தயாமயி பாஸ்கரன்
இவ்வாண்டு ‘கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்திரீட்’ (Christmas on a Great Street) எனும் கருப்பொருளில் ஆர்ச்சர்ட் சாலையில் கிறிஸ்துமஸ் விளக்குகள் ஏறக்குறைய 400 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
1984ஆம் ஆண்டிலிருந்து ஆர்ச்சர்ட் சாலை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒளியூட்டப்படுகிறது. மேலும், தற்காலிகக் கடைகள், கேளிக்கை உலாக்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட ‘தி கிரேட் கிறிஸ்துமஸ் வில்லேஜ்’ எனும் கிறிஸ்துமஸ் சந்தை இவ்வாண்டு ‘நீ ஆன் சிவிக் சென்டர்’ நிலையத்தில் மீண்டும் மக்களை வரவேற்றது.
ஆர்ச்சர்ட் சாலை கொண்டாட்டங்களில் 14 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரமும் பனிப்பொழிவு நிகழ்ச்சிகளும் புதிய அங்கங்களாக இடம்பெற்றன. 2023ஆம் ஆண்டில் 4.1 மில்லியன் பார்வையாளர்களைக் கிறிஸ்துமஸ் ஒளியூட்டு ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்ச்சர்ட் சாலையில் குவிந்த மக்கள்
கடைகளைக் காணவும், உணவுவகைகளைச் சுவைக்கவும், கிறிஸ்துமஸ் கிராமங்களைக் கண்டுகளிக்கவும், விளையாட்டுகளில் பங்கேற்கவும், இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் காணவும் மக்கள் திரண்டனர்.
ஈசூன் பகுதியிலிருந்து ஆர்ச்சர்ட் சாலைக்கு வந்திருந்த கூ டெக் புவாட் மருத்துவமனை தாதியர் உஷா, ஸ்டெஃபி, ஜாஸ்மின் ஆகியோர் தங்கள் உள்நோயாளி சிகிச்சைப் பிரிவில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காகப் பரிசுப்பொருள்கள் வாங்க வந்திருந்தனர். திங்கட்கிழமை இரவு மழை காரணமாக சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கடைகள் இல்லாததால், எப்போதும் வாங்கும் கடைகளில் வாங்கிச் செல்வதாகக் கூறினர்.
“எப்படியும் இது ஒரு சிறப்பான கொண்டாட்ட ஆண்டு. புதிதாக நண்பர்களாகியுள்ள நாங்கள் இணைந்து கொண்டாடும் முதல் கிறிஸ்துமஸ் இது. அதுவே மகிழ்வைப் பன்மடங்காக்கியுள்ளது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
மழை காரணமாக இந்த பிரம்மாண்ட விளையாட்டுகளைக் கண்டுகளிக்க முடியாமல் போனது ஏமாற்றமளித்ததாக வருத்தத்துடன் சொன்னார் மாணவி யோஷனா.
தீவெங்கிலும் சந்தைகள், அலங்காரங்கள்
கிறிஸ்துமஸ் குதூகலத்தின் சின்னமாக ஆர்ச்சர்ட் சாலை விளங்கினாலும், தீவு முழுவதும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களும் சந்தைகளும் பொலிவூட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
விவோசிட்டியில் 15 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம், சிறுவர்களுக்கான ஹேஸ்பிரோ விளையாட்டுத் திருவிழா, பனிப்பொழிவு, கிறிஸ்துமஸ் சந்தை எனப் பலவும் உள்ளன.
சிட்டி ஸ்குவேர் மாலில், பால் போத்தல்களாலான 3.8 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம் காட்சியளிக்கிறது. இது சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
நீண்ட பரிசுப் பட்டியல்
கிறிஸ்துமசுக்காக 37 பரிசுப்பொருள்களை வாங்குவதற்காக விவோசிட்டிக்குப் பட்டியலுடன் வந்திருந்தார் அற்புதமேரி.
“கிறிஸ்துமசுக்கு முதல் நாளும் கிறிஸ்துமஸ் நாளன்றும் நாங்கள் கொண்டாட்டங்களுக்குச் செல்லவிருக்கிறோம். அப்போது அனைவருக்கும் பரிசுப்பொருள்கள் தரவேண்டும்,” என உற்சாகத்துடன் கூறினார் அவர்.
கிறிஸ்துமஸ் கொண்டாடும் பிற சமயத்தினர்
தன் பிள்ளைகளோடு கிறிஸ்துமஸ் பரிசுப்பொருள்களை வாங்க விவோசிட்டிக்கு வந்திருந்த ராணி எஸ் கே, 59, தான் இந்து என்றாலும் தம் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யவுள்ளார்.
“அனைவரையும் உள்ளடக்கும் பண்டிகையாகக் கிறிஸ்துமசையும் நாங்கள் கொண்டாடுகிறோம். நாங்கள் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வோம். எங்கள் வீட்டிலும் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம். ஏறக்குறைய 30, 40 பேரை வரவேற்போம்,” என்றார் ராணி.
தான் சென்றபோது விவோசிட்டியில் பனிப்பொழிவு இல்லாவிட்டாலும் அதைக் காணாததில் இவருக்கு எந்த வருத்தமும் இல்லை. “இரண்டு நாள்களுக்கு முன்தான் நாங்கள் காஷ்மீரிலிருந்து திரும்பினோம். அங்கு நாங்கள் உண்மையான பனிப்பொழிவைப் பார்த்தோம்,” என்றார் அவர்.
உறவுகளை வலுப்படுத்தும் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் திருநாளைத் தம் நண்பர்களுடன் கடற்கரையோரமாகச் செலவிடத் தீர்மானித்துள்ளனர் தோழர்களான ரெங்க பாலாஜி, சூர்யா நடராஜன்.
“அனைவரும் ஒன்றுகூட கிறிஸ்துமஸ் ஒரு வாய்ப்பாக அமைகிறது. கிறிஸ்துமஸ் ஒண்டர்லேண்டுக்கும் என் நண்பர்களுடன் சென்றேன்,” என்றார் ரெங்க பாலாஜி, 21.
“கிறிஸ்துமஸ் என்றாலே என் மனத்தில் தோன்றுவது, பிறருக்கு அன்பளிப்புகள் வழங்குவதே. கிறிஸ்துமஸ் இடைவேளை புத்தாண்டோடு ஒட்டி வருவதால், குடும்பத்தோடு நேரம் செலவிடவும் வெளியூர் செல்லவும் உகந்ததாக அமைகிறது,” என்றார் சூர்யா நடராஜன், 21.
திருநாளன்றும் தொடரும் பணி
மற்றவர்களுக்குப் பொது விடுமுறை என்றாலும், மரினா பே சேண்ட்ஸ் மேல்மாடியிலுள்ள ‘செ லா வி’ உணவு, மதுபானக்கூடத்தில் பணியாற்றும் சமையல் நிபுணர்கள் ராஜேஷ், அபு பக்கர் சித்திக் இருவருக்கும் கிறிஸ்துமசும் பணிநாள்தான்.
“எங்கள் வாடிக்கையாளர்களின் இன்பத்தில்தான் எங்கள் கிறிஸ்துமஸ் அமைகிறது,” என்றார் ராஜேஷ், 21.
கடந்த பத்தாண்டுகளாக தேக்கா பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வரும் முகமது ஹாஜி, 36, “புதுப்பிப்பிற்குப் பிறகு விற்பனை குறைந்துள்ளது. எனினும், இப்போது அனைத்து சமயத்தினரும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதால் இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்,” என்றார்.
லிட்டில் இந்தியாவில் கிறிஸ்துமஸ்
தேக்காவின் ஸ்ரீகணேஷ் சில்க்ஸ் மேலாளர் சந்திரசேகர், 55, கிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்தியர்கள் பெரும்பாலும் சேலைகளை விரும்பி வாங்குவதாகவும், அதற்காகப் புதிய வகை சேலைகள் குவிந்துள்ளதாகவும் சொன்னார்.
முஸ்தபா சென்டர் காசாளர் திலகம், 59, “மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு இனிப்புகள், கேக்குகள், குக்கீ வகைகள் வாங்கிச் செல்கின்றனர். கடைசி நேர வணிகம் களைகட்டியுள்ளது,” என்றார்.
“புத்தாண்டு வருவதால் விடுமுறைக்கு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வோரும், இங்கு சுற்றுலா வருவோரும் பரிசுப்பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்,” என்றும் அவர் சொன்னார்.
தேக்கா பகுதியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடர்பில் பொருள்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
தம் வீட்டில் 20க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து படைக்க இருக்கும் ஹெலன், 50, “இது எங்களுக்கு முக்கியமான கிறிஸ்துமஸ். எனது 50ஆவது பிறந்த நாள் ஆண்டு, 25ஆவது திருமண ஆண்டு, எங்கள் மகள் கருவுற்றுள்ள ஆண்டு. எங்கள் மகிழ்வுக்கு அளவில்லை,” என்றார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு இறைச்சி வாங்க வந்திருந்த கிரேஸ், 64, “ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு 30 பேருக்கு இந்திய உணவு விருந்து அளிப்பது வழக்கம்,” என்றார்.
வெளிநாட்டினர் வருகை
சிங்கப்பூர் மக்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுப்பயணிகள் கொண்டாட்டங்களுக்காகக் குவிந்துள்ளனர். குறிப்பாக, ஆர்ச்சர்ட்டின் பண்டிகைக்கால குதூகலம் அவர்களை ஈர்த்துள்ளது.
சிராங்கூன் கார்டன்ஸ், அங் மோ கியோ பகுதிகளில் உணவுக் கடை நடத்தி வரும் ரமேஷ், மலேசியாவிலிருந்து வந்திருந்த தம் உறவினர்களுடன் ஒளியூட்டைக் காணவும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்குபெறுவதற்காகவும் வந்திருந்தார்.
“சிறு பிள்ளைகளுடன் வந்துள்ளோம், பல்வேறு உணவு வகைகளைச் சுவைக்கும் எண்ணத்தில் வந்தோம். மழை வந்ததால் நடந்து சென்று இந்த கடைகளை ரசிக்க முடியவில்லை. இந்த பனி விழும் அமைப்பு பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கொண்டாட்ட உணர்வைத் தருகிறது,” என்றார் அவர்.
அவருடன் வந்திருந்த குழந்தைகள், “கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், அவரிடம் புதிய உடைகள், கரடி பொம்மை, கார், ரயில் பொம்மைகள் கேட்போம், அவர் தருவார்!” என்று புன்சிரிப்புடன் கூறினர்.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா சென்ற யோகவர்தினி, 32, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். இங்கு கொண்டாட்டங்கள் அதிகம் இருக்கும் என்றும் தனது நட்பு வட்டத்திலுள்ள சிறுவர்களுக்குப் பார்த்துப் பார்த்து பரிசுப்பொருள்கள் வாங்கிக் கொடுப்பது தனக்கு விருப்பமானது என்றும் அவர் சொன்னார்.
கிறிஸ்துமஸ் ஒளியூட்டைக் காண்பதற்காகவே ஒரு நாள் பயணமாக மலேசியாவின் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளார் பரிமளா காந்தி.
தன் வாழ்வில் சில ஆண்டுகளைச் சிங்கப்பூரில் கழித்ததை நினைவுகூர்ந்த அவர், “அதற்குப்பின் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் இங்கு வந்து செல்வேன்,” என்றார்.
“2017ஆம் ஆண்டுக்குப்பின் வர இயலாமல் போனது. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. ஆர்ச்சர்ட் சாலை தனி குதூகலம் அளிக்கும். திரளான மக்களைக் காண்பது, அங்கங்கே இருக்கும் உணவுக் கடைகள், கிறிஸ்துமஸ் கிராமங்கள், இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் என வண்ணமயமாக இருக்கும். இது ஒரு தனி அனுபவம்,” என்றும் அவர் சொன்னார்.
அனைவரையும் இணைக்கும் கிறிஸ்துமஸ்
வெவ்வேறு பின்னணிகள். ஒவ்வொருவரும் கிறிஸ்துமசை வெவ்வேறு விதங்களில் உணர்கின்றனர். எனினும், அன்பு, தாராள மனம், உறவுகள், பொதுநலம் ஆகிய அடிப்படைப் பண்புகள் மக்களை ஒன்றிணைப்பதைக் காணும்போது கிறிஸ்துமஸ் உண்மையிலேயே வந்துவிட்டது என தெளிவாகத் தெரிகிறது!