அடாது மழை பெய்தாலும் விடாது இன்னிசை வழங்குவதில் முனைப்பாயிருந்தது கலா உற்சவத்தில் இலவச இசை நிகழ்ச்சியைப் படைத்த ‘ரி-இன்கார்னேஷன்’ (Re-inKarnation) இசைக்குழு.
அந்த இசை மழையில் நனைய, வெள்ளிக்கிழமை இரவு (நவம்பர் 28), எஸ்பிளனேடின் டிபிஎஸ் அறக்கட்டளை வெளிப்புற அரங்கை நோக்கி 650 பேர் குடையேந்தி நடைபோட்டனர்.
மழைநீர் தரையில் தேங்கவில்லை. ஆனால், பார்வையாளர்கள் நெஞ்சில் நிறைந்தன இசைமழையின் இனிய கானங்கள்.
மூன்றரை மணி நேரம். மூன்று அங்கங்கள். மொத்தம் 72 பாடல்கள். இறுதிப் பாடல்வரை உற்சாகத்துடன் தொய்வின்றிப் படைத்தனர் இசைக் கலைஞர்கள் 17 பேர். சளைக்காமல் கரவொலியுடன் ஆர்ப்பரித்தனர் பார்வையாளர்கள்.
மொழிக்கும் அப்பாற்பட்டது இசை என்பதைப் பறைசாற்றும் வகையில் பல்லினத்தவரும் நிகழ்ச்சியைக் காணக் கூடினர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.
வெளிப்புற அரங்கில் படைக்கப்பட்டாலும் பாடகர்கள் கணீர் குரலில் பாடியதால் அரங்கெங்கும் இசை இனிதாக ஒலித்தது.
‘பியார் பிரேமா காதல்’ எனும் காதல் பாடல் அங்கத்துடன் இரவு 7 மணிக்குத் தொடங்கி, பின்பு இன்னிசைப் பாடல்களை இரவு 8.15 மணியிலிருந்து வழங்கி, ‘பவர்ஹவுஸ்’, ‘அதிரடி’ போன்ற அதிரடிப் பாடல்களுடன் இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
‘ஒ ரே பியா’ எனும் இந்திப் பாடல், உதித் நாராயணன் குரலில் ‘கொக்கர கொக்கரக்கோ’ போன்ற தமிழ்ப் பாடல்களோடு ஆங்கிலப் பாடலும் பாடி மகிழ்வித்தார் கெளஷிக்.
தொடர்புடைய செய்திகள்
‘சகியே ஓ சகியே’ எனும் மலையாளப் பாடல் உட்பட பல பாடல்களைப் பாடிக் கவர்ந்தார் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 4’ பாடகர் கணேஷ் வெங்கடராமன்.
தர்ஷனா மகாதேவன், லாவண்யா சம்பத், மீனாட்சி போன்ற பாடகர்களுடன் நந்திதா, ஷிவானி, தனுஷ் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் துணைப் பாடகர்களாக நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.
பியானோவில் ஜோர்டன், தோல்கருவிகளில் குமரன், கணேஷ், ஜோஏஷ், வயலினில் வெங்கடேஷ், கிட்டாரில் சுரேஷ், தாஷினி, புல்லாங்குழலில் ராகா ஆகியோர் நேரடி இசை வழங்கிச் சிறப்புசேர்த்தனர்.
‘கண்கள் ஏதோ’ பாடலுக்காக ‘ஃபிலிம்ஃபேர் தலைசிறந்த பின்னணிப் பாடகி’ விருதை வென்ற கார்த்திகா வைத்தியநாதன் சிறப்பு வருகையளித்து ‘சுத்த தன்யாசி’ ராகத்திலான பாடல் அங்கத்தை வழிநடத்தினார்.
அக்ஷரா கெளஷிக் எனும் 5 வயதுச் சிறுமி ஒரு பாடலைப் பாடி அசத்தினார்.
‘2 ஸ்டேட்ஸ்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு அட்ரின் மனோகர், அமிர்தா இருவரும் நகைச்சுவையாக நிகழ்ச்சியைப் படைத்தனர்.
பாடகர்களின் குரல்வளத்தையும் தாண்டி, இசைநிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாக மாற்றியது நேரடி இசைதான் என்றனர் நிகழ்ச்சியைக் காணவந்த சந்திரகலா - கல்யாணசுந்தரம் இணையர், இளைய கலைஞர்கள் அருமையாகப் படைத்ததாகவும் பாராட்டினர்.
இந்திய இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் எஸ்பிளனேடில் வார இறுதிகளில் இன்னும் அதிகம் நடைபெற வேண்டும் என்றும் லிட்டில் இந்தியாவிலும் ஊடகங்களிலும் இன்னும் பிரபலப்படுத்தலாம் என்றும் கூறினார் ‘கலா உற்சவம்’ நிகழ்ச்சிகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருகையளிக்கும் ஸ்ரீகாந்த். “வெளிப்புற அரங்கிற்குக் கூரைவேய்ந்த நடைபாதையையும் அமைக்கலாம்,” என அவர் பரிந்துரைத்தார்.
“இவ்வாறு கலைஞர்களுடன் சேர்ந்து பாடும் பார்வையாளர் கூட்டம் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது,” எனப் பாராட்டினார் கணேஷ்.
“இத்தனை பாடல்களையும் நினைவு வைத்திருப்பது சவாலாக இருந்தது,” என்றார் ‘டிரம்ஸ்’ வாசித்த ஜோயேஷ்.
ஜோர்டன் (பியானோ), குமரன், கணேஷ் மற்றும் ஜோயேஷ் (தோல்கருவிகள்), வெங்கடேஷ் (வயலின்), சுரேஷ் மற்றும் தாஷினி (கித்தார்), ராகா (புல்லாங்குழல்) ஆகியோர் நேரடி இசை வழங்கிச் சிறப்பித்தனர்.
அடுத்து, 2026 ஏப்ரல் 18 அன்று தமிழ்மொழி விழாவில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக அரங்கில் ‘ரி-இன்கார்னேஷன்’ குழு மேடையேறும். நிகழ்ச்சிக்கு www.tinyurl.com/PPV2026 எனும் இணையப்பக்கம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

