சோற்றுடன் குழம்பு, காய்கறி பிரட்டல், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைச் சேர்த்து பிணைந்து உண்ணுவதைப்போல் இசை, நடனம், கதை சொல்லுதல், அறுசுவை உணவு அனைத்தையும் இணைத்துப் படைத்தது ‘ரசா’ எனும் கலைநிகழ்ச்சி.
சிங்கப்பூர்-மலேசியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘மண்டலா காலேக்டிவ்ஸ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ‘ஈட் அட் மை கிச்சன்’ உணவகத்தில் வழிநடத்தினார்கள். அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் மதியம் 12.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது.
12ஆம் நூற்றாண்டுப் புலவர் ஜெயதேவர் எழுதிய 24 அஷ்டபதி பாடல்களில் ஐந்து பாடல்களை மையமாகக் கொண்டு இந்த பக்திப் படைப்பைக் கலைஞர்கள் உருவாக்கினார்கள். கோலாலம்பூரில் ஏறத்தாழ 28 பார்வையாளர்களுடன் அசைவ உணவு பரிமாறி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி சிங்கப்பூரில் 90க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் சைவ உணவு பரிமாறி நடந்தேறியது.
ஹில்டன் விடுதியின் மூத்த மேலாளர், பரதநாட்டியக் கலைஞரான திருமதி தர்ஷினி கோவிந்தராஜூ, 44, “இரவு நேர உணவு சந்திப்பின்போது, நான் பயிலும் பரதநாட்டியக் கலையின் நுட்பங்களைச் சுவைக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று சமையல் கலைஞரான என் நண்பர் அப்பிணாவிடம் கேட்டேன். அந்தச் சிந்தனையின் அடிப்படையில் இந்த முயற்சி தொடங்கியது,” என்றார்.
“நம்மில் எத்தனைப் பேர் நம் கைப்பேசியால் ஏற்படும் கவனச்சசிதறல் இல்லாமல் உணவு உண்கிறோம்? விழிப்புடன் சாப்பிடும் அனுபவத்தை ‘ரசா’ உருவாக்கித் தருகிறது,” என்றும் திருமதி தர்ஷினி குறிப்பிட்டார்.
நடனம்
கண்ணபிரான் மீதான பக்தி தோய்ந்த அஷ்டபதி பாடல் தொகுப்பையொட்டி தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பயன்படுத்தியதால் தனக்கு அது நன்கு பரிச்சயமாக இருந்தது. இருப்பினும், அஷ்டபதியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்ததாகவும் திருமதி தர்ஷினி குறிப்பிட்டார்.
மற்ற இனத்தவர்க்கும் இந்தக் கலைகளைக் கொண்டுசேர்ப்பது அவரது நோக்கமாக இருந்தது. ஒரு சிறிய சிந்தனையாகத் தொடங்கிய படைப்பை 90 பார்வையாளர்கள் பார்க்க வந்துள்ளனர் என நினைக்கும்போது வியப்பாக உள்ளதாகவும் திருமதி தர்ஷினி கூறினார்.
இசை
“நாங்கள் கோலாலம்பூரில் சந்தித்து 9 மணிநேரமாக அஷ்டபதி பாடல்களைப் பற்றிக் கலந்துரையாடினோம். என் குழுவினர்கள் அஷ்டபதியைப் பற்றி விவரிக்கத் தடிப்பான புத்தகங்களைக் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து இணையம்வழி சந்தித்தோம்,” என்றார் ஈப்போவைச் சேர்ந்த மாணவி ஐஷ்வர்யா லக்ஷ்மி தேவன், 21.
தொடர்புடைய செய்திகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பாடல்களில் ‘குரு யாதுநந்தனா’ எனும் பாடல், அந்தரங்க உணர்வுகளையொட்டிய மிக அரிய பாடல். அது பெரும்பாலும் மேடையில் படைத்துக் காட்டப்படுவதில்லை. ஆகவே, அவரது குழுவினர் துணிந்து அந்தப் பாடலைப் பயன்படுத்தினார்கள். தனது கர்னாடக இசை அரங்கேற்றத்தை நிறைவுசெய்த இவர், இந்தப் படைப்பில் நடனத்திற்கு ஏற்றவாறு ராகங்களைப் பாடினார்.
உணவு
“அஷ்டபதி பாடல்களில் உணவைப் பற்றிக் குறிப்பிடாததால் அவற்றை உணவுகளுக்கு ஏற்றவாறு அமைப்பது சவாலாக இருந்தது. கிருஷ்ணன் ஒரு சமையல் கலைஞராக இருந்தால் எவ்வாறு சமைத்திருப்பார் என்ற கற்பனையில் இந்த உணவுகளைப் படைத்தேன்,” என்றார் தனியார் சமையல் கலைஞரும் இரவு உணவகத் தொகுப்பாளருமான திரு அபிணாஷ் சந்தானகிருஷ்ணன், 29.
அஷ்டபதி பாடல் தொகுப்புகளைச் சைவ உணவின்மூலம் படைக்கும்போது, குறிப்பாக, புரதச் சத்தை உணவில் சேர்ப்பது தனக்கு சவாலாக இருந்ததையும் திரு அபிணாஷ் பகிர்ந்தார்.
“வாசனைத் திரவியமாகவும் நறுமணத்திற்காகவும் உபயோகமாகும் சந்தனம் பாடல்களில் இடம்பெறுவதால் அதனை உணவில் இணைக்க நான் முயற்சித்தேன்.
கிட்டத்தட்ட 10 மாதங்களாக ஆய்வு செய்து இந்த உணவைத் தயாரித்தேன். உணவின் முக்கியக் கூறுகள் சூட்சுமமாகப் பகிரப்பட்டாலும் கடைசியாக அவற்றை ஒருங்கிணைக்க வேண்டியது பார்வையாளர்களின் வேலை,” என்றார் திரு அபிணாஷ்.
கதை சொல்லுதல்
நாடகக் கல்வியாளரும் பயிற்சியாளருமான திருமதி ஐஸ்வர்யா ஷண்முகநாதன், 38, “பொதுவாக நாடகப் படைப்பாளரின் வேலை ஒரு நிகழ்வுக்காகத் தயார்செய்வதற்கு முன்பே தொடங்கிவிடும். ஆனால், இந்த முயற்சி சற்று வித்தியாசமாக இருந்தது. என் குழுவினர் சில சிந்தனைகளுடனும் ஆய்வு செய்தும் வந்திருந்தனர். இசை, பாடல், நடனம், படைக்கப்பட்ட உணவு இவை அனைத்தையும் இணைத்து விவரிப்பது எனது குறிக்கோளாக இருந்தது,” என்று பகிர்ந்தார்.
படைப்பவர்களுடன் இணைந்து பார்வையாளர்களும் இந்தக் கலைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்றார் திருமதி ஐஸ்வர்யா.
மேலும், அவர்கள் தங்கள் தட்டில் பரிமாறப்பட்ட உணவில் என்ன உணர்வுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்குப் பதில் தேடுகிறார்கள்.
பரதநாட்டியத்திலும் அரங்க நிகழ்ச்சிகளிலும் அனுபவம் கொண்ட திருமதி ஐஸ்வர்யாவிற்கு கதை சொல்லுதலின்போது கூறிய கவிதைகள் அனைத்தையும் தாமாக எழுத அந்தப் பங்களிப்பு அனுபவங்கள் உதவியுள்ளன.
அமைப்பும் ஒருங்கிணைப்பும்
“மேற்கத்திய நாடக நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் காணப்படும் இந்த உணவுடன் கூடிய அரங்க நிகழ்ச்சியை நமது மரபில் இதுதான் முதல்முறையாக நான் காண்கிறேன்,” என்று சுயதீன கலை மேலாளர், படைப்புத் தயாரிப்பாளர் மற்றும் பரதநாட்டியக் கலைஞரான திருமதி பானுபிரியா பொன்னராசு, 35, பகிர்ந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக ஒத்த சிந்தனையுள்ள கலைஞர்களை ஒருங்கிணைக்கத் தேசிய கலைகள் மன்றத்தின்கீழ் சமர்ப்பித்தல் மற்றும் பங்களிப்பு மானியமும் நுழைவுச்சீட்டு விற்பனைக்குப் பயன்பட்ட எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையும் பேருதவியாக இருந்துள்ளது. நிகழ்ச்சி அமைப்பாளர் மட்டுமல்லாது இந்த நிகழ்வின் கலை இயக்குநராகவும் திருமதி பானுபிரியா பங்காற்றினார்.
“கடந்த நான்கு மாதங்களாகக் கடின உழைப்புடன் இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் தயாரானோம். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தோம். பார்வையாளர் விவரக்குறிப்பு என்பது முக்கியம். பார்வையாளர்களில் பலர் கலைஞர்களாகவும் கலை, உணவு விரும்பிகளாகவும் இருந்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அர்ப்பணம் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஶ்ரீ கிரண் ராகவன், 50 “பொடி அண்ட் பொரியல் உணவகம் சிங்கப்பூரின் உள்ளூர் கலை சமூகத்திற்கு ஒரு நல்ல தளத்தை அமைத்துத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘ஈட் அட் மை கிச்சன்’ உணவகத்துடன் நல்ல நட்பு இருந்ததால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்க முடிந்தது,” என்றார். பழைய கதைகளைப் புதிதாக உருவாக்கினால் இளைய தலைமுறையினரிடம் அதனைக் கொண்டு செல்லலாம் என்று அவர் பகிர்ந்தார்.
பார்வையாளர்களின் கருத்துகள்
இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற இனத்தோரும் இந்தப் பல புலன்கள் சார்ந்த அனுபவத்தில் கலந்துகொண்டனர்.
பார்வையாளர்கள் தங்கள் கலைக்கு அங்கீகாரம் தருவது கலைஞர்களாகிய தங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது என்றார் திரு அபிணாவ்.
சிங்கப்பூரில் இந்த நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘ரசா’ அனுபவம் தங்களை வியப்பில் ஆழ்த்தியதாகப் பல பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி ஐம்புலன்களுக்கும் விருந்தளித்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

