தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செவிகளில் இன்பத்தேன் பாய்ச்சிய வீணையிசை

3 mins read
b55686d0-b16f-4b6b-a7bd-70af1dfd2f92
எம்ஜிஆர் காலத்தில் வெளிவந்த பாடல்கள் முதல், அனிருத் இசையில் வெளிவந்த ‘தங்கமே’ பாடல் வரை வெவ்வேறு வயதினரைக் கவரும் வகையில் பல்வேறு பாடல்களைத் தமது வீணையில் வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார் கலைமாமணி ராஜேஷ் வைத்யா. - படம்: விஷ்ருதா நந்தகுமார்

‘உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானின் பாடலை ரசிகர்கள் பாட, ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க, பிஜிபி அரங்கமே இசை வெள்ளத்தில் மிதந்தது.

வீணை வித்துவான் ராஜேஷ் வைத்யாவும் ‘ரீ இன்கார்னேஷன்’ உள்ளூர் இசைக்குழுவும் இணைந்து படைத்த ‘ராகங்கள் 16’ இசைக் கச்சேரியில் கர்நாடக சங்கீதமும் தமிழ்த் திரையிசைப் பாடல்களும் ஒன்றுகலந்து பார்வையாளர்களை இன்பத்தில் ஆழ்த்தின.

8 பாய்ண்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த பிரம்மாண்ட இசைக் கச்சேரி, செப்டம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் பிஜிபி மண்டபத்தில் நடந்தேறியது. இரவு 7 மணியளவில் தொடங்கிய இந்த இசைக் கச்சேரி ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு நடைபெற்றது.

மனைவியோடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கலைமாமணி ராஜேஷ் வைத்யாவிற்கு நன்றி தெரிவித்தார். “சிங்கப்பூரையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமாகப் பாரம்பரியமும் பாடல்களும் திகழ்கின்றன,” என்று திரு தினேஷ் வாசு குறிப்பிட்டார்.

எந்தவித முன்பதிவு இசையுமின்றி வெவ்வேறு ராகங்களில் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் நேரடியாக ‘மேஷ் அப்’ பாணியில் படைக்கப்பட்டன.

எம்ஜிஆர் காலத்தில் வெளிவந்த பாடல்கள் முதல், அனிருத் இசையில் வெளிவந்த ‘தங்கமே’ பாடல் வரை வெவ்வேறு வயதினரைக் கவரும் வகையில் பாடல் தேர்வு அமைந்திருந்தது.

‘வெண்ணிலவே’, ‘மின்சாரக் கண்ணா’, ‘மார்கழித் திங்களல்லவா’ போன்ற 90களில் வெளிவந்த பாடல்கள் அரங்கில் ஒலித்தபோது ரசிகர்களிடையே பலத்த கரவொலி எழுந்தது.

‘லூசு பெண்ணே’, ‘ஆளுமா டோலுமா’ போன்ற பாடல்களை வீணை இசையில் கேட்டபோது இளைய ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

‘இளமை இதோ இதோ’ என்ற இளையராஜாவின் துள்ளல் பாடலோடு இசைக்கச்சேரி நிறைவடைந்தபோது, அரங்கமே எழுந்து நின்று பலத்த கைத்தட்டலோடு இசைவிருந்தளித்த கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்தது.

“குத்துப் பாடல்களுக்கு நான் தவில் வாசித்தபோது ரசிகர்களின் உற்சாகத்தை மேடையிலிருந்து நன்றாக உணர முடிந்தது,” என்றார் ‘ரீ இன்கார்னேஷன்’ இசைக் குழுவைச் சேர்ந்த குமரன் சின்னையா, 36.

ராஜேஷ் வைத்யாவோடு இணைந்து கச்சேரி படைத்த அனுபவம் மிகவும் புதுமையாகவும் சில நேரங்களில் கடினமாகவும் இருந்ததாகக் கூறிய அவர், “ஒவ்வொரு முறையும் புதிய சிந்தனைகளைச் செயல்படுத்த எண்ணுவார் ராஜேஷ் வைத்யா,” என்றார்.

கச்சேரியின் இறுதி அங்கம் தம்மைப் பெரிதும் ஈர்த்தது என்றார் ராஜேஷ் வைத்யாவின் இசையை முதன்முறையாக நேரில் கேட்ட வளர்மதி, 59. “ரீ இன்கார்னேஷன் இசைக்குழுவின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தவறாமல் சென்றுவிடுவேன்,” என்று அவர் கூறினார்.

‘மருதமலை மாமணியே முருகய்யா’ என்ற பாடலை கேட்டபோது மெய்சிலிர்த்துவிட்டது என்றார் அவர்.

பாரம்பரிய கர்நாடக இசையை எதிர்பார்த்து வந்திருந்த கிருத்திகா பாலாஜி, 20, படைக்கப்பட்ட கச்சேரியைப் பார்த்து வியந்துபோனார். “இதுவரை நான் சென்ற கச்சேரிகளிலிருந்து இது தனித்து நிற்க வெவ்வேறு ராகங்களில் படைக்கப்பட்ட ‘மேஷ் அப்’ பாடல்களே காரணம்,” என்றார் அவர்.

ரீ இன்கார்னேஷன் இசைக்குழு தனது அடுத்த நிகழ்ச்சியைக் ‘கலா உத்சவம் 2025’ல் படைக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்