உலகில் கிட்டத்தட்ட 1.1 பில்லியன் சிறார்களும் இளையர்களும் செவிப்புலன் இழப்பிற்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.
பேரோசையால் சிறார் எளிதில் செவிப்புலன் பாதிப்பிற்கு ஆளாகலாம் என எச்சரிக்கிறார் ‘அமேசிங் ஹியரிங்’ எனும் மருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், செவிப்புலன் வல்லுநருமான ஷரத் கோவில்.
கடுமையான சூழல்களில் ஒருவரது காதுகளின் உட்புறம் பாதிக்கப்பட்டு, அது நிரந்தரச் செவித்திறன் இழப்பை உண்டாக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதுகுறித்து செவிப்புலன் வல்லுநர் ஷரத் கூடுதல் தகவல்களை அளித்தார்.
செவிப்புலன் இழப்பை தடுக்க ஒருவர் முதலில் சத்தமாக இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார் ஷரத். ஒலி அளவை 60 விழுக்காட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பாடல்கள் கேட்க வேண்டும்.
சிறுபிள்ளைகள் உள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பாடல்கள் கேட்கும்போது அவ்வப்போது இடைவேளைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இளம்பிள்ளைகளுக்கு செவிப்புலன் இழப்புக்கான அறிகுறிகள் மிதமாக தென்படும். அவற்றை பெற்றோர் முன்கூட்டியே அறிந்து தக்க நடவடிக்கைகள் எடுப்பது நல்லது.
முணுமுணுப்பு, ஒருவரின் பேச்சு தெளிவாக புரியாமல் இருப்பது, வகுப்பறை போன்ற சூழல்களில் கவனத்துடன் செயல்பட முடியாமல் இருப்பது, தேவைக்கு அதிகமான அளவில் ஒலி அளவைக் கூட்டுவது போன்ற பிள்ளைகளின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை வைத்து பெற்றோர் அறிந்துகொள்ளலாம்.
பலர் செவிப்புலன் இழப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்று வருந்திய ஷரத், அது நாளடைவில் மறதிநோய்க்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். செவிப்புலன் இழப்பு ஒருவருக்கு மனவுளைச்சலையும் உண்டாக்கும் என்ற ஷரத், ஒருவரின் அன்றாட வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றார்.
செவிப்புலன் இழப்பு வருவதற்கு முன்னர் ஒருவருக்கு டின்னிடஸ் எனும் காதிரைச்சல் ஏற்படும் என்ற ஷரத், ஒருவருக்குப் பதற்றம், மனவுளைச்சல், உறக்கமின்மை, எளிதில் எரிச்சலடைவது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
டின்னிடஸ், செவிப்புலன் இழப்பிற்கு இட்டுச்செல்லும் முன்னரே அதுகுறித்த அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று ஷரத் கேட்டுக்கொண்டார்.
அதுபோல, செவிப்புலன் கருவிகள் ஒரு சிலருக்குப் பக்க விளைவுகளை உண்டாக்கலாம் என்ற ஷரத், ஆயினும் பெரும்பாலான நேரங்களில் அது அச்சப்படும் அளவிற்கு அபாயமானதாக இராது என்றும் உறுதியளித்தார்.