சிங்கப்பூர் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, உதவி தேவைப்படுவோருக்கு நூல்களைக் கொண்டுசேர்க்கவும் செய்கிறது தேசிய நூலக வாரியத்தின் ‘நூல்களுக்காக வாசி’ (Read for Books) நூல் நன்கொடை இயக்கம்.
ஜூலை மாதம் முழுவதும் நடைபெறும் இந்த இயக்கத்தின் ஓர் அங்கமாக, இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 27ல், நூல் வாசிப்பு நிகழ்ச்சி தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.
தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து லிஷா, லிஷா இலக்கிய மன்றம், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஆகியவை 2016 முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.
கிட்டத்தட்ட 100 பேர் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு நூல்கள் வாசித்தனர்.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவர் வைஷ்ணவி ஹரிஹரன், ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் ஜெய்யுலபுதீன் ஜஸீர் ஆகியோர் தாங்கள் படித்த நூல்கள் பற்றிய விமர்சனங்களைப் பகிர்ந்தனர்.
“தொழில்நுட்பத்தினால் மனிதனின் வாழ்வில் ஏற்படும் பின்விளைவுகளை இக்கதைகள் உணர்த்தின. நான் வீட்டில் என் தந்தையுடன் நூல் தொடர்பான பல கலந்துரையாடல்களில் ஈடுபடுவேன்,” என்றார் வைஷ்ணவி. “நா.பார்த்தசாரதியின் ‘சமுதாய வீதி’ நூலை ஆய்வுசெய்தேன். எங்கள் பாடதிட்டத்தில் இந்நூல் அறிமுகமானது,” என்றார் ஜஸீர்.
கவிஞர் தமிழ் பரணி, தாம் வாசிப்பு பற்றி எழுதிய ‘சாலப் படி’, ‘நூலகம்’ என்ற கவிதைகள் இரண்டையும் வாசித்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை அளித்த சிறப்பு விருந்தினர் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், “தமிழ் பேசும் குடும்பத்தில் நான் வளரவில்லை. அக்காலத்தில் தமிழ் நூலைப் படித்துத்தான் தமிழ் கற்றேன். இன்றோ, என் மகளை நூல் படிக்க வைக்க மிகவும் சிரமப்படுகிறேன். சிறுவர்கள் கருவிகளிலும் யூடியூப் தளங்களிலுமே தம் நேரத்தைச் செலவழிக்கின்றனர். அதனால் இத்தகைய நூல் வாசிப்பு நிகழ்ச்சி மிக நல்ல முயற்சி,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“வாசிப்பவர் தன் வாழ்நாளில் ஆயிரம் முறை வாழ்கிறார். வாசிக்காதவர் தன் வாழ்நாளில் ஒருமுறைதான் வாழ்கிறார்,” என்ற கூற்றை நினைவுபடுத்தி வரவேற்புரையாற்றினார் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மனோகர் சந்திரன்.
இலக்கியச் சிந்தனை அமைப்பிடமிருந்து பரிசுபெற்ற ‘கல்மண்டபம்’ நாவலையும், ‘கால தானம்’ எனும் சிறுகதைத் தொகுப்பு, “கண்டதைச் சொல்கிறேன்’, ‘ரெளத்திரம் பழகு’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த குற்றவியல், குடும்ப நல வழக்கறிஞர் க.சுமதி.
“சிங்கப்பூர் சிறப்பு வாய்ந்த இடம். சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் சிறப்பாக எழுதக்கூடியவர்கள். எழுத்தாளர் மாலனின் ஃபேஸ்புக் பதிவுகள்மூலம் நான் சிங்கப்பூர் எழுத்தாளர்கள்பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன்,” என்றார் திருவாட்டி சுமதி.
வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்
சிறுவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தால் அவர்களின் எதிர்கால பண்புகளையும் நிர்ணயிக்கமுடியும் என்று திருவாட்டி சுமதி கூறினார்.
“எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும் நாம் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் வெவ்வேறு பாடங்களைப் புகட்டலாம்,” எனப் பாட்டி வடை சுட்ட கதையை அவர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
திராட்சையை எட்டமுடியாத நரியை உதாரணமாகச் சுட்டி, “கிட்டாதாயின் வெட்டென மற” என நரிக்குப் புரிந்த பாடம் இன்றைய இளையர்களின் மனதில் நன்றாகப் பதிந்திருந்தால் காதல் நிறைவேறாதபோது சொந்த உயிரை மாய்க்கும் சம்பவங்கள் நிகழாது என்றார் சுமதி.
“பெரும்பாலும் வாழ்வில் சவால்களை எதிர்கொண்டு வெல்லவிரும்புகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது வெற்றி தோல்வியைப் பற்றியதன்று; வாழ்க்கை என்பது ஆகப் பெரிய அனுபவம் என்பதை உணர்த்துவது நூல்கள்தான்,” என்று அவர் கூறினார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் மணி விழாவில் பேசியதை நினைவுகூர்ந்த சுமதி, “எளிய மக்களின் மனதைச் சினிமா எப்படி முடங்கவைத்தது என்பதை ஜெயகாந்தன் தம் எழுத்தில் காட்டினார். எழுத்து எதையும் எதிர்த்து நிற்கும் வலிமையைக் கொண்டது; எப்படி மனம் விட்டுப் போகும் தருணத்திலும் பேனா நிமிர்ந்து நிற்கும் என்பதை ஜெயகாந்தனின் வார்த்தைகளிலிருந்து கற்றேன்,” என்றார் சுமதி.
ஜெயகாந்தனின் கதை ஒன்றில், காதலைச் சொல்லக் கதாநாயகர் தயங்கும்போது கதாநாயகி, அவர் தொடர்ந்து அஞ்சுவதைக் கண்டு வெறுப்படைந்து, “இதுவும் ஊருக்குச் சென்று அம்மா காட்டிய பெண்ணைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு திருமண அழைப்பிதழை வந்து நீட்டும்,” என்கிறார்.
“செறிவான வார்த்தைகள்மூலம் கண்ணியமான முறையில் ஒரு பெண்ணிடமோ ஆணிடமோ உன் காதலைச் சொல்லும் வலிமை இல்லையென்றால், அங்கு நிராகரிப்பு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லாவிட்டால் நீ அஃறிணையைச் சார்ந்த பொருளே எனபதை இதைவிட ஒரு வாசகருக்கு ஓர் ஆசிரியர் எப்படித் தெளிவாகச் சொல்லமுடியும்?” என்றார் திருவாட்டி சுமதி.
ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் நூலைக் காட்சி ஊடகமாக மாற்றத் திரைக்கதையே எழுதத் தேவையில்லை; அவர்களின் எழுத்தே திரைக்கதையைப் போன்றது என்றும் அவர் கூறினார்.
காட்சி ஊடகத்துக்கும் வாசிப்புக்கும் உள்ள வேறுபாடு
நூல் வாசிக்கும்போது வாசிப்பு என்ற எல்லையைத் தாண்டிப் படைப்பாளராகவே மாறுவதாகவும் திருவாட்டி சுமதி கூறுகிறார். “ஆனால், காட்சி ஊடகம் பார்க்கும்போது நான் பார்வையாளராகவே இருக்கிறேன்; அல்லது மற்றொருவரின் படைப்பை விமர்சிப்பவராக மாறுகிறேனே தவிர, படைப்பாளராக அல்லன்,” என்று அவர் கூறினார்.
விண்ணை முட்டக்கூடிய அளவுக்கு நம் கற்பனைக்குச் செறிவூட்டுவது நல்ல வாசிப்புப் பழக்கம் என்பதையும் திருவாட்டி சுமதி வலியுறுத்தினார்.
சிறுவர்களை நூலகங்களுக்கு அழைத்துவந்து அவர்கள் விரும்பிய நூல்களைப் படிக்கத் தளம் அமைக்கும் ‘நூல்களுக்காக வாசி’ திட்டத்தையும் அவர் பாராட்டினார்.
‘நூல்களுக்காக வாசி’ திட்டம் மூலம், ஜூலை மாதம் முழுவதும் பத்து பேர் வாசிக்கும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு நூல் உதவி தேவைப்படுவோருக்கு நன்கொடையளிக்கப்படும்.