குதிகால் வாதம் (Plantar Fasciitis) என்பது ஒருவரின் குதிகால் பகுதியில் உள்ள தசைநார் (plantar fascia) வீங்கும்போது உண்டாகும் உடல்நிலைக் கோளாறாகும். இதனால் குதிகாலில் அதிகமான வலி ஏற்படும்.
குதிகால் எலும்பையும் கால் விரல்களையும் இந்தத் தசைநார் இணைக்கிறது. கால் வளைவை வலுப்படுத்தும் வகையிலும் இது செயல்படுகிறது. நீண்ட நேரம் நடப்பது அல்லது நிற்பதால் குதிகால் வாதம் உண்டாகும்.
ஆனால், சுறுசுறுப்புடன் செயல்படுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். குறிப்பாக மெதுவோட்டத்தில் ஈடுபடுவோரை இது பாதிக்கலாம். இவற்றுக்கு அப்பாற்பட்டு தட்டையான பாதம், உயரமான வளைந்த பாதம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள், கால் வகைக்கு ஏற்ற காலணிகள் அணியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கும் இந்தப் பிரச்சினை வரக்கூடும்.
குதிகால் வாதத்தால் ஏற்படும் குதிகால் வலிக்கான அறிகுறி, பொதுவாகக் காலையில் எழுந்தவுடன் முதல் அடி எடுத்துவைக்கக்கூட இயலாத வகையில் பொறுக்க முடியாத வலி இருக்கும்.
மேலும், உடற்பயிற்சிக்குப் பிறகும், நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகு எழுந்திருக்கும் போதும் வலி கடுமையாக இருக்கும். உடலியக்க சிகிச்சையின்கீழ் (Physiotherapy) எளிய சிகிச்சை முறைகள் மூலம் இந்த வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தனிப்பட்ட முறையிலும் ஒருவர் இதனால் பாதிக்கப்படும்போது எளிய உடற்பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடிக்கொள்ளலாம். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் தசைகளை ‘வார்ம் அப்’ பயிற்சிகள் மூலம் வலுப்படுத்த வேண்டும்.
கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமர்ந்து, பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உட்பக்கமாய் மடக்கி விரிக்கலாம்.
அடுத்து, பாதங்களின் முன்பகுதியைத் தாளம் போடுவதுபோல இருபது முறை உயர்த்தி இறக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் முன்பாதத்தைத் தரையில் ஊன்றியபடி குதிகால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கலாம்.
அன்றாடம் இந்த மூன்று பயிற்சிகளையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நேரம் கிடைத்தால் ஐஸ் கட்டிகளை வைத்து வலி ஏற்படும் இடத்தில் மெதுவாக உருவுவதால் நிவாரணம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

