சமூக ஊடகத்தில் பிரபலமாகும் ‘சைலியம் உமி’

சமூக ஊடகத்தில் பிரபலமாகும் ‘சைலியம் உமி’

2 mins read
81c357a9-b6e4-456f-b534-918d9ada92a2
இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்படும் இந்த ‘சைலியம்’ பயிர், அதன் வடிவம் காரணமாக அங்கு ‘இசாப்கோல்’ (isabgol) - குதிரையின் காது என்று அழைக்கப்படுகிறது. - படம்: பிக்சாபே

சமூக ஊடகங்களில் அவ்வப்போது புதிய உணவு முறை, மூலப்பொருள்கள், அவற்றின் குணங்கள் பிரபலமடைவது இயல்பாகியுள்ளது. இந்நிலையில், ‘சைலியம் உமி’ (psyllium husk) எனும் நார்ச்சத்து நிறைந்த பொருள் உடல் எடையைப் பேணவும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவும் பொருளாகப் பிரபலமடைந்துள்ளது.

இது சைலியம் என்ற தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படும் நார்ச்சத்து நிறைந்த பொருள்.

இது குடலில் ஜெல் போன்ற பொருளை உற்பத்தி செய்து செரிமானத்தை மேம்படுத்துவதாகவும், அதன் விளைவாக ரத்தச் சர்க்கரை, கொழுப்பு ஆகியவை படிவதைத் தடுப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் மலச்சிக்கலைச் சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருள்கள் இதில் இல்லை என்றாலும், செரிமானக் குழாயில் உள்ள ‘குளுக்கோஸ்’ எனும் சர்க்கரையை உறிஞ்சி, ரத்தத்தில் கலக்கும் அளவைச் சற்றே குறைக்க உதவுகிறது.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து பசியை அடக்கி, உணவின் மீதான ஏக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் எடைக் குறைப்பில் ஆர்வமுள்ளோரின் மத்தியில் இது அதிகம் பேசப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு ‘பிரிபயாட்டிக்’ போலச் செயல்பட்டு, குடலில் நல்ல ‘பாக்டீரியங்களின்’ அதிகரிப்புக்கும் சற்றே உதவுகிறது.

சமூக ஊடகங்களில் எளிதான இணை உணவு, மருந்துபோல பேசப்பட்டாலும், சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தகுந்த அளவு நீருடன் உட்கொள்ளாவிட்டால் வயிற்று வலி, வாந்தி தொடங்கி குடல் அடைப்புவரை ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சிலவகை மருந்து உட்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு குறையலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எந்தவித நீண்டகால உடல் பிரச்சினைகள் இல்லையென்றாலும், எடைக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இதனை உட்கொள்வோர் உரிய மருத்துவர்கள், நிபுணர்களின் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது.

குறிப்புச் சொற்கள்