கடலின் தூய்மையைப் பாதுகாப்பது மனித குலத்தைப் பாதுகாப்பது போன்றது

2 mins read
77f18bf9-933f-4f91-ac70-ddf1e67b1500
ஷெரட்டன் டவர்ஸ் சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற பெருங்கடல் தொகுப்பு மாநாட்டில் பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் உலக நாடுகள் அனைத்திற்கும் பங்குண்டு என்று வலியுறுத்தப்பட்டது. - படம்: சீகீப்பர்ஸ்

பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் உலக நாடுகள் அனைத்திற்கும் பங்குண்டு.

இதில் இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்கள், வர்த்தகத் தலைவர்கள், அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கைகோத்துச் செயல்பட வேண்டும்.

ஷெரட்டன் டவர்ஸ் சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற பெருங்கடல் தொகுப்பு மாநாட்டில் இந்தக் கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

‘சீகீப்பர்ஸ்’ (SeaKeepers) எனும் அனைத்துலகக் கடல் பராமரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் கூட்டத்தில் கடல்துறை வல்லுநர்கள் ஒன்றுகூடி, கடலின் தூய்மையைப் பாதுகாப்பது குறித்த யோசனைகளை முன்வைத்தனர்.

தேசிய வளர்ச்சி, மின்னிலக்க மேம்பாட்டு, தகவல் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொடக்கவுரை ஆற்றிய திரு டான், “கடற்பாறைகளைத் தூய்மைப்படுத்துதல், சிங்கப்பூர் மாணவர்களின் ஆய்வுகளுக்கு நிதி அளித்தல், சிறந்த கடல்துறைப் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு விருது வழங்குதல் என நம் உள்ளூர் கடல்துறைப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சீகீப்பர்ஸ் அமைப்பு ஆதரவு அளித்துவருவது மகிழ்ச்சிக்குரியது,” என்று கூறினார்.

உள்ளூர் அறிவியலாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோருடன் அரசாங்கம் தொடர்ந்து இணைந்திருந்து, அனைத்துலக வல்லுநர்களின் அறிவுரைகளையும் நினைவிற்கொண்டு பெருங்கடல்களின் சுற்றுச்சூழலையும் கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மையையும் காப்பாற்றச் செயல்படும் என்று திரு டான் கூறினார்.

மாநாட்டில் பேசியோரில் புகழ்பெற்ற முக்குளிப்பாளரும் சுற்றுப்புற ஆர்வலருமான ஃபேபியன் குஸ்டோவும் (Fabien Cousteau) அடங்குவார். அறிவியல், தொழில்நுட்பம், கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து அவர் பேசினார்.

“கடலைக் காப்பது மனிதர்களான நம்மையும் காப்பதற்குச் சமமாகும். நீடித்த, நிலையான உலகை உருவாக்குவதற்கான அறிவுத்திறன் இருந்தபோதும் சரியான முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான பேரறிவு நம்மிடம் உள்ளதா என்பதே கேள்வி,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்