இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் செஞ்சிங்கங்கள் (Red Lions), சிங்கப்பூர்க் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவினர் இணைந்து ‘ஜம்ப் ஆஃப் யூனிட்டி‘ எனப்படும் வான்குடை மூலம் ஒருங்கிணைந்து குதிக்கும் அங்கத்தைப் படைக்கவுள்ளனர்.
இதற்குமுன் 2018ல் முதன்முறையாக முக்குளிப்பாளர்களும் செஞ்சிங்கங்களும் ஒருங்கிணைந்து குதித்தனர். அப்போது இரு குழுக்களும் மரினா பேயில் ஒரே இடத்தில் தரையிறங்கினர்.
ஆனால் இம்முறை செஞ்சிங்கங்கள் பாடாங்கிலும் முக்குளிப்பாளர்கள் மரினா பேயிலும் தரையிறங்கவுள்ளனர்.
இரு குழுக்களும் தரையிறங்கியதும் சிங்கப்பூரின் ஒற்றுமையைக் காட்டும் வகையில் ஒன்றாக வணக்கம் செலுத்துவர் (combined salute).
முதலில் முக்குளிப்பாளர்கள் எழுவர் H225M மீடியம்-லிஃப்ட் ஹெலிகாப்டரில் 6,000 அடி உயரத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிப்பர். அவர்கள் மூன்று நொடிகளில் 1,000 அடி உயரத்தைக் கடப்பர். பின்பு வான்குடை திறந்ததும் 300 நொடிகளில் மரினா பேயில் தரையிறங்குவர்.
அதைத் தொடர்ந்து C-130 ஹெர்குலஸ் விமானத்திலிருந்து செஞ்சிங்கங்கள் குழுவாக வெளியேறி 10,000 அடி உயரத்தில் வட்ட வடிவில் காட்சியளிப்பர்.
7,000 அடி உயரத்தில் அவர்கள் ‘குண்டு வெடிப்பு’ (Bomb burst) அங்கத்தைப் படைப்பர். கிட்டத்தட்ட 4,000 அடி உயரத்தில் வான்குடைகளைத் திறந்து, பின்னர் பாடாங்கில் தரையிறங்குவர்.
வான்குடையுடன் குதிப்பதற்கு மூன்று வார அடிப்படை ஆகாயப் பயிற்சி, ஒரு மாத ராணுவ ஃபிரீஃபால் (Freefall) பயிற்சியை வீரர்கள் மேற்கொண்டனர். மெய்நிகர் தொழில்நுட்பமும் அவர்களுக்குக் கைகொடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
H225M மீடியம்-லிஃப்ட் ஹெலிகாப்டரின் விமான நிபுணர் (Aircrew Specialist) ஸ்டாஃப் சார்ஜண்ட் கிரிஸ்டியன் ஜெரமையா ஜோசஃப், 29, முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறார். முக்குளிப்பாளர்கள் பாதுகாப்பாகக் குதிப்பதற்கு இவருடைய பணி முக்கியம்.
“முக்குளிப்பாளர்களுக்கும் விமானிக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை. அதனால் நான் விமானி கூறுவதை உடனுக்குடன் சைகைகளாக முக்குளிப்பாளர்களுக்குக் காட்ட வேண்டும்,” என்றார் அவர்.