தென்கிழக்கு வட்டாரத்தில் வேலை வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தென்கிழக்கு வட்டாரத்தில் வேலை வழிகாட்டுதல் நிகழ்ச்சி

2 mins read
1f79773e-00e0-485b-8329-463187fec715
‘லேர்னிங் நெய்பர்ஹுட் 2025 @ சவுத்ஈஸ்ட்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய தென்கிழக்கு வட்டார மேயர் முகமது ஃபாமி அலிமான். - படம்: தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

தென்கிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் 4,500க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்களின் தொழில்பாதைகள் குறித்துத் தெளிவுபெற உதவியது ‘லேர்னிங் நெய்பர்ஹுட் 2025 @ சவுத்ஈஸ்ட்’ (Learning Neighbourhood 2025 @ South East) நிகழ்ச்சி.

‘ஹார்ட்பீட்@பிடோக்’கில் பிப்ரவரி 20 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நான்கு நாள் நிகழ்ச்சிக்கு வாழ்நாள் கற்றல் கழகமும் தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இணையவழி ஊழியர்கள், பராமரிப்பாளர்கள், தொழில்துறைக்குத் திரும்புவோர் உள்ளிட்ட அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான வளங்கள், வேலைவாய்ப்புகள், தொழில்துறை தொடர்பான ஆலோசனை முதலியவற்றை இந்நிகழ்ச்சி வழங்கியது.

புளூஎஸ்ஜி, எஸ்ஐஏ இஞ்சினியரிங் கம்பெனி, ஃபேர்பிரைஸ் குழுமம் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 100க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வேலை தேடுவோருக்கு வழங்கின.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற நேர்காணல்கள் மூலம் பங்கேற்பாளர்கள் தென்கிழக்கு வட்டாரத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றிக் கூடுதல் தகவல்களை அறிந்துகொண்டனர். இதன் மற்றோர் அங்கத்தில் நிலையான, நீண்டகால வேலைவாய்ப்புகளுக்கு மாற விரும்புவோருக்கான தொழில் ஆலோசனை அமர்வுகளும் நடைபெற்றன.

“கூடுதலான குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக நீண்ட பணி இடைவெளிக்குப் பிறகு திரும்புவோர் அல்லது பராமரிப்புப் பொறுப்புகளைச் சமநிலைப்படுத்த நினைப்போருக்கு, தொழில்துறைக்குத் திரும்புவது சவாலாக இருக்கலாம்.

“மற்ற சிலருக்கு, தங்கள் தேவைகளுக்கு ஏற்ற பதவிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம்,” என்று தென்கிழக்கு வட்டார மேயரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது ஃபாமி அலிமான் கூறினார்.

இந்நிகழ்ச்சி தென்கிழக்கு வட்டாரத்தில் வசிப்போருக்குத் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே நிலையான வேலைவாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் நீண்டகாலத் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பரிசீலிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதாக அவர் கூறினார்.

‘லேர்னிங் நெய்பர்ஹுட் 2025 @ சவுத் ஈஸ்ட்’ நிகழ்ச்சிக்கு அப்பால், தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள விரும்புவோர் நேரடியாகவும் இணையம்வழியும் நடைபெறும் பயிலரங்குகளிலும் பயிற்சி வகுப்புகளிலும் தங்கள் கற்றல் பயணத்தைத் தொடரலாம்.

குறிப்புச் சொற்கள்