மருத்துவருக்குப் பதிலாக இணையத்தை நாடும் சிங்கப்பூரர்கள்: வசதியா? விபரீதமா?

மருத்துவருக்குப் பதிலாக இணையத்தை நாடும் சிங்கப்பூரர்கள்: வசதியா? விபரீதமா?

3 mins read
80 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் நோய்களை சுயமாக இணையவழிக் கண்டறிவதாகக் கூறும் ஆய்வு
9420cfc9-84d5-427f-816a-ef2a823513ed
இணையவழி சுயமாக நோயைக் கண்டறிதல் வசதியாக இருந்தாலும், சில சமயம் தேவைப்பட்ட மருத்துவ உதவியை நாட தாமதிக்கக்கூடும் என்றார் ஈஸ்ட் கோஸ்ட் குடும்ப மருந்தகத்தின் மருத்துவர் கிரன் கஷ்யப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும் என்பது வழிவழியாகக் கூறப்படும் ஒன்று.

ஆனால், இன்று சிங்கப்பூரர்களில் 80 விழுக்காட்டினர் இணையத்தைப் பயன்படுத்தி, தாமாக நோய்களைக் கண்டறிகின்றனர் என ‘கிலோவிடா-ஆர்எக்ஸ்’ மருந்தக நிறுவனர் வித்ரோப் வோங் நடத்திய கருத்தாய்வு தெரியப்படுத்தியுள்ளது.

எனினும், அவர்களில் 70 விழுக்காட்டினர் இதனால் நோயைத் தவறாகக் கண்டறிந்ததாகவும், 62 விழுக்காட்டினர் அதனால் மருத்துவ உதவியை நாட தாமதித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

சிங்கப்பூரர்களில் 12 விழுக்காட்டினரே நம்பத்தகுந்த சுகாதாரத் தகவல்களை இணையத்தில் கண்டறிவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆய்வில் கூறினர்.

‘இணையம்வழி தீர்க்கமாக நோயைக் கண்டறிய முடியவில்லை.’

சரவணன் ஜீவாவிற்கு அவ்வப்போது எளிதில் கவனம் சிதறியது. சில விஷயங்களில் அவருக்குள் அபாரத் திறனும் பொதிந்திருந்தது.

தாம் சமூக ஊடகங்களில் படித்த பதிவுகளின் அடிப்படையில் தமக்கு ‘ஏடிஎச்டி’ எனப்படும் கவனக் குறைபாடு இருப்பதாக அவர் எண்ணினார்.

ஆனால் கூடுதலாக அவர் இணையத்தில் படிக்க படிக்க, சமூக ஊடகங்களில் உள்ளவை மேலோட்டமான கருத்துகளே என்றும், ‘ஏடிஎச்டி’ உடைவர்கள் தம்மைவிட மேலும் பல சவால்களை எதிர்நோக்குவர் என்றும் அவருக்குத் தோன்றியது. அதனால் தமக்கிருப்பது ‘ஏடிஎச்டி’ அல்ல எனக் கருதி அவர் மருத்துவரை அணுகவில்லை.

“ஏடிஎச்டி அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும் என்பதால், பிறரது அனுபவங்களின் அடிப்படையில் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியவில்லை. மருத்துவரை அணுகியிருந்தால் தெளிவு கிடைத்திருக்கும்,” என்றார் ஜீவா, 19.

‘என் ஆருயிர் நண்பர் கூகல்’

ஜீவாவைப் போலவே, நோய்க்கான அறிகுறி ஏதேனும் தமக்கு இருப்பினும், உடனடியாக கூகல் தளத்தில் அது எந்த நோயாக இருக்கக்கூடும் என தீர்மானிக்க முயற்சி செய்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் குமார், 29.

“இணையம் வழி சுயமாக நோயைக் கண்டறிதல் மிகப் பயனுள்ளதாக நான் கருதுகிறேன். எத்தகைய நோயாக இருக்கும் என ஊகித்து, மனதளவில் அதற்குத் தயாராகி, மருத்துவரைக் காண்பதற்குமுன் ஒரு நாள் வீட்டு வைத்தியங்களைச் செய்துபார்க்க இது வாய்ப்பளிக்கிறது.

“சிக்கலான நோய் அறிகுறிகள் இருந்தபோது நான் இறுதியில் மருத்துவரை அணுகவேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, ஒருமுறை எனக்கு வயிற்றுக் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது வீட்டு வைத்தியங்கள் உதவவில்லை. நான் மருத்துவரிடம் செல்லவேண்டியிருந்தது,” என்றார் வினோத்.

பொதுவாக, நோய் அறிகுறிகள் ஒரு நாளைக்குமேல் நீடித்தால் தாம் மருத்துவரைக் காண்பதாக அவர் கூறினார்.

இணையத்தில் ஆறுதல், வசதி

“தலைப் பேண், தோல் சொறி, மாதவிடாய் வலி, தலைவலி, காய்ச்சல் போன்ற எளிய உடல்நலப் பிரச்சினைகளைச் சொந்தமாகக் கண்டறியலாம். சில அறிகுறிகளை மருத்துவரிடம் சொல்ல கூச்சப்படும்போது இணையம் கைகொடுக்கும்.

“பல நோய் அறிகுறிகளும் சாதாரணமானவை என்ற மன ஆறுதலை இணையத்தில் பெற முடிகிறது. ஆனால், நிவாரணம் தேவைப்பட்டால் மருத்துவரிடம் செல்லவேண்டும்,” என்றார் டேனியல் கு தர்மராஜ், 60.

‘தவறுதலாக நோயைக் கண்டறியக்கூடும்’

“மக்கள் தாமாக முயன்றால், நோய்களைத் தவறுதலாகக் கண்டறியக்கூடும். இது உண்மையான நோயைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுத்தலாம்,” என்றார் ஈஸ்ட் கோஸ்ட் குடும்ப மருந்தகத்தின் மருத்துவர் கிரன் கஷ்யப்.

இணையம், பலவித நோய்களையும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் தொடர்புபடுத்துவதால் இது தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் கூறினார்.

“எனினும், இருமல், சளி போன்ற சாதாரண உடல்நலப் பிரச்சினைகளை இணையவழி இலவசமாகக் கண்டறிந்து, வீட்டிலிருந்தபடி நிவாரணம் பெறலாம். மருத்துவர்கள் மட்டுமன்றி, மருந்தாளுநர்களிடம் இருந்தும் அறிவுரை பெறலாம்.

“சிங்கப்பூர்வாசிகள் தங்களது ஆரோக்கியத்தைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். எப்போது மருத்துவரை நாடுவது என்பது அவர்களுக்கு அப்போது புரியும்,” என்றார் டாக்டர் கஷ்யப்.

சிங்கப்பூர்வாசிகள் தங்களது ஆரோக்கியத்தைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
ஈஸ்ட் கோஸ்ட் குடும்ப மருந்தகத்தின் மருத்துவர் கிரன் கஷ்யப்.
குறிப்புச் சொற்கள்