e-94193c465c09
தொழில்நுட்ப வளர்ச்சியால் இளம் தலைமுறையினர் மின்னூல் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். வருங்காலத்தில் அச்சு நூல்கள் வாசிப்பது ஒரு மதிப்பிற்குரிய, அசாதாரணமான பழக்கமாக மாறிவிடலாம். - படம்: பிக்சாபே

‘டைம்ஸ்’ நூல் விற்பனைக் கடைகளின் மூடல், நூல் பிரியர்கள் பலரையும் பாதித்துள்ளது. ஏறத்தாழ 40 ஆண்டுகளாக இயங்கி வந்த ‘டைம்ஸ்’, பலருக்கும் நீங்கா நினைவுகளைத் தந்துள்ளது. 

மேலும், மின்னிலக்கச் சாதனங்களால் ஆளப்படும் இந்த நவீன காலத்தில் நூல் வாசிப்போர் உண்டா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இன்று பலரும் மின்னூல் சாதனம் (e-reader) மூலம் நூல் வாசிப்பதுண்டு. இதனால், மின்னிலக்க நூல்கள் பலரையும் ஈர்த்துள்ளன. 

சிலருக்கு அச்சு நூல்கள் பிடிக்கும். வேறு சிலருக்கு மின்னிலக்க நூல்கள் மீது ஆர்வம் இருக்கும். இவ்விரண்டில் எது சிறந்தது?  

நூல்களை வெளியிடுவதற்கான செலவுகள் அதிகம் இருந்தாலும் நண்பர்கள், நூலகங்களிடமிருந்து அவற்றை இரவல் வாங்கி செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். 

இருப்பினும், இயற்பியல் நூலை வெளியிட்டு விற்பது கூடுதல் செலவு ஏற்படுவதாக நூல் பிரியர் சிந்து ஜனார்த்தனன், 34, கூறுகிறார். 

“ஒரு மின்னூல் வாசிப்புச் சாதனத்தில் 3,000க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அச்சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட ஒளி வசதியால் இரவிலும் நூல் வாசிக்க முடிகிறது,” என்கிறார் சிந்து.  

ஒரு மின்னூலின் எழுத்துரு, அளவு, நிறம், தளவமைப்பு போன்றவற்றை எளிதாகவும் தேவைகளுக்கு ஏற்றபடியும் வாசகர்கள் மாற்றிக்கொள்ளலாம். அப்படி இருந்தும், பலர் இன்னும் அச்சு நூல்களையே நாடுகின்றனர்.

எஞ்சியிருக்கும் பக்கங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைவது ஒரு வாசிப்பு அனுபவத்தின் பெரும் பகுதியாகும் என்கிறார் ஆசிரியர் யசோதா ரகுநாதன், 45.

“ஒரு நூலைக் கையில் பிடித்து, பக்கங்களை ஒவ்வொன்றாக திருப்பி கதைக்குள் மூழ்குவது மனநிறைவு தரும்,” என்கிறார் அவர். 

அதோடு, பிடித்த நூல்களைத் தொகுத்து வைத்திருப்பது ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.

மின்னூல் சாதனங்கள், தொடர்ச்சியாக பல மணி நேரம் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. அதோடு, அவை நூல்களை வேகமாக வாசிக்கும் தன்மையை ஏற்படுத்துவதால், நூலின் உள்ளடக்கத்தை உள்ளார்ந்து வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்துவிடுவதாக நூல் ஆர்வலர்கள் சிலர் ஒப்புக்கொள்கின்றனர்.  

ஒவ்வொரு நூலும் வாசகர்களுக்கு அளிக்கும் அனுபவம் தனித்துவமானது. வாழ்க்கை, உலகைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் சக்தி ஒரு நூலுக்கு உள்ளது. சிலருக்கு, நூல் வாசித்தல் மனதிற்கு இதம் தரும். 

தற்போது மின்னிலக்க நூல்களை அதிக வாசகர்கள் அணுகி வருகின்றனர். ஆனால், அவற்றை வாசிக்க ஒரு சாதனம் தேவைப்படுவதால் சிலரிடம் அதற்கான வசதியில்லை.

அச்சு நூல்கள், மின்னிலக்க நூல்கள் இவ்விரண்டும் மிக முக்கியம் என பெரும்பாலானோர் கருதுகின்றனர். 

அச்சு நூல்களைச் சேகரிக்கும் பழக்கம் நூல் பிரியர்களுக்கு மனநிறைவு தருகிறது.

அதே நேரத்தில், பல்வேறு தேவைகளைக் கொண்ட வாசகர்களுக்கு மின்னிலக்க நூல்கள் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இளம் தலைமுறையினர் மின்னூல் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். வருங்காலத்தில் அச்சு நூல்கள் வாசிப்பது ஒரு மதிப்பிற்குரிய, அசாதாரணமான பழக்கமாக மாறிவிடலாம்.

குறிப்புச் சொற்கள்